தலைமை நீதிபதி முன்பு முதல்வர் வைத்த கோரிக்கைகள்!

politics

சென்னையில் ரூ.20.24 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள 9 அடுக்குகள் கொண்ட நீதிமன்றக் கட்டடம் மற்றும் ரூ.22.20 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள நீதிமன்றக் கட்டடங்கள் அடிக்கல் நாட்டுதல் மற்றும் திறப்பு விழா நடைபெற்றது. இதில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா மற்றும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் பங்கேற்றனர்.

இந்நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் கூறுகையில், “உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பொறுப்பேற்று ஓர் ஆண்டு இன்றோடு நிறைவு பெறக்கூடிய வகையில், உங்களோடு சேர்ந்து நானும் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவருக்கு இன்று ஓர் ஆண்டு முடிவடைகிறது. எனக்கு அடுத்த மாதம் 7ஆம் தேதி ஓர் ஆண்டு முடிவடையவிருக்கிறது.

சட்டத்தின் ஆட்சியை, சமூகநீதியின் ஆட்சியை, நீதிநெறி முறைகளையும், விதிமுறைகளையும் முறையாகப் பின்பற்றும் ஆட்சியை வழங்க வேண்டும் என்ற உறுதியோடு, தமிழ்நாட்டில் நல்லாட்சியை வழங்கிக் கொண்டிருக்கிறோம். அத்தகைய வழிமுறையே எந்நாளும் எங்களை வழிநடத்தும் என்பதை நான் இந்த நேரத்தில் தெரிவித்து கொள்கிறேன். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தமிழ்நாட்டிற்கு வந்திருப்பது, பெருமைக்குரிய வகையில் அமைந்திருக்கிறது. அதுவும் அவரோடு நானும் இந்த விழாவில் பங்கேற்பதில் நான் உள்ளபடியே பெருமையாகக் கருதுகிறேன்.

சட்டத்தின் குரலாக மட்டுமல்ல, மக்களின் குரலாகவும் பலநேரங்களில் ஒலிக்கக் கூடியவராக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். ஆந்திர மாநிலத்தில் பொன்னாவரம் என்ற கிராமத்தில் ஒரு எளிய விவசாயக் குடும்பத்தில் பிறந்து இன்றைய நாள் இந்தியாவின் தலைமை நீதிபதியாக அவர் உயர்ந்து நிற்கக் காரணம், இந்திய மக்களின் மனசாட்சியின் குரலாக அவர் இருக்கின்ற காரணம் தான். அதுதான் அவரது தீர்ப்புகளிலும், தலைமை நீதிபதி என்ற முறையில் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் அவர் ஆற்றக்கூடிய உரைகளிலும் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது” என்று புகழாரம் சூட்டினார்.

மேலும் தலைமை நீதிபதி முன்பு மூன்று கோரிக்கைகளை முதல்வர் ஸ்டாலின் முன்வைத்தார்.
உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் சமூக நீதியும் கருத்தில் கொள்ளப்படவேண்டும். தமிழ் மொழி உயர் நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக ஆக்கப்பட வேண்டும். பொதுமக்கள் மற்றும் வழக்கறிஞர்களின் நலனைக் கருத்தில் கொண்டு உச்ச நீதிமன்றத்தின் ஒரு கிளையை சென்னையில் அமைக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா பேசுகையில், “சென்னை வழக்கறிஞர்கள் நீதித்துறையை வலுப்படுத்தும் பணிகளில் முக்கிய பங்காற்றியுள்ளனர். தமிழர்கள் மொழி அடையாளம் மிக்கவர்கள். மொழிக்காக முதலில் குரல் கொடுப்பவர்கள். நீதிமன்றங்கள் தங்களது உரிமைகளைக் காக்கும் என்று மக்கள் நம்புகின்றனர். மக்களின் நம்பிக்கையை நீதிமன்றங்கள் காப்பாற்றும். மிகவும் பின் தங்கிய பகுதிகளிலிருந்து வரும் நீதிபதிகளால் தான் மக்களின் பிரச்சினையைச் சரியாகப் புரிந்துகொள்ள முடியும். அப்போது தான் சரியான தீர்வு காண முடியும். எனவே, நீதிபதிகளாக வர மொழி, இனம், பகுதி ஆகியவை தடையாக இருக்கக்கூடாது” என்று கூறினார்.

**-பிரியா**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *