உச்ச நீதிமன்றத்தில் கொளத்தூர் வழக்கு: ஸ்டாலினுக்கு முட்டுக் கட்டையா?

politics

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் 2011 ஆம் ஆண்டு சென்னை கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். அந்தத் தேர்தலில் அவரை எதிர்த்து அதிமுக வேட்பாளராக போட்டியிட்ட சைதை துரைசாமி தேர்தல் முடிவுக்குப் பின், ஸ்டாலினின் வெற்றியை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்குத் தொடுத்தார். இந்த வழக்கு 2017 ஆம் ஆண்டு தள்ளுபடி செய்யப்பட்டது.

உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து சைதை துரைசாமி உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். இந்நிலையில் கிட்டத்தட்ட இரு வருடங்களாக விசாரணைக்கே வராமல் முடங்கிக் கிடந்த இந்த வழக்கு, வரும் நவம்பர் 3 ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர இருக்கிறது.

நவம்பர் 3 ஆம் தேதி காலை W1 நீதிமன்றத்தில் 87 ஆவது வழக்காக இந்த வழக்கு பட்டியலிடப்பட்டுள்ளது. தலைமை நீதிபதி போப்டே, நீதிபதிகள் ஏ.எஸ்.போபண்ணா, வி.ராமசுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு வருகிறது.

அக்டோபர் 20 ஆம் தேதியே, மின்னம்பலத்தின் [டிஜிட்டல் திண்ணை](https://www.minnambalam.com/politics/2020/10/20/20/kushboo-against-stalin-udhayanithi-annamalai-ips-bjp-dmk)யில் இந்த வழக்கு தூசுதட்டப்படுகிறது என்று செய்தி வெளியிட்டிருந்தோம்.

அச்செய்தியில், “2011ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலினை எதிர்த்து சைதை துரைசாமி போட்டியிட்டார். இந்த தேர்தலில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட ஓட்டுகள் வித்தியாசத்தில் மு.க.ஸ்டாலின் வெற்றி பெற்றார்

ஸ்டாலின் பெற்ற வெற்றி அதிகார துஷ்பிரயோகம் செய்து பெறப்பட்டது என்று கூறி சைதை துரைசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஸ்டாலினுக்கு எதிராக வழக்கு தொடுத்தார். சுமார் ஆறு ஆண்டுகள் நடந்த அந்த வழக்கில் 2017ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றம் ஸ்டாலினுக்கு சாதகமாக தீர்ப்பு அளித்தது. அந்தத் தீர்ப்பு வரும்போது ஸ்டாலின் 2011ஆம் ஆண்டுக்கான சட்டமன்ற உறுப்பினர் பதவிக் காலம் முடிந்து 2016ஆம் ஆண்டு தேர்தலிலும் கொளத்தூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார்.

ஆனபோதும் சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து சைதை துரைசாமி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அந்த வழக்கு மேற்கொண்டு விசாரணைக்கு வராமல் கிடப்பில் இருந்தது. தற்போது இந்த வழக்கை தான் பாஜக மோப்பம் பிடித்துள்ளது.

ஏற்கனவே ஆறு ஆண்டுகள் கழித்து தீர்ப்பு வெளியாகி அதன் பிறகு மேல்முறையீடு செய்து மூன்று ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் வழக்கு தொடுத்த சைதை துரைசாமி, உச்ச நீதிமன்றத்தில் வழக்கை விசாரணைக்குக் கொண்டுவர தன்னால் முடிந்த அளவு முயற்சிகள் எடுத்தார். ஆனால் வழக்கு விசாரணைக்கு வரவில்லை.

திமுக தனது சட்ட லாபியை பயன்படுத்தி இந்த வழக்கை விசாரணைக்கு வராமல் பார்த்துக் கொள்கிறது என ஒரு புகார் சுப்பிரமணியன் சுவாமி வழியாக ஆசிர்வாதம் ஆச்சாரிக்குச் சென்று அவர் மூலமாக அமித் ஷாவைச் சென்றடைந்துள்ளது.

இதையடுத்து அந்த வழக்கை விசாரணைக்குக் கொண்டுவருவதற்கான ஏற்பாடுகளை கவனிக்குமாறு அமித் ஷா தரப்பு உச்ச நீதிமன்றத்தில் சில வழக்கறிஞர்கள் மூலம் காய் நகர்த்தி வருகிறது. இந்த வழக்கால் ஸ்டாலினுக்கு சட்ட ரீதியாக நெருக்கடி எதுவும் இல்லையென்றாலும் 2011 தேர்தல் வெற்றியை சந்தேகத்திற்கிடமாக்கி அவருக்கு அரசியல் ரீதியான நெருக்கடிகளைத் தரமுடியுமா என்று பாஜக முயற்சி செய்து பார்க்கிறது” என்று அந்த செய்தியில் குறிப்பிட்டிருந்தோம்.

இந்தப் பின்னணியில் அந்த வழக்கு வரும் நவம்பர் 3 ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. இறுதி வாதங்கள் இந்த வழக்கில் நேரடியாகவே நடைபெற வேண்டும் என்பதால் உச்ச நீதிமன்றம் என்ன முடிவெடுக்கும் என்பது விரைவில் தெரியவரும். மேலும் இந்த வழக்கு விசாரணைக்கு வரும்போது சைதை துரைசாமி தரப்பில் வழக்கறிஞர்கள் யார் ஆஜராகிறார்கள் என்பதும் சட்ட வட்டாரத்தில் விவாதமாகியுள்ளது.

இதுகுறித்து திமுக தரப்பில் கேட்டால், “பாஜக தமிழகத்தில் தன்னை வளர்க்கும் வேலைகளைச் செய்யாமல் எதிர்க்கட்சிகளை நசுக்கும் வேலைகளையே முக்கிய அஜெண்டாவாக வைத்திருக்கிறது. ஆனால் அரசியல் ரீதியாக இந்த வழக்கால் ஸ்டாலினை எதுவும் செய்ய முடியாது. சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பையே உச்ச நீதிமன்றம் உறுதி செய்யவும் வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன” என்கிறார்கள்.

**-வேந்தன்**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0