]உள்ளே ரெய்டு: வெளியே தக்காளி சாதம்!

Published On:

| By Balaji

அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணியின் வீட்டில் ரெய்டு நடந்தபோது, வெளியே அவரது ஆதரவாளர்களுக்குத் தக்காளி சாதம் விநியோகிக்கப்பட்டது.

முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர், வேலுமணி, சி.விஜயபாஸ்கர், கே.சி.வீரமணி, தமிழ்நாடு கூட்டுறவு வங்கி மாநிலத் தலைவரான இளங்கோவன் ஆகியோரை தொடர்ந்து நேற்று மின்சாரத் துறை முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டில் லஞ்ச ஒழிப்பு சோதனை நடந்தது.

தமிழகத்தில் சென்னை, கரூர், நாமக்கல், சேலம், ஈரோடு மற்றும் கர்நாடகா, ஆந்திரா என ஒரே நாளில் மூன்று மாநிலங்களில் 69 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. [இதில், கணக்கில் வராத 2,16,37,000 ரூபாய், தங்க வெள்ளி நகைகள், முக்கிய ஆவணங்கள் ஆகியவற்றை லஞ்ச ஒழிப்புத் துறை பறிமுதல் செய்தது.](https://minnambalam.com/politics/2021/12/15/35/216-crore-and-documents-seized-from-places-owned-by-admk-Thangamani)

இதனிடையே பள்ளிப்பாளையத்தில் முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டில் நேற்று ரெய்டு நடக்கிறது என தெரிந்ததும், அவரது வீட்டின் முன்பு தங்கமணி ஆதரவாளர்கள் நூற்றுக்கணக்கானோர் குவிந்தனர். பொய் வழக்கு போடும் திமுக அரசை கண்டிக்கிறோம் என அங்கு கூடியிருந்தவர்கள் கோஷம் எழுப்பினர். கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்று போலீஸார் அறிவுறுத்தியும் அவர்கள் கலைந்து செல்லவில்லை.

இதையடுத்து அங்கு முன்னாள் அமைச்சர்களான வேலுமணி, செங்கோட்டையன், கருப்பண்ணன் உள்ளிட்டோரும் வந்ததால் அந்த இடம் இன்னும் பரபரப்பானது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய வேலுமணி, “முதல்வர் ஸ்டாலினை விமர்சித்தவர்கள் மீது பொய் வழக்குப் போடப்படுகிறது. அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக காவல் துறையை ஏவி ரெய்டு நடத்துகின்றனர். இதற்கு முன்பு இருந்தவர்கள் இதுபோன்று காழ்ப்புணர்ச்சியோடு நடந்தது இல்லை. பிரதமரை இப்போது இருக்கிற முதல்வர் போன்று யாரும் விமர்சித்தது கிடையாது. ஆனால், அவர் மீது பழிவாங்கும் நடவடிக்கையை எடுக்கவில்லை. அதிமுக ஆட்சி நீடித்ததற்குத் தங்கமணியும் ஒரு காரணம். அதனால் பழிவாங்கும் நடவடிக்கைக்காக இதுபோன்று செய்கின்றனர்” என்று குறிப்பிட்டார்.

இந்த நிலையில், தங்கமணியின் வீட்டின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு டெம்போ மூலம் தக்காளி சாதம் வழங்கப்பட்டது. அதுபோன்று சேலம் நெடுஞ்சாலை பகுதியில் வசிக்கும் தங்கமணியின் மகன் வீட்டிலும் சோதனை நடந்தபோது வெளியே அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கு மதிய உணவாகத் தக்காளி சாதமும், தயிர் சாதமும் வழங்கப்பட்டது. மாலையில் கீரை போண்டாவும், டீயும் வழங்கப்பட்டது.

இதன்மூலம், இந்த ரெய்டை தங்கமணி கூலாகவே எதிர்கொண்டார் என்று அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த சோதனைக்குக் கண்டனம் தெரிவித்துள்ள அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ், “பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்து மக்களை ஏமாற்றி ஆட்சிக்கட்டிலில் அமர்ந்திருக்கக்கூடிய திமுக அரசு, நாளை (வெள்ளிக்கிழமை) தமிழகம் தழுவிய ஆர்ப்பாட்டத்தை அறிவித்திருக்கிற அதிமுக போர்ப்படை தளபதிகளைப் பார்த்து அஞ்சுவதன் வெளிப்பாடுதான் இந்த லஞ்ச ஒழிப்பு சோதனை.

பேசினால் குண்டர் சட்டம், கருத்து தெரிவித்தால் குண்டர் சட்டம், தீவிரம் காட்டினால் வழக்கு, தன்னுடைய கொள்கையில் உறுதியாக இருந்து கொள்கைப் பிடிப்போடு இருந்தால் லஞ்ச ஒழிப்பு சோதனை என்று பிறவாசல் வழியாகவே பயணம் செய்த திமுக இந்த நிகழ்வையும் புறவாசல் வழியாகக் கையாண்டு கொண்டு இருக்கிறது.

திமுக அரசின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையை சட்டப்படி எதிர்கொள்வோம்” என்று தெரிவித்துள்ளனர்.

**-பிரியா**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share