பேராசிரியர்: மு.க.அழகிரி அஞ்சலி செலுத்தாதது ஏன்?

politics

வயது முதிர்வின் காரணமாக திமுகவின் பொதுச் செயலாளரும், திராவிட இயக்கத்தின் மூத்த தலைவருமான க.அன்பழகன் நேற்று (மார்ச் 7) இரவு 1 மணிக்கு காலமானார். கீழ்ப்பாக்கத்திலுள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த உடலுக்கு துணை முதல்வர் பன்னீர்செல்வம், அமைச்சர் ஜெயக்குமார், அன்புமணி ராமதாஸ் உள்பட பல்வேறு தலைவர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர். நேற்று மாலை அன்பழகன் உடல் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு வேலங்காடு இடுகாட்டில் தகனம் செய்யப்பட்டது.

பேராசிரியர் அன்பழகன் உடலுக்கு கலைஞரின் மகனும், முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க.அழகிரி அஞ்சலி செலுத்துவார் என பலரும் எதிர்பார்த்தார்கள். ஆனால், அஞ்சலி செலுத்தச் செல்லாதது அவரது ஆதரவாளர்கள் மத்தியிலேயே வருத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இதுதொடர்பாக அழகிரி ஆதரவாளர்கள் வட்டாரங்களில் விசாரித்தபோது, “அண்ணன் அழகிரி சிறுவயதாக இருந்தபோது கலைஞரின் இல்லத்துக்கு கட்சி ரீதியான விஷயங்கள் குறித்து விவாதிக்க பேராசிரியர் அன்பழகன் அடிக்கடி போவார். அவரைப் பார்த்ததும் அண்ணன் அழகிரி ஏறிக்கொண்டு விளையாடுவார். பேராசிரியரும் அண்ணனை தூக்கி கொஞ்சிவிட்டுத்தான் செல்வார். பேராசிரியர் மீது அண்ணன் மிகுந்த மரியாதை வைத்திருந்தார்.

ஆனால், பேராசிரியரின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தச் செல்லாதது ஏன் என்று தெரியவில்லை. உடல்நிலை சரியில்லாததால் செல்லவில்லை என்கிறார்கள். அப்படியென்றால் தான் போகாமல் குடும்பத்திலிருந்து யாரையாவது கூட அனுப்பி வைத்திருக்கலாம். இது கட்சி நிகழ்ச்சி இல்லையே..குடும்ப ரீதியிலான துக்க நிகழ்ச்சிதானே” என்று அவரது ஆதரவாளர்களே வருத்தப்படுகிறார்கள்.

மு.க.அழகிரி மகன் தயாநிதி அழகிரி தனது ட்விட்டர் பக்கத்தில் கலைஞரும், பேராசிரியரும் இருக்கும் இளவயது புகைப்படத்தை பதிவேற்றியுள்ளார்.

**எழில்**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *