மாஸ்க் அணியாவிட்டால் அபராதம், மீண்டும் தடுப்பூசி முகாம்!

politics

கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ள நிலையில் சென்னை ஐஐடியில் 30 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த சூழலில் மாஸ்க் அணியவில்லை என்றால் அபராதம் விதிக்கப்படும் என்று சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார், அதுபோன்று மீண்டும் தடுப்பூசி சிறப்பு முகாம் செயல்படுத்தப்படும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

இந்தியாவில் குறிப்பாக டெல்லி, மும்பை உள்ளிட்ட பகுதிகளில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. தமிழகத்தில் தினசரி பாதிப்பு 25- 30 என்ற எண்ணிக்கையில் பதிவாகி வந்த நிலையில், தற்போது சென்னை ஐஐடியிலேயே 30 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை ஐஐடி மாணவர்களுக்குச் சளி, காய்ச்சல் உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், நேற்றைய நிலவரப்படி 12 பேருக்குத் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில் ஐஐடியில் ஏறத்தாழ 2000 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யும் பணி நடந்து வருகிறது. முதற்கட்டமாக 700 பேருக்கு நடத்தப்பட்ட சோதனையில், 30 பேருக்குப் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து பரிசோதனைகள் நடந்து வரும் நிலையில் இன்று (ஏப்ரல் 22) மீண்டும் சுகாதாரத் துறை செயலாளர் ஐஐடியில் ஆய்வு மேற்கொண்டார்.

இதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தமிழகத்தில் மாஸ்க் அணிவது கட்டாயம் இல்லை என்று நாம் அறிவிக்கவில்லை. மாஸ்க் அணியவில்லை என்றால் அபராதம் விதிப்பதைத் தளர்த்தி மக்களை அறிவுறுத்தி அனுப்பினோம். ஆனால் தமிழ்நாட்டில் பொது இடங்களில் முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.500 அபராதம் விதிக்க வேண்டும் என்ற விதிமுறையைக் கண்டிப்பாக அமல்படுத்த மாவட்ட நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதுபோன்று தொடர்ந்து தடுப்பூசி போடுவதையும் நடைமுறைப்படுத்த வேண்டும். ஐஐடி வளாகத்துக்குப் படிப்புக்காகக் கடந்த இரு வாரங்களாக வெளி மாநிலங்களில் இருந்து வந்துள்ளனர். இவர்களிடம் மரபியல் ரீதியாகச் சோதனை நடத்த மாதிரிகள் எடுத்துள்ளோம். இதன் முடிவு இரண்டு மூன்று வாரத்தில் வந்துவிடும். எனவே யாருக்காவது காய்ச்சல், தொண்டை கரகரப்பு இருந்தால் உடனடியாக பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்” என்று அறிவுறுத்தினார்.

தொடர்ந்து பேசிய அவர், தற்போது மாநிலத்தில் பாதிப்புக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 230ல் இருந்து 256ஆக அதிகரித்துள்ளது. எங்களுடைய அனுமானம் என்னவென்றால் சாட்சுரேஷன் டெஸ்ட் எடுக்கும் போது சில சமயங்களில் பாதிப்பு எண்ணிக்கை 100 வரை எட்டக் கூடும். எவ்வளவு எண்ணிக்கை என்று கவலைப்படுவதை விட என்ன பாதிப்பு இருக்கிறது என்று பார்க்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். நுரையீரல் பாதிப்பு இருக்கிறதா என்றெல்லாம் பார்க்க வேண்டும் எனக் கூறுகின்றனர்.

ஆனால் இதுவரை பாதிக்கப்பட்டவர்களுக்கு மேல்தொண்டை கரகரப்பு உள்ளிட்ட பிரச்சினைகள் தான் இருந்தது” என்று கூறினார்.

நம்முடைய பாதுகாப்பு நம்முடைய கையில் தான் இருக்கிறது என்று அறிவுறுத்திய சுகாதாரத் துறை செயலாளர், ஐஐடியில் இருந்து நாம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். வேலை செய்யும் ஆண்கள், பெண்கள் விடுதிகளில் கவனமாக இருக்க வேண்டும். கூட்ட நெரிசல் உள்ள பகுதிகளில் மாஸ்க் அணிந்து சமூக இடைவெளியைக் கடைப் பிடிக்க வேண்டும். நம் உடலில் பாதிப்பு ஏற்பட்டால், இது வேறு பிரச்சினையாக இருக்கும் என நினைத்து ஊர் சுற்ற வேண்டாம்.
ஐஐடியை பொறுத்தவரை டெஸ்ட் எடுத்தவர்கள் தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளோம்” என்றார்.

சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், “ஐஐடியில் கொரோனா உறுதியானவர்களில் பலர் வடமாநிலங்களிலிருந்து வந்த மாணவர்கள் ஆவர். தமிழகத்தில் வரும் 8-ம் தேதி மீண்டும் மெகா சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்படும். ஒரு லட்சம் இடங்களில் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை தடுப்பூசி முகாம் நடத்தப்படும்” என்று கூறினார்.

**-பிரியா**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *