மூன்றாம் அலை முடிவுக்கு வருகிறதா?: அமைச்சர் மா.சு

politics

ஒமிக்ரான் தொற்று இப்போது விரைவாக குறைந்து வருவதால், மூன்றாம் அலை முடிவுக்கு வந்துள்ளதாகவே எண்ணுவதாக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இன்று(பிப்ரவரி 12) தமிழ்நாடு முழுவதும் 22வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், சென்னை அரசு ராஜீவ் காந்தி பொது மருத்துவமனையில் நடைபெற்று வரும் தடுப்பூசி முகாமை இன்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தனர்.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், “தமிழ்நாட்டில் இதுவரை 9 கோடியே 75 லட்சத்திற்கும் அதிகமானோர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். தற்போது வரை 21 மெகா தடுப்பூசி முகாம்கள் நடந்துள்ளது. இந்த நிலையில் 22வது மெகா தடுப்பூசி முகாம் தமிழகம் முழுவதும் 35 ஆயிரம் இடங்களில் இன்று நடைபெறுகிறது. வழக்கமாக 50 ஆயிரம் இடங்களில் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படும். இம்முகாம்களில் பணியாற்றிடும் பணியாளர்கள் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பணிகளிலும் ஈடுபட்டுள்ளதால் 35 ஆயிரம் இடங்களில் மட்டுமே தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படுகிறது. சென்னையில் 1600 இடங்களில் நடைபெற்ற தடுப்பூசி முகாம்கள் இன்று 500 இடங்களில் மட்டுமே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. முதல் தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களில் 70.42 சதவிகிதம் பேர் இரண்டாவது தவணையை செலுத்திக்கொண்டுள்ளனர். 15-18 வயதினர்களில் 80.90% பேர்தடுப்பூசி செலுத்தியுள்ளனர். இதுவரை பூஸ்டர் தடுப்பூசி 5 லட்சத்து 52 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நாள் ஒன்றுக்கு 10 லட்சத்துக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், பிப்ரவரி 19ஆம் தேதி நகர்புற உள்ளாட்சித் தேர்தல் நடப்பதால், 23வது தடுப்பூசி முகாம் ரத்து செய்யப்படுகிறது” என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், “எந்தளவு ஒமிக்ரான் தொற்று வேகமாக பரவியதோ, அந்தளவு தொற்றின் பரவல் குறைந்து வருகிறது. தற்போது கொரோனா தொற்று குறைந்து வருவதால், மூன்றாம் அலை முடிவுக்கு வந்துள்ளதாகவே எண்ணுகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
**-வினிதா**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *