E
படிப்படியாகத் தான் நிதிநிலைமையை சீரமைக்க முடியும் என்று முன்னாள் ஒன்றிய நிதியமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி பிறந்தநாளையொட்டி இன்று(ஆகஸ்ட் 20) சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் ப.சிதம்பரம். அப்போது காரைக்குடி சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.மாங்குடி, காரைக்குடி நகர காங்கிரஸ் தலைவர் பாண்டி மெய்யப்பன் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் தொண்டர்கள் பலரும் உடன் இருந்தனர்.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த ப.சிதம்பரம், “தமிழ்நாடு அரசின் நிதி நிலைமை எந்தளவுக்கு சீர் கெட்டிருக்கிறது என்பதை வெள்ளை அறிக்கை மூலமாக தமிழ்நாடு நிதியமைச்சரும், அரசும் தெளிவாக விளக்கம் அளித்திருந்தார்கள்.
இந்த நிலைமையை படிப்படியான நடவடிக்கைகளை எடுத்து 5 ஆண்டுகளில் சரிசெய்ய முடியும். அதனின் முதல்படியாகதான் நிதிநிலை அறிக்கை அமைந்துள்ளது. அதில் திமுகவின் சமுதாயப் பார்வையும், சமுதாய நோக்கும் அழுத்தமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. அதை பாராட்டுகிறேன்.
தேர்தல் வாக்குறுதிகளை படிப்படியாக நிறைவேற்றுவோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார். அதில் சில வாக்குறுதிகளை நிறைவேற்றியிருக்கிறார்கள். படிப்படியாகதான் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியும். இதை ஏற்கனவே என்னுடைய ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறேன்” என்று கூறினார்.
**-வினிதா**
�,