இந்தியாவில் இரண்டு பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் தடுப்பூசி செலுத்தும் பணியினை தீவிரப்படுத்த வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு ஒன்றிய சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.
ஒமிக்ரான் பாதிப்புள்ள நாடுகளின் வரிசையில் தற்போது இந்தியாவும் இணைந்துள்ளது. தென்னாப்பிரிக்காவில் இருந்து பெங்களூரு வந்த இருவருக்கு ஒமிக்ரான் பாதிப்பு இருப்பதை நேற்று ஒன்றிய அரசு உறுதி செய்தது. இதையடுத்து, கர்நாடக மாநிலத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. புதிய கட்டுப்பாடுகளை விதிக்கவும் அரசு ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. கர்நாடக தமிழ்நாடு எல்லையில் தீவிர கண்காணிப்பு நடைபெறுகிறது.
இந்நிலையில் ஒன்றிய சுகாதாரத் துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் இன்று(டிசம்பர் 3) அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளார்.
அதில்,”வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளை அந்தந்த மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் சர்வதேச பயண வழிகாட்டுதலின்படி தீவிர சோதனைக்குட்படுத்த வேண்டும். மேம்படுத்தப்பட்ட சோதனை மட்டுமே வைரஸை கண்டறிவதற்கான ஒரு உத்தி. அதனால் ஐசிஎம்ஆர் மற்றும் ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்படி பரிசோதனைகள் செய்ய வேண்டும். கொரோனா தொற்று பாசிட்டிவ் ஆனவர்களுடன் தொடர்பில் இருந்த அனைவரையும் கண்டறிந்து சோதனைக்குட்படுத்துதல் மிக மிக அவசியம். இது கொரோனா தொற்று பரவுவதலை தடுப்பதில் முக்கிய பங்காக இருக்கும். குறிப்பாக அனைவரும் விழிப்புணர்வுடன் இருப்பது மிக முக்கியம்.
மேலும் கொரோனா தொற்று உறுதி செய்யப்படுபவர்களின் மாதிரிகளை உடனடியாக மரபணு பரிசோதனைக்கு அனுப்பப்படுவதை உறுதி செய்ய ஒரு குழுவை அமைக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அந்த கடிதத்தில்,” இந்தியாவில் உள்ள மக்களில் பெரும்பாலோனர் முதல் அலை மற்றும் டெல்டா வகை வைரஸால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள். இதனால் அவர்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகியிருக்கும். அதேசமயம் நாட்டில் தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. அதனால், ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு இந்தியாவில் பெருமளவில் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்பு இருக்காது. இதற்கு ஆதாரங்கள் இல்லையென்றாலும், தடுப்பூசி திறன், செல்லுலார் இம்யூனிட்டி ஆகியவற்றால் தீவிர பாதிப்பை தவிர்க்கலாம். அதனால் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். அந்தந்த மாநில அரசுகள் தடுப்பூசி செலுத்தும் பணியினை மேலும் தீவிரப்படுத்த வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
**பெங்களூரு**
இந்தியாவில் கர்நாடாகாவில்தான் முதல் முறையாக இரண்டு பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர்களுடன் தொடர்பில் இருந்த 500க்கு பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் ஐந்து பேருக்கு மட்டுமே கொரோனா பாசிட்டிவ் என முடிவு வந்தது. தற்போது அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில், தென்னாப்பிரிக்காவில் இருந்து பெங்களூர் வந்த 10 பேர் காணவில்லை என்றும், அவர்களை தேடி வருவதாகவும் கர்நாடக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
**ஆந்திரா**
கடந்த 10 நாட்களில் தென்னாப்பிரிக்கா உள்பட பல்வேறு வெளிநாடுகளிலிருந்து 60 பேர் ஆந்திர மாநிலத்திற்கு விமானம் மூலம் வந்துள்ளனர். அவர்களில் 30 பேர் கண்காணிப்பில் உள்ளனர். மற்ற 30 பேரை காணவில்லை. இதில் 9 பேர் ஆப்பிரிக்கா மற்றும் 2 பேர் தென் ஆப்பிரிக்காவை சேர்ந்தவர்கள். இவர்களின் இருப்பிடங்களை கண்டறிய உதவுமாறு விசாகபட்டினம் மாவட்ட நிர்வாகம் கோரிக்கை விடுத்துள்ளது. இவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது.
**கேரளா**
நவம்பர் 21ஆம் தேதி இங்கிலாந்தில் இருந்து கேரளாவுக்கு வந்த 46 வயதான மருத்துவருக்கு நவம்பர் 28ஆம் தேதி கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவரின் மாதிரிகள் மரபணு சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அவருக்கு எந்த அறிகுறியும் இல்லை. கோழிக்கோடு வந்த பிறகு பல்வேறு மாவட்டங்களுக்கு அவர் பயணம் செய்ததால், அவருடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறியும் பணி நடைபெற்று வருகிறது என்று கேரள அரசு தெரிவித்துள்ளது.
**-வினிதா**
�,”