|மின்னலை விட வேகமானவர் ஸ்டாலின்: ரோஜா பாராட்டு!

Published On:

| By admin

மின்னல் வேகத்தை விட அதிகமானதை இனி ஸ்டாலின் வேகம் என்றே குறிப்பிடலாம் என்று நடிகையும், ஆந்திரா எம்.எல்.ஏ.வுமான ரோஜா தமிழ்நாடு முதல்வரைப் பாராட்டியுள்ளார்.
கடந்த 6ஆம் தேதி ஆந்திரா எம்.எல்.ஏ ரோஜா மற்றும் அவர் கணவர் ஆர்.கே.செல்வமணி ஆகியோர் சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலினைச் சந்தித்துப் பேசினர். அப்போது, பட்டுத் துணியால் நெய்யப்பட்ட முதல்வர் மு.க.ஸ்டாலினின் புகைப்படம் அடங்கிய சால்வையை இருவரும் முதல்வருக்குப் பரிசாக வழங்கினர்.
இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த ரோஜா, “எனது நகரி தொகுதி தமிழக எல்லையில் இருப்பதால், தொகுதி தொடர்பான விஷயங்களை முதல்வரைச் சந்தித்துத் தெரிவித்தோம். அன்பாக வரவேற்றுப் பேசினார். நான் அளித்த மனுவைப் படித்துவிட்டு, விரைவில் உரிய நடவடிக்கை எடுப்பதாக முதல்வர் தெரிவித்தது சந்தோஷமாக இருக்கிறது.
எனது தொகுதியில் உள்ள தமிழ்வழிப் பள்ளி மாணவர்களுக்கு 1 முதல் 10ஆம் வகுப்பு வரை 1,000 தமிழ்ப் பாடப் புத்தகங்கள் தேவைப்படுகின்றன. ஒவ்வொரு வருடமும் இதுதொடர்பாக தமிழக அரசிடம் பேசி புத்தகங்களை வாங்குவோம். இந்த முறை முதல்வர் ஸ்டாலினைச் சந்தித்து இந்தக் கோரிக்கையை வைத்தோம். அவர் உடனடியாகச் செய்வதாக உறுதியளித்தார்.
ஆந்திர எல்லையை ஒட்டியுள்ள தமிழகப் பகுதியில் தேசிய நெடுஞ்சாலை பணிக்கு ஒத்துழைப்பு வழங்க கோரினேன். நெடும்புரம் அரக்கோணம் தேசிய நெடுஞ்சாலை பணிகளை விரைந்து முடிப்பது தொடர்பாக கோரிக்கை வைத்தேன். இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட துறையுடன் பேசி முடிவெடுத்துவிட்டு நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
நகரி, நெல்லூர், சத்தியவேடு, சித்தூர் பகுதிகளில் இருந்து தமிழ் தெரிந்த மக்கள் பலரும் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு வருகின்றனர். அவர்களுக்கு சில நேரம் சிகிச்சை அளிக்க மறுக்கப்படுகிறது. இதுகுறித்து முதல்வரிடம் தெரிவித்தபோது, கொரோனா காலகட்டம் முடிந்ததும், உரிய வசதிகளைச் செய்வதாக முதல்வர் உறுதியளித்தார். முதன்முறையாக முதல்வரைச் சந்தித்தேன். ரொம்ப நாள் பழக்கமான மாதிரி எங்களிடம் பேசினார். சந்தோஷமாக இருக்கிறது.

அதுமட்டுமில்லாமல், என் கணவர் செல்வமணி, தென்னிந்திய நெசவாளர் சங்கத் தலைவராக உள்ளார். விசைத்தறி நெசவாளர்கள் ஆர்டர்கள் இல்லாமல், வேலைகள் இல்லாமல் ரொம்பவும் கஷ்டப்படுகின்றனர். அவர்களுக்காக ஒரு கம்பெனியை நாங்கள் பேசி வெச்சிருக்கோம். அதை ஆந்திராவில் ஏற்கனவே பண்ணிட்டு இருக்கோம். தமிழகத்தில் அதை தொடங்க முயன்று வருகிறோம். முதல்வரிடம் இதுகுறித்து பேசியுள்ளோம்” என்று கூறினார்.
இந்த நிலையில், தன்னுடைய கோரிக்கைக்கு மின்னல் வேகத்தை விட விரைவாக நடவடிக்கை எடுத்த முதல்வர் ஸ்டாலினுக்கு ரோஜா நன்றி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில், “எங்கள் தொகுதியில் மற்றும் சித்தூர் மாவட்டத்தில் வசிக்கிற தமிழர்களின் குழந்தைகளுக்குத் தமிழ்மொழி பாடத் திட்டத்துக்கான 10,000 புத்தகங்கள் இலவசமாக வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தோம். தங்களை கடந்த 6ஆம் தேதி காலை 11 மணி அளவில் சந்தித்து கோரிக்கை விடுத்து, திரும்பி நாங்கள் நகரி வந்து சேர்வதற்குள், “நகரி சட்டமன்ற உறுப்பினர் ஆர்.கே. ரோஜாவின் வேண்டுகோளை ஏற்று தமிழக அரசின் பாடத்திட்டங்களை சித்தூர் மாவட்ட பள்ளிகளுக்கு 2021-22ஆம் ஆண்டின் கல்வி ஆண்டின் 1-10 வகுப்பு வரையிலான ஆண்டு தமிழ்ப் பாட நூல்கள் வகுப்புக்கு தலா 1,000 பிரதிகள் வீதம் இக்கழகத்தின் சென்னை வட்டார அலுவலக மற்றும் அடையாறு கிடங்கில் இலவசமாகப் பாட நூல்களைப் பெற்றுக்கொள்ளும்படி தெரிவித்துக் கொள்கிறது” என்று தங்கள் அரசு உத்தரவு என்னுடைய அலுவலகத்துக்கு வந்து சேர்ந்துவிட்டது.
மின்னல் வேகம் என்பார்கள். ஆனால், அதைவிட வேகமானதை இனி ஸ்டாலின் வேகம் என்றே குறிப்பிடலாம் என்றே சந்தோஷத்தில் பாராட்டத் தோன்றுகிறது. எங்கள் கோரிக்கைகளை ஏற்று சித்தூர் மாவட்டத்தில் வாழ்கிற தமிழ் குழந்தைகளுக்கு இலவசமாக தமிழ்மொழி புத்தகத்தை வழங்கிய தங்களுக்கு ஆந்திரவாழ் தமிழர்கள் சார்பில் இதயம் கனிந்த நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
**-வினிதா**

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share