�டிஜிட்டல் திண்ணை:கூட்டணிக் கட்சிகளுக்கும் வேட்பாளர் தேர்வு: ஐபேக் அதிரடி!

politics

மொபைல் டேட்டா ஆன் செய்யப்பட்டதும் வாட்ஸ் அப் ஆன் லைனில் வந்தது.

“பொதுவாகவே ஒரு அரசியல் கூட்டணி என்றால் அந்தக் கூட்டணியின் தலைமை வகிக்கும் கட்சி அங்கம் வகிக்கும் கட்சிகளோடு ஆலோசனை நடத்தி கூட்டணிக் கட்சிகளுக்கான தொகுதிகளை ஒதுக்கும். அந்தத் தொகுதிகளில் யாரை நிறுத்துவது என்பதை அந்தந்த கூட்டணிக் கட்சியே முடிவு செய்யும். இதுதான் வழக்கமான அரசியல் நடைமுறை.

ஆனால் இப்போது திமுகவின் கூட்டணியில் ஒரு புதிய அணுகுமுறை புகுத்தப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது திமுகவின் சட்டமன்ற தேர்தல் உத்தி வகுப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கும் பிரசாந்த் கிஷோர், தனது ஐபேக் நிறுவனம் மூலமாக தமிழகம் முழுதும் கட்டம் கட்டமாக ஆய்வுகளை நடத்தி வருகிறார். இந்த ஆய்வில் திமுக மட்டுமல்ல, திமுகவின் கூட்டணிக் கட்சிகள் தொடர்பாகவும் பல தரவுகளை சேகரித்திருக்கிறது அவரது டீம்.

சமீபத்தில் சென்னைக்கு வந்த அவர் சில நாட்கள் தங்கி கூட்டணிக் கட்சிகளுக்கான தொகுதிப் பங்கீடு பற்றி முடிவெடுத்துவிட வேண்டும் என்று தீவிர ஆலோசனையில் ஈடுபட்டார். இந்த வகையில் திமுக கூட்டணிக் கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள் என்றும், எந்தெந்த தொகுதிகள் என்றும் முடிவெடுக்கப்படுகிறது.

இதுமட்டுமல்ல… கூட்டணிக் கட்சிகளிளுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளில் யாரை வேட்பாளராக நிறுத்தினால் வெற்றி வாய்ப்பு அதிகம் என்பதையும் ஐபேக் ஆய்வு செய்து, கூட்டணிக் கட்சிகளுக்கான வேட்பாளர்கள் என்ற ஒரு உத்தேச பட்டியலையும் தயார் செய்து வருகிறது என்பதுதான் இதில் புதுத் தகவல்.

[தொகுதிக்கு ஐந்து பேர் ஐபேக் கொடுத்த திமுக லிஸ்ட்](https://minnambalam.com/politics/2020/07/06/20/dmk-ipac-five-canditate-list-assembly-elections) என்ற தலைப்பில் கடந்த ஜூலை 6ஆம் தேதி ஒரு செய்தியை மின்னம்பலத்தில் வெளியிட்டிருந்தோம்.

அதில், “ ஏப்ரல் 20 ஆம் தேதியில் இருந்து ஒன்றிணைவோம் வா திட்டத்தை திமுக மாசெக்கள், திமுக ஐடி விங் ஆகியோரோடு சேர்ந்து ஒருங்கிணைத்து நடத்தினர் ஐபேக் டீமினர். இந்த மூன்று மாதத்துக்குள் இந்தத் திட்டத்தில் யார் யார் ஆக்டிவ்வாக செயல்படுகிறார்கள், பொதுமக்களோடு யார் அதிக பிணைப்பில் இருக்கிறார்கள், கட்சித் தலைமைக்கு யார் யார் உண்மையாக இருக்கிறார்கள் என்பன போன்ற முக்கியமான பாயின்ட்டுகளை ஒன்றிய அளவில் சேகரித்துவிட்டனர் ஐபேக் குழுவினர். ஒன்றிணைவோம் வா திட்டம் ஒருபக்கம் என்றால், இந்தத் திட்டத்தை வைத்தே திமுக மாசெக்களுக்கும் மாவட்ட நிர்வாகிகளுக்கும் தெரியாமல் தமிழகம் முழுதும் கள ஆய்வு ஒன்றை நடத்தி முடித்திருக்கிறது ஐபேக் டீம்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் ஏற்கனவே தாங்கள் பழகி வரும் நேர்மையான ஊடகத் துறையினர் சமூக ஆர்வலர்களிடம் உரையாடி ஒவ்வொரு மாவட்டத்திலும் பெரும்பான்மையான சாதி, தொகுதி மறு சீரமைப்புக்குப் பின்னான சாதி அடர்த்தியின் நிலை, தற்போதைய நிலையில் மாவட்டத்தின் முக்கிய திமுக பிரமுகர்கள், ஒவ்வொரு தொகுதியிலும் அவர்களுக்கான பின்பலம் போன்ற தகவல்களை புள்ளி விவரங்களோடு சேகரித்து வைத்திருந்தது ஐபேக். இந்நிலையில் கடந்த மூன்று மாதங்களாக ஒன்றிணைவோம் வா திட்டத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் செயல்பட்ட ஐபேக் டீம் மூலம் மாவட்ட திமுகவை புலனாய்வு செய்து ஒரு பட்டியலை தயார் செய்திருக்கிறார்கள். இந்த இரு ஆய்வுகள் மூலமும் இப்போது தொகுதிக்கு ஐந்து பேர் கொண்ட பட்டியல் புதிதாக தயார் செய்யப்பட்டிருக்கிறது. இந்த ஐந்து பேர் பட்டியல் ஐபேக் தலைமை மூலமாக திமுக தலைமையிடம் ஒரு சில நாட்கள் முன்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு மாவட்டத்துக்குமான பட்டியலை தயாரிப்பதற்கு முன் அதிபட்சம் ஆறு மணி நேரம் ஐபேக் குழுவினருக்குள் ஆலோசனை நடந்திருக்கிறது. அந்த ஐந்து பேர் தொடர்ந்து கண்காணிக்கப்படுவார்கள். அதன் முடிவில் அந்த ஐந்து பேரில் மூன்று பேர்களைதான் ஐபேக் வேட்பாளர்கள் என்ற நிலைக்கு பரிந்துரைக்கும். அவர்கள்தான் இறுதிகட்ட வேட்பாளர் பட்டியலில் இடம் பிடிக்கப் போகிறவர்கள்” என்று குறிப்பிட்டிருந்தோம்.

இந்த ஆய்வு தமிழகத்தின் அனைத்து தொகுதிகளுக்கும் நடத்தப்பட்டிருக்கிறது. ஏற்கனவே திமுகவின் கூட்டணிக் கட்சிகள் போட்டியிட்ட தொகுதிகளிலும் இந்த ஆய்வு நடத்தப்பட்டு, அங்கே கூட்டணிக் கட்சிகளில் யாரை வேட்பாளராக நிறுத்தலாம் என்ற பட்டியலும் ஐபேக் குழுவால் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த வகையில் கூட்டணிக் கட்சிகள் சில தொகுதிகளை வற்புறுத்திக் கேட்கும் பட்சத்தில், “இந்தத் தொகுதிக்கு இன்னாரை வேட்பாளராக நிறுத்தினால் அவர் ஜெயிக்கும் வாய்ப்பு உள்ளது” என்றும் ஐபேக் பரிந்துரைக்க வாய்ப்புள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது.

கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளில் எதிரிகள் அதிகம் வெற்றிபெறுகிறார்கள் என்ற நிலைமையை உடைப்பதற்காகத்தான், கூட்டணிக் கட்சிகளிலும் வலுவான வேட்பாளர்கள் யார் என்பதை கண்டறிந்து இவர்களை நிறுத்தினால் கண்டிப்பாக ஜெயிக்க வாய்ப்புள்ளது என்ற பட்டியலை தயாரித்து வருகிறது ஐபேக். கூட்டணிக் கட்சிகளுக்கான உத்தேச வேட்பாளர் முழு பட்டியல் இன்னும் பிகேவின் கைகளுக்கு செல்லவில்லை. அதன் பிறகு அந்தப் பட்டியலும் ஸ்டாலினிடம் ஒப்படைக்கப்படும் என்கிறார்கள் ஐபேக் டீமுக்குள் நடப்பதை அறிந்தவர்கள்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைனுக்கு சென்றது வாட்ஸ் அப்.

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *