�
முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர், எஸ்.பி.வேலுமணி, சி.விஜயபாஸ்கர் , கே.சி.வீரமணியை தொடர்ந்து தங்கமணி வீட்டில் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
அதிமுக ஆட்சியில் மின்சாரத் துறை அமைச்சராக இருந்தவர் தங்கமணி. 2016 முதல் 2020 மார்ச் வரை தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்துள்ளதாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தங்கமணி தனது மனைவி சாந்தி மற்றும் மகன் தரணிதரன் ஆகியோரது பெயரிலும் வருமானத்தைவிட அதிகமாக ரூ.4.85 கோடி சொத்து சேர்த்ததாக எப்.ஐ.ஆரில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவரது மகன் 2ஆவது குற்றவாளியாகவும், மனைவி 3ஆவது குற்றவாளியாகவும் சேர்க்கப்பட்டுள்ளனர். முறைகேடாக சேர்த்த பணத்தை பெருமளவை கிரிப்டோகரன்சியில் தங்கமணி முதலீடு செய்துள்ளதாகவும் போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி இன்று காலை முதல் தங்கமணிக்குச் சொந்தமான 69 இடங்களில் சோதனை நடந்து வருகிறது. சென்னையில் 14 இடங்களிலும், நாமக்கல் உள்பட 9 மாவட்டங்களிலும், கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் தங்கமணிக்குத் தொடர்புடைய இடங்களிலும் சோதனை நடந்து வருகிறது.
**-பிரியா**
�,