கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சார்க் நாடுகளின் தலைவர்கள் ஆலோசனை நடத்தினர்.
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் சார்க் உறுப்பு நாடுகளின் தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம் காணொளி காட்சி மூலம் இன்று (மார்ச் 15) நடைபெற்றது.
அதில் ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி, வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, பூடான் பிரதமர் லோதே ஷெரிங், இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ஷே, மாலத்தீவு அதிபர் இப்ராஹிம் முகமது சோலி, நேபாளம் பிரதமர் ஷர்மா ஒளி, பாகிஸ்தான் சுகாதாரத் துறை இணையமைச்சர் ஸாபர் மிஸ்ரா ஆகியோர் கலந்துகொண்டனர். அத்தோடு, சார்க் பேரிடர் தடுப்பு மைய அதிகாரிகளும் கலந்துரையாடினர்.
அப்போது பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “இந்த சிறப்பு ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்ட உங்கள் அனைவருக்கும் நன்றி. கொரோனா வைரஸ் பரவுவதை இந்தியா எதிர்கொள்ளும் விதம் குறித்து உங்களுக்கு சுருக்கமாக பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். ‘தயாராக இரு, பீதியடைய மட்டும் வேண்டாம்’ என்பதுதான் எங்களுக்கு வழிகாட்டும் மந்திரம். இந்தியாவில் கொரோனா தொற்று குறைவாக காணப்பட்டாலும், நாங்கள் விழிப்புடன் இருக்கவேண்டியுள்ளது. இந்தியா வரும் பயணிகளை கடந்த ஜனவரி மாதத்தில் இருந்தே கண்காணித்து வருகிறோம்.
கொரோனா பாதிப்புக்குள்ளான நாடுகளில் சிக்கிய சுமார் 1,400 இந்தியர்களை மீட்டுள்ளோம். எங்கள் மக்களுக்கிடையிலான பிணைப்பு பழமை வாய்ந்தது. எங்கள் சமூகம் ஆழமாக ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளது. எனவே நாம் அனைவரும் ஒன்றாக தயாராகவேண்டும், ஒன்றாக செயல்படவேண்டும், ஒன்றாக வெற்றிபெற வேண்டும்” என்று தெரிவித்தார்.
மேலும், “கொரோனாவை எதிர்கொள்ள சார்க் நாடுகள் ஒன்றிணைந்து தன்னார்வ அடிப்படையில் அவசரகால நிதியை உருவாக்க வேண்டும். அதற்கு முன்னோட்டமாக இந்தியா சார்பில் 10 மில்லியன் டாலர் நிதி வழங்கப்படும். சிறந்த உபகரணங்களுடன் கூடிய மருத்துவக் குழுவை உருவாக்குவோம். தேவைப்பட்டால் இந்திய மருத்துவக் குழுவை அண்டை நாடுகள் பயன்படுத்திக்கொள்ளலாம்.” என்றும் கூறினார்.
இதனைத் தொடர்ந்து மற்ற நாட்டுத் தலைவர்களும், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளைப் பட்டியலிட்டனர்.
**எழில்**�,