மதுரை, வேளாங்கண்ணி, நாகூர்: விரைவில் ரஜினி விசிட்

politics

தமிழகத்திலுள்ள மூன்று மதங்களின் புனிதத் தலங்களுக்கு விரைவில் பயணம் மேற்கொள்கிறார் நடிகர் ரஜினிகாந்த்.

2017ஆம் ஆண்டின் இறுதியில் சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் தனது ரசிகர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த், அரசியலுக்கு வரப்போவதாகவும், சட்டமன்றத் தேர்தலில் தனிக்கட்சி ஆரம்பித்து தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளிலும் போட்டியிடப்போவதாகவும் தெரிவித்தார். மேலும், “சாதி, மதச் சார்பற்ற ஒரு ஆன்மீக அரசியலைக் கொண்டு வர வேண்டும். அதுதான் என்னுடைய நோக்கம்” என்று பேசியிருந்தார்.

ஆன்மிக அரசியல் என்னும் ரஜினியின் கூற்று பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தியது. சாதி, மதச்சார்பற்ற ஆன்மீக அரசியல் என ஒன்று இல்லை எனவும், ரஜினிகாந்த் இந்து ஆன்மிக அரசியலை மட்டுமே முன்னெடுப்பார் என்றும், அவர் பாஜகவுக்கு ஆதரவானவர் என்றும் மற்ற அரசியல் கட்சிகள் அவர் மீது விமர்சனங்களை முன்வைத்தன.

ரஜினி அப்படி சொல்லி இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் இதுவரை தன்னுடைய அரசியல் கட்சியை ஆரம்பிக்கவில்லை. இந்த நிலையில் மார்ச் 5ஆம் தேதி ரஜினி மக்கள் மன்றத்தின் மாவட்டச் செயலாளர்களை சந்தித்து அரசியல் கட்சி தொடர்பாக ஆலோசனை நடத்தினார். அதுதொடர்பாக லீலா பேலஸில் செய்தியாளர்களை சந்தித்து விளக்கிய ரஜினிகாந்த், அரசியல் மாற்றத்திற்கான 3 திட்டங்களை முன்வைத்திருப்பதாகக் கூறினார். ஆட்சியைப் பிடித்தால் தான் முதல்வராக மாட்டேன் எனவும், மக்களிடம் எழுச்சி ஏற்பட்ட பிறகு அரசியலுக்கு வருகிறேன் என்றும் கூறினார்.

இந்த நிலையில் விரைவில் ரஜினிகாந்த் தனது ஆன்மீக அரசியல் சுற்றுப் பயணத்தை துவங்க இருக்கிறார். இதுதொடர்பாக ரஜினி மக்கள் மன்ற வட்டாரங்களில் விசாரித்தோம்…

“ரஜினிகாந்த் ஆன்மீக அரசியல் என்று சொன்னதும் அவரை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சிக்க ஆரம்பித்தன. ஆனாலும், ரஜினிகாந்த் தன்னுடைய நோக்கத்தில் உறுதியாக இருந்தார். சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடமே உள்ளதால் விரைவில் தலைவர், அரசியல் கட்சியை ஆரம்பிக்க உள்ளார். அதற்கு முன்பாக தமிழகத்தின் சில இடங்களுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.

முதலில் மதுரை செல்லும் ரஜினிகாந்த், மீனாட்சி அம்மன் கோயிலில் தரிசனம் செய்தபிறகு அங்குள்ள மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் கலந்துரையாடி மக்களின் மனநிலை எவ்வாறு இருக்கிறது என்பதை அறிந்துகொள்கிறார். அடுத்த கிறிஸ்தவர்களின் புனிதத் தலமான வேளாங்கண்ணி மாதா கோயிலுக்கு செல்கிறார். பின்னர் இந்தியாவிலுள்ள இஸ்லாமியர்களின் மிக முக்கியமான புனிதத் தலம் என்று அழைக்கப்படும் நாகூர் தர்காவிற்கும் சென்று வழிபாடு நடத்துகிறார்.

ஒவ்வொரு பகுதியிலும் உள்ள மக்கள் மன்றத்தினரையும் சந்தித்து கட்சிப் பணிகள் தொடர்பாக உரையாடுகிறார். நாகூர் பயணத்தின்போது கும்பகோணம் அருகேயுள்ள ஒரு கிராமத்தில் இந்து மத சாமியார் ஒருவரை சந்தித்து ஆசிபெறவும் திட்டமிட்டுள்ளார்.

இதற்கான ஆலோசனைகள் நடைபெற்று வருகிறது. விரைவில் இதுதொடர்பான அறிவிப்பை எதிர்பார்க்கலாம். தன்னுடைய பயணம் மூலம் தான் இந்து ஆன்மீக அரசியலை மட்டுமே முன்னெடுப்பேன் என்ற எதிர்க்கட்சிகளின் விமர்சனத்தை உடைத்து தான் அனைத்து மதத்திற்கும் பொதுவானவன் என்பதை சொல்ல விழைகிறார்” என்கிறார்கள்.

**வணங்காமுடி**�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *