Nஇந்தியாவில் ஒமிக்ரான் வைரஸா?

politics

வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருவதால் இந்தியாவில் ஒமிக்ரான் வைரஸ் பரவ ஆரம்பித்து விட்டதோ என்று அச்சம் ஏற்பட்டுள்ளது.

தென்னாப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட ஒமிக்ரான் வைரஸ், தொடர்ந்து பல்வேறு நாடுகளுக்கு பரவி வருகிறது. இந்த வைரஸ் உலகளவில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது என்று உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது. இருப்பினும், இதனுடைய வீரியத்தை தெரிந்து கொள்ள இன்னும் பல ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பல்வேறு நாடுகள் பயணக் கட்டுப்பாடுகள், பூஸ்டர் தடுப்பூசி செலுத்துதல் உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்தியாவை போன்று பல்வேறு நாடுகளில் ஹோம் குவாரண்டைன் நடைமுறைக்கு வந்துள்ளது.

இந்நிலையில்,ஆஸ்திரியா நாட்டிலிருந்து சுற்றுலாவிற்காக உத்தரப்பிரதேசம் மதுராவிற்கு வந்த பெண் உள்பட நான்கு வெளிநாட்டு பயணிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது இவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் சுற்றி வந்த பகுதிகளில் உள்ள மக்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு வருகின்றது.

அதுபோன்று நவம்பர் 21ஆம் தேதி தென்னாப்பிரிக்காவிலிருந்து சண்டிகர் வந்த 39 வயதானவருக்கு விமான நிலையத்தில் நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா நெகட்டிவ் என்று முடிவு வந்தது. ஏழு நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு பிறகு அவருக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவரோடு தொடர்பில் இருந்த இருவருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் ஒருவருக்கு தொற்று இல்லை, மற்றொருக்கு ரிசல்ட் வரவில்லை. இவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

அதுபோன்று தென்னாப்பிரிக்காவில் இருந்து மகாராஷ்டிராவுக்கு வந்த ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. ஆனால் இவர்கள் அனைவரும் ஒமிக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனாரா என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

தென்னாப்பிரிக்காவில் இருந்து கடந்த வாரம் கர்நாடகா திரும்பிய இருவருக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் ஒருவருக்கு டெல்டா வகை வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. சந்தேகத்தின் பேரில் மற்றொருவரின் மாதிரிகள் மரபணு வரிசைப்படுத்தலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இரண்டு பேரும் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதை கர்நாடகா சுகாதாரத்துறை அமைச்சர் சுதாகரும் உறுதி செய்துள்ளார்.

இதுபோன்று தொடர் சம்பவங்கள் இந்தியாவில் ஒமிக்ரான் வைரஸ் வந்துவிட்டதோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், இந்தியாவில் இதுவரை ஒமிக்ரான் பாதிப்பு கண்டறியப்படவில்லை என்று ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் ஒமிக்ரான் வைரஸ் குறித்து ஒன்றிய சுகாதாரத் துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் அனைத்து மாநில சுகாதார செயலாளர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தவுள்ளார்.

ஒமிக்ரான் வைரஸை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்று உலக நாடுகள் யோசித்து கொண்டிருக்கும்வேளையில், ஸ்புட்னிக் வி மற்றும் ஸ்புட்னிக் லைட் தடுப்பூசிகள் ஒமிக்ரான் கொரோனா வகைக்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் என்று ரஷ்யா சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

**-வினிதா**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *