sமேற்கு தமிழகம்:  கொங்குவில் இன்னொரு கட்சி! 

politics

கொங்குநாடு  என்ற சர்ச்சை சமீபத்தில் கிளம்பி  6 மாதங்கள் ஆகும் நிலையில்,  கொங்குவை மையமாகக் கொண்டு மேற்குத் தமிழகம் என்ற புதிய கட்சி தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

கொங்கு பகுதியில் இருந்து  கவுண்டர்  என்ற சாதி அடையாளத்தோடு புறப்பட்ட பொங்கலூர் மணிகண்டன் தான் இன்று, மேற்கு தமிழகம் என்ற கட்சியைத் தொடங்கியிருக்கிறார்.

ஆரம்பகட்டத்தில் விவசாய சங்கங்களில் செயல்பட்ட  பொங்கலூர் மணிகண்டன் பின் கொங்கு வேளாளர் கவுண்டர்கள் பேரவையில் இயங்கினார்.  ஒரு கட்டத்தில் கலப்புத் திருமண எதிர்ப்பு இயக்கம் என்று கரூரில் தொடங்கி சலசலப்பைக் கிளப்பினார். இதைப் பார்த்த டாக்டர் ராமதாஸ் தான் தொடங்கிய அனைத்து சமுதாய இயக்கத்தில் இவரையும் சேர்த்துக் கொண்டார்.  மெல்ல மெல்ல   பாமகவில் இணைந்து மாநில துணைத் தலைவர்களில் ஒருவராக செயல்பட்ட மணிகண்டன் பின் அக்கட்சியில் இருந்தும் விலகினார். உழவர் உழைப்பாளர் சங்கம் என்ற பெயரில் இயங்கிய மணிகண்டன், கடந்த ஜூலை மாதம் ஒன்றிய அமைச்சர் எல்.முருகனின் விவரக் குறிப்பில் கொங்குநாடு என்று அறிவிக்கப்பட்டபோது அதை வரவேற்று கொங்குநாடு தனிநாடு என்ற முழக்கத்தை முன் வைத்தார்.

இப்போது கொங்குவை எல்லாம் கழற்றிவிட்டு மேற்குத் தமிழகம் என்ற கட்சியை உருவாக்கியிருக்கிறார்.

திருப்பூரில் டிசம்பர் 15 ஆம் தேதி கட்சியின் முதல் பொதுக்குழுவைக் கூட்டியிருக்கும் மணிகண்டனிடம்  பேசினோம்.

மேற்கு தமிழகம் கட்சி என்ற பெயரில் அரசியல் கட்சியாக செயல்பட டெல்லியிலுள்ள இந்தியத் தேர்தல் ஆணையத்தில் ஜுலை 2021 ல் முறைப்படி விண்ணப்பித்திருந்தோம்.

எங்கள் விண்ணப்பம் ஏற்கப்பட்டு “மேற்கு தமிழகம் கட்சி ” இந்திய தேர்தல் ஆணையத்தால் பதிவு செய்யப்பட்ட ஒரு கட்சியாக ஏற்றுக் கொள்ளப்பட்டு அதற்கான சான்றிதழை வழங்கி முறையான உத்தரவையும் அளித்துள்ளது”என்றவரிடம்,

‘கொங்குவை விட்டு மேற்குத் தமிழகம் என்று வைத்தது ஏன்?”என்று கேட்டோம்.

“கொங்கு என்றால் அது ஒரு பகுதியைக் குறிக்கும் பெயர்தான். ஆனால் தற்போதைய புழக்கத்தில் ஒரு சமுதாயத்தைக் குறிப்பதாக புரிந்துகொள்ளப்படுகிறது. கொங்கு என்றால் வேளாளர்கள் மட்டுமல்லர்…. கொங்கு பகுதியில் அருந்ததியர்கள் இருக்கிறார்கள்.  கொங்கு பகுதியில் நாடார்கள் இருக்கிறார்கள். கொங்கு பகுதியில் முதலியார்கள் இருக்கிறார்கள். இப்படி பல்வேறு சமுதாயத்தினரையும் சேர்த்ததுதான் கொங்கு.ஆனால் இப்போது கொங்கு என்று சொன்னாலே அது ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினரை மட்டுமே குறிப்பதாக அர்த்தம் கொள்ளப்படுகிறது.

அதனால்தான் கொங்கு என்ற பெயரை விட்டு மேற்குத் தமிழகம் என்று எங்கள் கட்சிக்குப் பெயர் வைத்துள்ளோம். தமிழகத்துக்கு  அபரிமிதமான அன்னிய செலாவணியை அள்ளித் தரும் மேற்குத் தமிழகம் கடந்த கால் நூற்றாண்டு காலமாக விவசாயத்திலும் சுற்றுச் சூழலிலும் மிகவும்  பாழாகிக் கொண்டிருக்கிறது. சாயத்தை  பார்த்துக் கொண்டே விவசாயத்தையும்  சூழல் தூய்மையையும் இழந்திருக்கிறோம்.

மேற்குத் தமிழகத்தை தமிழ்நாட்டின் அரசு நிர்வாகம் பணம் காய்க்கும் பகுதியாகவே  பார்க்கிறதே தவிர  மலைப் பகுதிகளைக்   கொண்ட இயற்கை அன்னைக்கு நெருக்கமான விவசாய பூமி என்பதை உணரவில்லை.  தொழில் வளர்ச்சி காரணமாக நாடு முன்னேறுகிறது. ஆனால்  இந்த மண் பாழாகிவிடக் கூடாது என்பதை ஒட்டித்தான்   மேற்குத் தமிழகம் கட்சியின் செயல்பாடுகள் இருக்கும்.  வட தமிழ்நாடு மக்கள் கட்சி, தென் தமிழ்நாடு மக்கள் கட்சி போன்ற பெயர்களில் கட்சிகள் இருக்கின்றன. அதுபோல மேற்குத் தமிழகம் என்ற கட்சியை உருவாக்கியுள்ளோம் ” என்றார் பொங்கலூர் மணிகண்டன். 

**-வேந்தன்**   

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *