சென்னை உயர் நீதிமன்றத்திற்கு கூடுதலாக இரண்டு நீதிபதிகள்!

politics

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு புதிதாக இரண்டு நீதிபதிகளை நியமனம் செய்து குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

வழக்கறிஞர்களான நிடுமோலு மாலா மற்றும் எஸ்.செளந்தர் ஆகியோரை சென்னை உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதிகளாக நியமிக்க கடந்த பிப்ரவரி 16, 2022 அன்று உச்ச நீதிமன்ற கொலிஜியம் பரிந்துரை செய்தது. இந்த பரிந்துரைக்கு குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்தார்.

இந்த நிலையில் இன்று(மார்ச் 24) மத்திய அரசின் சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 224 இன் ஷரத்து (L) மூலம் வழங்கப்பட்ட அதிகாரத்தைப் பயன்படுத்தி, குடியரசுத் தலைவர், மூத்த வழக்கறிஞர்களான நிடுமோலு மாலா மற்றும் எஸ்.சௌந்தர் ஆகியோரை சென்னை உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதிகளாக நியமனம் செய்கிறார். இவர்கள் நீதிபதிகளாக பொறுப்பேற்ற தேதியிலிருந்து இரண்டு வருட காலத்திற்கு பணியாற்றுவார்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

75 நீதிபதிகளைக் கொண்ட சென்னை உயர்நீதிமன்றம் தற்போது தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி உட்பட 59 நீதிபதிகளுடன் செயல்பட்டு வருகிறது. தற்போது கூடுதலாக நியமிக்கப்பட்ட இரண்டு நீதிபதிகளின் நியமனத்தால் நீதிபதிகளின் எண்ணிக்கை 61ஆக உயர்ந்துள்ளது. பெண் நீதிபதிகளின் எண்ணிக்கை 13ஆக உயர்ந்துள்ளது. இதன்மூலம் நீதிபதிகளின் காலியிடங்கள் 14ஆக குறைந்துள்ளது.
**-வினிதா**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.