kபாஜக அழுத்தம் அளித்ததா? விளக்கும் வாசன்

politics

ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக ஜி.கே.வாசன் கருத்து தெரிவித்துள்ளார்.

ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளராக தம்பிதுரை, கே.பி.முனுசாமி ஆகியோர் நேற்று அறிவிக்கப்பட்டனர். மற்றொரு இடம் கூட்டணிக் கட்சியான தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசனுக்கு ஒதுக்கப்பட்டது. ராஜ்யசபா சீட் வேண்டும் என்று அதிமுக கூட்டணியில் உள்ள தேமுதிக தொடர்ந்து பல வகைகளில் நேரடியாகவும், மறைமுகமாகவும் வலியுறுத்தி வந்த நிலையில், தமாகாவுக்கு ஒதுக்கப்பட்டது தேமுதிகவில் அதிருப்தியை ஏற்படுத்தியது. மேலும், பாஜகவின் அழுத்தம் காரணமாகவே வாசனுக்கு அதிமுக சீட் வழங்கியது என்றும் பேசப்பட்டது.

இந்த நிலையில் ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக தி இந்து ஆங்கில நாளிதழுக்கு ஜி.கே.வாசன் அளித்த பேட்டியில், பாஜக தனக்காக அழுத்தம் அளிக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.

ஜி.கே.வாசனுடனான நேர்காணலை உரையாடல் வடிவில் காண்போம்..

**அதிமுக உங்களை ராஜ்யசபா உறுப்பினர் பதவிக்கு வேட்பாளராக தேர்ந்தெடுத்தது ஆச்சரியமாக இருக்கிறது. அது எப்படி நடந்தது?**

“உண்மையில் 2019 மக்களவைத் தேர்தலின்போது அதிமுக-பாஜக கூட்டணியில் சேர்ந்த கடைசி கட்சி தமிழ் மாநில காங்கிரஸ்தான். மக்களவைத் தேர்தலின்போது எங்களுக்கு ஒரே ஒரே சீட் தான் வழங்கப்பட்டது. எங்களுக்கு எண்ணிக்கை முக்கியமில்லை, நோக்கம்தான் முக்கியம் என்று அப்போது சொன்னேன். ஆகவே, மற்ற தலைவர்களைப் போலவே நானும் கூட்டணிக் கட்சிகளுக்காக பிரச்சாரத்தில் ஈடுபட்டேன்.

வாய்ப்பு கிடைத்தபோதெல்லாம் எங்களுக்கு ஒரு ராஜ்யசபா இடம் வழங்க வேண்டும் என அதிமுகவிடம் தொடர்ந்து கோரிக்கை விடுத்தோம். பல்வேறு விஷயங்களில் அரசுடனும், கூட்டணியிலும் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறோம். எங்களுக்கு ராஜ்யசபா சீட் வழங்கியுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.”

**ராஜ்யசபா சீட் கேட்டு நீங்கள் எப்போது அதிமுகவை அணுகினீர்கள்?**

“நாங்கள் கோரிக்கை மட்டுமே வைத்தோம். எந்த நிபந்தனைகளையும் விதிக்கவில்லை. 2019 அக்டோபர்-நவம்பர் மாதங்களில் எங்களுடைய கோரிக்கையை வலியுறுத்தினோம். விவசாயிகள், மீனவர்கள் பிரச்சினை பற்றி விவாதிக்க சந்தித்தபோதெல்லாம் ராஜ்யசபா சீட் குறித்து அவர்களுக்கு நினைவூட்டினோம். ஏனெனில், எங்கள் கட்சியின் நலனுக்காக அதனை செய்வது எங்களது கடமையாகும்.”

**பாஜகவின் அழுத்தம் காரணமாகவே உங்களுக்கு ராஜ்யசபா சீட் வழங்கப்பட்டுள்ளதாக சில அதிமுக தலைவர்கள் தனிப்பட்ட முறையில் கூறியுள்ளார்களே?**

“ராஜ்யசபா தேர்தலுக்காக என்னை ஆதரிப்பவர்கள் அனைவரும் அதிமுக எம்.எல்.ஏ.க்கள்தான். பாஜக உள்பட கூட்டணிக் கட்சிகளுக்கு ஒரு எம்.எல்.ஏ கூட இல்லை. ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடும் மூன்று வேட்பாளர்களும் அதிமுகவின் தேர்வு, அவர்களின் விருப்பம்.”

**அப்படியென்றால் பாஜக அழுத்தம் கொடுக்கவில்லை என்று சொல்கிறீர்கள் அல்லவா?**

“நான் அதிமுகவிடம் மட்டுமே ராஜ்யசபா உறுப்பினர் பதவியை கேட்டேன். என்னுடைய கோரிக்கையை மாற்றி பாஜகவிடமா கேட்க முடியும்?”

**நீங்கள் பாஜகவில் இணையப்போவதாகவும், அக்கட்சியின் தமிழக தலைவராக பொறுப்பேற்கப் போவதாகவும் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறதே?**

“தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சிறப்பாக வளர்ந்து வருகிறது. எங்களது கட்சியைச் சேர்ந்தவர்கள் தேர்தலில் வெற்றிபெற்று சட்டமன்றம் செல்ல வேண்டும் என்பதே எங்களின் விருப்பம். உள்ளாட்சி அமைப்புகளிலும் பல்வேறு பதவிகள் உள்ளன. நாங்கள் தனி அடையாளமாக இருக்கவும், கட்சியை வளர்க்கவும் விரும்புகிறோம். நான் பாஜகவில் சேரவுள்ளதாக சொல்பவர்கள் அனைவரும், தமாகாவின் வளர்ச்சியை பிடிக்காத பகல் கனவு காண்பவர்கள்.”

**சிஏஏ, என்பிஆர், என்.ஆர்.சி விவகாரத்தில் உங்களது நிலைப்பாடு என்ன?**

“இதன்மூலம் இந்திய முஸ்லீம்கள் எந்தவொரு பிரச்சினையையும் பின்னடைவையும் எதிர்கொள்ளமாட்டார்கள் என்பது எங்களுக்குத் தெளிவாகத் தெரியும். பிரச்சினை ஏற்பட்டால் இஸ்லாமிய சமூகத்தினரை சந்திக்கும் முதல் கட்சியாக நாங்கள்தான் இருப்போம்.”

**ராஜ்யசபா சீட் வழங்காதது குறித்து தேமுதிக அதிருப்தியில் இருந்துவருகிறது. இது கூட்டணிக்கு பாதிப்பை உண்டாக்குமா?**

“அதிமுகவுடன் மற்ற கூட்டணி கட்சிகள் என்ன ஒப்பந்தம் செய்துகொண்டன என்பது எனக்கு உண்மையிலேயே தெரியாது. நான் தமாகாவின் தலைவர். மற்ற கட்சி விவகாரங்களைப் பற்றி நான் புரிந்துவைத்திருக்கவில்லை”

**ராஜ்யசபா உறுப்பினரான பிறகு உங்களின் திட்டம் என்ன?**

“இதற்கு முன்பு ராஜ்யசபா உறுப்பினராகவும், மத்திய அமைச்சராகவும் பணியாற்றியுள்ளேன். எனக்கு ராஜ்யசபாவின் நடைமுறைகள் தெரியும். நான் ஆளுங்கட்சியின் கூட்டணியில் இருப்பதால் மாநிலத்தின் வளர்ச்சியை உறுதி செய்வதில் முழுமையாக ஈடுபடுவேன். மாநில நலன்களை பாதுகாக்க என்னால் என்ன செய்ய முடியுமோ, அனைத்தையும் செய்வேன்.”

**தமிழில்: எழில்**�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *