டிஜிட்டல் திண்ணை: தினகரன் அமைதிக்குக் காரணம் என்ன?

politics

மொபைல் டேட்டா ஆன் லைனில் இருந்தது. வாட்ஸ் அப் ஆன் லைனில் வந்தது.

“உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளுக்குப் பின் அமமுக பொதுச் செயலாளர் தினகரன் சற்றே வித்தியாசமான முறையில் அமைதி காத்து வருகிறார். நிர்வாகிகளுடன் தொடர்ந்து சந்திப்பு, ட்விட்டரில் கருத்துகள், அமமுகவின் தலைமை நிலைய செய்தி வெளியீடுகள் எல்லாம் வந்துகொண்டிருந்தாலும் தினகரன் தன் இயல்புக்கு மாறாக அமைதியாக இருப்பதாகவே அரசியல் வட்டாரங்களில் கருதப்படுகிறது.

ஜனவரி 23ஆம் தேதி, சேலம் மத்திய மாவட்டச் செயலாளர் வெங்கடாசலத்தின் மகனுடைய திடீர் மரணத்தையடுத்து துக்கம் விசாரிப்பதற்காக சேலம் சென்றார் தினகரன். அப்போது பத்திரிகையாளர்களை சந்திக்கையிலே, ‘சசிகலா சிறையிலிருந்து எப்போது வெளியே வருவார் என்ற கேள்விக்கு பதிலளித்தார் தினகரன். ‘சசிகலாவை வெளியே கொண்டுவருவதற்கான சட்டரீதியான முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறோம். உரிய தருணத்தில் வெளியே வருவார். அவர் வெளியே வந்தால் பழனிசாமி கம்பெனியைத்தான் ஆதரிப்பார் என்ற தகவலை பழனிச்சாமி கம்பெனி பரப்பி வருகிறது. அவர்கள் அமமுகவைக் கண்டு பயப்படுகிறார்கள். சசிகலாவும் நானும் என்றைக்கும் இந்த துரோகிகளோடு இணைவதற்கு வாய்ப்பில்லை. அமமுகவிற்கு சுயநலத்தோடு வந்தவர்களும் பதவி அதிகாரத்திற்காக வந்தவர்களும் போய்விட்டார்கள். ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்கள் எங்களோடு இருக்கிறார்கள். வரும் சட்டமன்ற தேர்தலில் மீண்டும் அம்மாவின் உண்மையான ஆட்சியை அமைப்போம்’ என்றும் குறிப்பிட்டார் தினகரன்.

23 ஆம் தேதி இரவு சூளகிரியில் ஓய்வு எடுத்தவர், மறுநாள் ஜனவரி 24ஆம் தேதி தை அமாவாசை அன்று பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறைக்குச் சென்றார் . முன்னதாக விவேக் குடும்பத்தினரும், மறைந்த நடராஜன் சகோதரர் குடும்பத்தினரும் சசிகலாவை சந்தித்துவிட்டு வந்ததும் மதியம் 12.30 க்கு தினகரன் சிறையில் சசிகலாவை சந்தித்தார். சுமார் ஒரு மணிநேரம் பிறகு சிறையில் இருந்த தினகரன், வெளியே வந்து வழக்கமாய் பத்திரிகையாளர்களைச் சந்திப்பவர் நேற்று ஒதுங்கிச் சென்று, காரில் ஏறிப் புறப்பட்டுவிட்டார் சசிகலாவின் சந்திப்புக்குப் பின் தன்னுடன் வந்தவர்களிடம் கூட எதையும் ஷேர் செய்துகொள்ளாமல் மௌனமாக இருந்ததாகச் சொல்கிறார்கள்.

தினகரன் -சசிகலா சந்திப்பில் என்ன நடந்திருக்கிறது என்று விசாரித்தபோது முக்கிய தகவல்கள் கிடைத்தன. சிறையில் இருந்தாலும் தமிழக அரசியலில் என்ன நடக்கிறது என்பதை புட்டுப் புட்டு வைத்துள்ளார் சசிகலா.

‘ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கை வைத்தும் மட்டுமல்ல, பல விதங்களில் அதிமுகவை பாஜக மிரட்டிவருகிறது, எடப்பாடி இதற்கு உடன்படவில்லையென்றால் ரஜினியை மையமாக வைத்து, தேமுதிக, பாமகவோடு அமமுகவையும் சேர்த்து ஒரு அணி அமைக்கும் திட்டமும் பாஜகவிடம் இருக்கிறது. இதைத் தெரிந்துதான் அதிமுக அமைச்சர்கள் ஒவ்வொருவராக பாஜகவுக்கு எதிரான கருத்துக்களை வீசிவருகிறார்கள்.

இதையெல்லாம் சமீபத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தூதுவராக அவருக்கு வேண்டிய தொழிலதிபர் சசிகலாவை சந்தித்துக் கூறியுள்ளார். மேலும் அவர் சசிகலா விடுதலையான பின்னர் அதிமுகவில் இணையலாம் என்றும் பாஜகவை எதிர்ப்பதற்கு எடப்பாடி தயாராகிவிட்டார் என்றும் அதற்கு ஒரே வழி ஓபிஎஸ்சை ஒதுக்கி வைத்துவிட்டு சசிகலாவோடு கை கோர்ப்பதுதான் எடப்பாடியின் திட்டம் என்றும் சொல்லியிருக்கிறார்.

இதையெல்லாம் தினகரனிடம் எடுத்துச் சொல்லிய சசிகலா, சட்டமன்றத் தேர்தல் நெருங்க நெருங்கதான் நமக்கு முக்கியத்துவம் அதிகரிக்கும். இப்போது அமமுகவை வைத்து பாஜக ஒரு கணக்குப் போடுகிறது, எடப்பாடியும் ஒரு கணக்குப் போடுகிறார். எனவே இப்போது அதிமுக பற்றியோ, பாஜக பற்றியோ எந்த ஒரு கடுமையான விமர்சனமும் வேண்டாம் என்று தினகரனிடம் சொல்லியிருக்கிறார் சசிகலா. இதில் சிலவற்றில் தினகரனுக்கு உடன்பாடு என்றாலும் சிலதில் அவருக்கு உடன்பாடு இல்லை. ஆனாலும் சசிகலாவின் உத்தரவின் பேரில்தான் அமைதிகாக்கிறார் என்கிறார்கள்”என்ற மெசேஜுக்கு சென்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *