மோடி சொல்லிக் கொடுத்த ஊழல் ஒழிப்பு இதுதானா? வானதிக்கு அறப்போர் கேள்வி!

politics

முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மீதான லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை ஆகஸ்டு 10 ஆம் தேதி நடைபெற்றது. அதிமுகவின் கூட்டணிக் கட்சி என்ற வகையில் பாஜகவின் பொதுச் செயலாளர் கே.டி.ராகவன் இந்த ரெய்டை பழிவாங்கும் போக்கு என்று கண்டித்தார். ஆனால் பாஜகவின் தேசிய மகளிரணித் தலைவரும், கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் ஒரு படி மேலே போய் வேலுமணிக்கு ஆதரவாக தனியாக அறிக்கையே வெளியிட்டார். அதன் அடிப்படையில் வானதி மீது அறப்போர் இயக்கம் கடும் விமர்சனத்தை முன் வைத்துள்ளது.

அரசியல் ரீதியாக வேலுமணிக்கு ஆதரவு தெரிவிப்பதைத் தாண்டி வானதி சீனிவாசன், “தேர்தலில் கொங்குமண்டலத்தில் ஒரு தொகுதி கூட திமுக பெற முடியாத சூழல் ஏற்பட்டதற்கு வேலுமணிதான் காரணம் என்று கருதிய ஸ்டாலின், அவர் மீது கொண்டிருந்த வன்மத்தின் காரணமாக, வேலுமணி மீது புகார் ஒன்று ஒருவரால் ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டு, அவருடைய வீட்டில் ரெய்டு என்பது அரசியல் காழ்ப்புணர்ச்சியால் வரக் கூடிய நடவடிக்கையாகும்” என்று தெரிவித்திருந்தார்.

வானதியின் இந்த புகாருக்கு அறப்போர் இயக்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. வேலுமணி உள்ளாட்சித் துறை அமைச்சராக இருக்கும்போதில் இருந்தே அவர் மீது லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் கொடுத்தது அறப்போர் இயக்கம்.அதன் அடிப்படையில்தான் இப்போது வேலுமணி மீது எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து அறப்போர் இயக்கம் இன்று (ஆகஸ்டு 12) வெளியிட்டுள்ள செய்தியில், “முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு ஆதரவாக வானதி சீனிவாசன் கொடுத்துள்ள அறிக்கை ஊழலை ஊக்குவிக்கும் வண்ணம் அமைந்துள்ளது.

அறப்போர் இயக்கம் ஆதாரங்களுடன் 2018 செப்டம்பர் மாதம் லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் கொடுத்தது. நடவடிக்கை இல்லை என்பதால் 2018 டிசம்பர் மாதம் அந்த புகார் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. அதன் அடிப்படையில்தான் தற்பொழுது ரெய்டு நடத்தப்பட்டு வேலுமணி மற்றும் அவரது கூட்டாளிகள் மீது எஃப்.ஐ.ஆர். பதியப்பட்டுள்ளது.

ஆனால் வானதி சீனிவாசன் யாரோ ஏற்பாடு செய்து யாரோ புகார் கொடுத்ததாக அறிக்கை கொடுத்து இருக்கிறார். அறப்போர் இயக்கம் கொடுத்த புகாரின் அடிப்படையில் தான் இந்த எஃப்.ஐ.ஆர். போடப்பட்டுள்ளது என்று அனைத்து செய்திகளிலும் வந்த பிறகும் இவர் யாரை திருப்திப்படுத்த இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்?

முகாந்திரம் இருப்பதாக நீதிமன்றமே சொன்ன பிறகு வானதி சீனிவாசன் எந்த அடிப்படையில் இந்த புகாரை கொச்சைப்படுத்தி பேசுகிறார்? இது தான் பிரதமர் மோடி உங்களுக்கு சொல்லிக்கொடுத்த ஊழல் ஒழிப்பா? அப்படி இந்த வழக்கின் அடிப்படை ஆதாரங்கள் பொய் என்று உங்களுக்கு தெரிந்தால் வாங்களேன் இது குறித்து ஒரு விவாதம் செய்யலாம். நாங்க ரெடி நீங்க ரெடியா வானதி சீனிவாசன்?” என்று கேள்விகளை எழுப்பியுள்ளனர்.

**-வேந்தன்**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *