எட்டுவழிச் சாலையில் இரட்டை நிலையா? ஸ்டாலினுக்கு அன்புமணி கேள்வி!

politics

சேலம் -சென்னை எட்டு வழிச் சாலை தமிழ்நாட்டு அரசியல் அரங்கத்தில் மீண்டும் விவாதங்களை எழுப்பியுள்ளது.

மின்னம்பலத்தில் நேற்று (ஜனவரி 22) மாலை 7 மணி பதிப்பில், [மீண்டும் எட்டு வழிச் சாலை: காய் நகர்த்தும் கட்கரி](https://www.minnambalam.com/politics/2022/01/22/35/salem-chennai-eight-way-katkari-mkstalin-againg-farmers-discussion) என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம். அந்த செய்தியில் ஒன்றிய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் கட்கரி, தமிழகத்தில் சாலைத் திட்டங்கள் நிறுத்திவைக்கப்பட்டிருப்பது பற்றி பேசியிருப்பதைக் குறிப்பிட்டுவிட்டு… தர்மபுரி மாவட்ட நிலம் எடுப்பு வருவாய் அலுவலர் முகுந்தன், அம்மாவட்ட விவசாயிகள் சங்க தலைவர் சந்திரகுமாருக்கு அனுப்பிய கடிதத்தையும் வெளியிட்டிருந்தோம்.

இந்த நிலையில் மின்னம்பலம் செய்தியில் வெளியிடப்பட்ட கடிதத்தை அடிப்படையாக வைத்து இன்று (ஜனவரி23) பாமக இளைஞரணிச் செயலாளரும், எம்பியுமான அன்புமணி தமிழக அரசுக்கு சில கேள்விகளை எழுப்பியுள்ளார்.

அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை – சேலம் இடையே 8 வழி பசுமைச்சாலை அமைப்பதற்காக நிலங்களை கையகப்படுத்துவது குறித்து, தருமபுரி மாவட்ட நிலம் எடுப்பு மாவட்ட வருவாய் அலுவலர் அளித்துள்ள விளக்கம் உழவர்கள் மத்தியில் நிலவும் அச்சத்தைப் போக்குவதற்கு பதிலாக அச்சத்தை அதிகரித்திருக்கிறது. இந்த விஷயத்தில் தமிழக அரசின் நிலைப்பாட்டை வெளிப்படையாக அறிவிப்பதன் மூலமே இந்த அச்சத்தைப் போக்க முடியும்.

சென்னை படப்பையிலிருந்து சேலத்திற்கு எட்டு வழிச் சாலை அமைக்கும் திட்டம் எந்த நேரமும் மீண்டும் தொடங்கப்படும்; அதற்காக தங்களின் நிலங்கள் மீண்டும் கையகப்படுத்தப்படும் என்ற ஐயம் அச்சாலை அமையவுள்ள 6 மாவட்டங்களின் உழவர்களிடம் ஏற்பட்டிருக்கிறது. தருமபுரியில் கடந்த டிசம்பர் 15, 16 ஆகிய தேதிகளில் நடத்தப்பட்ட உழவர்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டத்தில், இது தொடர்பான தங்களின் ஐயத்தை வெளிப்படுத்திய உழவர்கள், 8 வழிச்சாலை திட்டத்திற்காக நிலங்களை கையகப்படுத்தக்கூடாது என்று கோரி மனு அளித்தனர். அவர்களுக்கு பதில் அளித்து தருமபுரி மாவட்ட நிலம் எடுப்பு வருவாய் அலுவலர் வ.முகுந்தன் அனுப்பியுள்ள கடிதம் தான் புதிய ஐயங்களையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

‘தர்மபுரி மாவடத்தில் பாப்பிரெட்டிபட்டி, அரூர் வட்டங்களில் எட்டு வழிச் சாலைக்காக நிலம் எடுக்கும் பணி தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி சுற்று சூழல் அனுமதி பெற்ற பிறகு அரசு வழிகாட்டுதல்படி நில எடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது’ என்றும் அந்தக் கடிதத்தில் கூறப்பட்டிருப்பது தான் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார் அன்புமணி.

.மேலும் அவர், “உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி சுற்று சூழல் அனுமதி பெற்ற பிறகு அரசு வழிகாட்டுதல்படி நில எடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது’ என்று நிலம் எடுப்புக்கான தருமபுரி மாவட்ட வருவாய் அலுவலர் கூறியிருப்பதன் மூலம், தங்களின் நிலம் மீண்டும் பறிக்கப்பட்டு விடுமோ? என்ற அச்சம் உழவர்களிடம் ஏற்பட்டிருக்கிறது. மற்றொருபுறம் 8 வழிச்சாலைத் திட்டத்தால் ஏற்படும் சுற்றுச்சூழல் தாக்க அறிக்கையை மத்திய அரசு தயாரித்திருக்கிறது. சமூக, பொருளாதார தாக்க அறிக்கை தயாரிப்பதற்காக மத்திய அரசால் நியமிக்கப்பட்டுள்ள கேரள அரசின் கிட்கோ நிறுவனம், சம்பந்தப்பட்ட மாவட்டங்களில் கருத்துக் கேட்புக் கூட்டங்களை நடத்த தமிழக அரசிடம் அனுமதி கோரியிருப்பதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. இவை 6 மாவட்ட உழவர்களின் அச்சத்தை அதிகரித்துள்ளன என்பதில் சந்தேகம் இல்லை.

தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு கடந்த ஆண்டு ஜூன் மாதம் பிரதமரை சந்தித்த மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டில் 8 வழிச்சாலை திட்டத்தை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தினார். அது தமிழ்நாட்டு அரசின் நிலை என்றால்,‘உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி சுற்று சூழல் அனுமதி பெற்ற பிறகு அரசு வழிகாட்டுதல்படி நில எடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது’ என்று தருமபுரி மாவட்ட வருவாய் அலுவலர் கூறியிருக்கத் தேவையில்லை. மாறாக, 8 வழிச்சாலைக்காக நிலம் கையகப்படுத்தப் படாது; அதனால் உழவர்கள் எந்த வகையிலும் அச்சப்படத் தேவையில்லை என்று உறுதியாக கூறியிருக்கலாம்.

சென்னை – சேலம் 8 வழிச்சாலை திட்டம் தொடர்பாக தமிழ்நாட்டு உழவர்களிடம் நிலவும் அச்சத்தை தமிழக அரசு போக்க வேண்டும். அதற்காக தமிழ்நாட்டில் சென்னை – சேலம் 8 வழிச்சாலைத் திட்டத்தை அனுமதிக்க மாட்டோம் என்று அரசு வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். மாறாக 8 வழிச்சாலை திட்டம் திணிக்கப்பட்டால் அதை எதிர்த்து அரசியல் மற்றும் சட்டப்போராட்டங்களை பா.ம.க. முன்னெடுக்கும்” என்று எச்சரித்துள்ளார்.

**-வேந்தன்**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *