மாதாகோவில் இடிப்பு: மீண்டும் கட்ட 5 லட்சம் வழங்கிய திமுக எம்.எல்.ஏ.

politics

கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சங்கராபுரம் வடக்கு ஒன்றியம் பொருவளூர் மற்றும் சவேரியார் பாளையம் கிறிஸ்துவர்கள் நிறைந்த பகுதி. இந்த அடிப்படையில் பொரூவளூர் கிராமத்தில் ஒரு சிறு மலை மீது ஒரு மாதா கோவிலை கட்டியிருக்கிறார்கள். அந்த கோயில் புறம்போக்கு இடத்தில் கட்டப்பட்டிருக்கிறது என்று புகார்கள் சென்றதையடுத்து கள்ளக்குறிச்சி கலெக்டர் ஸ்ரீதர் உத்தரவின் பேரில், காவல்துறையினரும் வருவாய் துறையினரும் இணைந்து ஆகஸ்டு 2 ஆம் தேதி காலை அந்த மாதா கோவிலை இடித்துத் தள்ளினர்.

அன்று மாலை குடியரசுத் தலைவர் சட்டமன்றத்தில் கலைஞரின் படத்தைத் திறந்துவைக்கும் நிகழ்வுக்காக சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் எல்லாம் சென்னையில் இருந்தனர். இந்த நிலையில்தான் கலெக்டர் உத்தரவின் பேரில் வருவாய் துறையினர் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியாக அந்த கிறிஸ்துவ கோயிலை இடித்தனர்.

ஏற்கனவே இதுகுறித்து கலெக்டரிடம் ரிஷிவந்தியம் திமுக எம்.எல்.ஏ. வசந்தம் கார்த்திகேயன், சிறுபான்மை நலத்துறை அமைச்சர் மஸ்தான் ஆகியோர் பேசியும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது என்றும் இதுகுறித்து கள்ளக்குறிச்சி மாவட்ட மக்கள் பிரதிநிதிகளான திமுக எம்.எல்.ஏ.க்கள் கலெக்டர் ஸ்ரீதர் மீது முதல்வரிடம் புகார் தெரிவித்திருக்கிறார்கள் என்பதையும் [மாதா கோவில் இடிப்பு: முதல்வரிடம் கலெக்டர் மீது திமுக எம்.எல்.ஏ.க்கள் புகார்]( https://www.minnambalam.com/politics/2021/08/02/26/church-demolish-dmk-mlas-complaint-to-chief-minister-about-kallakurichi-collector-sridhar-ias) என்ற தலைப்பில் ஆகஸ்டு 2 ஆம் தேதியே செய்தியாக வெளியிட்டிருந்தோம்.

உள்ளாட்சித் தேர்தல் நெருங்கும் நிலையில் சுமார் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிறிஸ்துவ வாக்குகளைக் கொண்ட அந்த பகுதியில் இப்படி ஒரு சம்பவம் நடந்தது திமுக நிர்வாகிகளை அதிர்ச்சியிலும் ஆச்சரியத்திலும் ஆழ்த்தியது. இந்த நிலையில் ஆகஸ்டு 4 ஆம் தேதி கள்ளக்குறிச்சி மாவட்டப் பொறுப்பாளர்களான ரிஷிவந்தியம் எம்.எல்.ஏ. வசந்தம் கார்த்திகேயன், சங்கராபுரம் எம்.எல்.ஏ. உதயசூரியன், உளுந்தூர் பேட்டை எம்.எல்.ஏ.மணிக்கண்ணன் ஆகியோர் திருக்கோவிலூர் டி.எஸ்.பி. கோட்டாட்சியர் சகிதம் சவேரியார் பாளையம் பகுதிக்குச் சென்றனர்.

திமுகவின் மாவட்ட எம்.எல்.ஏ.க்கள் மூவரும் கிறிஸ்துவ மக்களைத் தேடிச் சென்று ஒரு சந்திப்புக்கு ஏற்பாடு செய்தனர்.

அவர்களிடம் பேசிய ரிஷிவந்தியம் எம்.எல்.ஏ. வசந்தம் கார்த்திகேயன், “மக்கள் எங்களை மன்னிக்க வேண்டும். இந்த பிரச்சினையை சுமுகமாகத் தீர்க்க நாங்கள் ஏற்பாடு செய்துகொண்டிருக்கும்போதே அதிகாரிகளின் தவறான வழிகாட்டுதலால் இப்படி ஒரு சம்பவம் நடந்துவிட்டது. இனி இதுபோல நடக்காது. மீண்டும் உங்களுக்காக நாங்கள் கோவிலை கட்டித் தருகிறோம். அதற்காக நான் ஐந்து லட்ச ரூபாய் தருகிறேன்”என்று அறிவித்தார். உடனடியாக அங்கேயே 5 லட்சத்தையும் வழங்கினார் வசந்தம் கார்த்திகேயன். கிறிஸ்துவ மக்களுக்கு கோவில் கட்டுவது தொடர்பான உதவிகளையும் எம்.எல்.ஏ.க்கள் கூட்டாக அளித்தனர்.

முதல்வரிடம் கள்ளக்குறிச்சி கலெக்டர் பற்றி புகார் செய்துவிட்டுத்தான் ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் மாவட்டத்துக்குத் திரும்பியிருக்கிறார்கள். எனவே விரைவில் கள்ளக்குறிச்சி கலெக்டர் மாற்றப்படுவார் என்கிறார்கள் திமுகவினர்.

**-வேந்தன்**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *