கேசிஆர்-ஸ்டாலின் சந்திப்பு: தேசிய அரசியலில் எதிரொலிக்குமா?

Published On:

| By Balaji

தெலங்கானா முதல்வர் கே. சந்திரசேகர் ராவ், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சென்னையிலுள்ள அவரது இல்லத்தில் நேற்று (டிசம்பர் 14) தனிப்பட்ட முறையில் குடும்பத்தினரோடு சந்தித்தார். தமிழகத்தில் ஸ்ரீரங்கம் கோவிலுக்கு சென்றுவந்த சந்திரசேகர ராவ் மரியாதை நிமித்தமாக தமிழக முதல்வரை சந்தித்ததாக சொல்லப்படுகிறது. தனது மனைவி மகனோடு ஸ்டாலின் வீட்டுக்கு வந்த கேசிஆரை முதல்வரின் மனைவி துர்கா ஸ்டாலின், மகன் உதயநிதி ஆகியோரும் வரவேற்று பேசிக் கொண்டிருந்தனர்.

அரை மணி நேரம் நடைபெற்ற இந்த சந்திப்பு தேசிய அரசியலில் கவனம் பெற்றுள்ளது.

ஏற்கனவே மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி ஒவ்வொரு மாநிலமாக சென்று பாஜகவுக்கு எதிரானவர்களை சந்தித்து வருகிற 2024 மக்களவைத் தேர்தலுக்காக படை திரட்டி வருகிறார். சமீபத்தில் மகாராஷ்டிர முன்னாள் முதல்வரும் தேசிய வாத காங்கிரஸ் தலைவருமான சரத் பவாரை சந்தித்த மம்தா அப்போது காங்கிரஸுக்கு எதிரான சில கருத்துகளையும் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

2019 ஆம் ஆண்டில் தேசிய அளவில் காங்கிரஸ் அல்லாத மற்றும் பாஜக அல்லாத அரசாங்கத்தை அமைக்க திமுகவின் ஆதரவைப் பெற கேசிஆர் மேற்கொண்ட முயற்சி பலனளிக்கவில்லை. ஏனெனில் திமுக அப்போது காங்கிரஸ் கூட்டணியோடு தேர்தலை சந்தித்தது. 2019 இல் பிரதமர் வேட்பாளராக ராகுல்காந்தியை மற்ற எவரையும் விட முந்திக் கொண்டு முன்மொழிந்தார் திமுக தலைவர் ஸ்டாலின்.

இப்போதும் காங்கிரஸ் கூட்டணியில் திமுக நீடித்துக் கொண்டிருந்தாலும் தனது முயற்சியை கேசிஆரும் விடவில்லை என்கிறார்கள். இம்முறை, பிஜேபிக்கு எதிரான அனைத்து அரசியல் சக்திகளையும் ஒரே குடையின் கீழ் கொண்டு வரவும், பிஜேபிக்கு எதிராக ஒருங்கிணைந்த தேர்தல் போராட்டத்தை நடத்தவும் ராவ் தீவிரம் காட்டுவதாகக் கூறப்படுவதால், இந்த சந்திப்பு அதிக முக்கியத்துவம் பெறுகிறது.

தெலுங்கானா ராஷ்டிர சமிதியின் (டிஆர்எஸ்) கோட்டையாக கருதப்பட்ட தெலுங்கானாவில் பிஜேபியின் அரசியல் பிரவேசத்தால் சற்றே யோசிக்கும் கேசிஆர், இம்முறை காங்கிரஸை கூட்டணியில் இருந்து விலக்கி வைப்பதில் இன்னும் ஆர்வமாக உள்ளாரா இல்லையா என்பதும் முக்கியக் கேள்வியாக இருக்கிறது. ஒருவேளை அவர் தேசிய அளவில் காங்கிரஸுடன் கைகோர்ப்பதைப் பொருட்படுத்தவில்லை என்றாலும், அவரது மாநிலத்தில் டிஆர்எஸ் மற்றும் காங்கிரஸ் ஒன்றை ஒன்று எதிர்த்தே அரசியல் செய்து வருகின்றன. .

இந்தப் பின்னணியில் இரு முதல்வர்கள் மட்டுமல்ல தென்னிந்தியாவின் இரு முக்கிய கட்சிகளின் தலைவர்களின் இந்த சந்திப்பு தேசிய அளவில் கவனிக்கப்படுகிறது.

**-வேந்தன்**.

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share