மழை பாதிப்பு: சீரமைப்பு பணிகளை விரைந்து முடிக்க உத்தரவு!

politics

தமிழகத்தில் கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை அதிகமாகப் பெய்து வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் 38 மாவட்டங்களிலும் மழைப்பொழிவு ஏற்பட்டுள்ள நிலையில் ஐந்து இடங்களில் மிகக் கனமழையும் 41இடங்களில் கன மழையும் பெய்து உள்ளதாகத் தமிழக அரசின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடலூர், சிவலோகம், களியல், சித்தாறு, ஊத்துக்கோட்டை ஆகிய 5 இடங்களில் மிகக் கனமழை பெய்துள்ளது.

கடந்த நவம்பர் 1-ஆம் தேதி முதல் இன்று வரை 635.42 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. இது இயல்பான மழை அளவான 352.6 மில்லி மீட்டரை காட்டிலும் 50 சதவீதம் அதிகமாகும்.

அதுமட்டுமின்றி கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு மழை பொழிவு அதிகமாக உள்ளதாகவும், இந்த ஆண்டு மட்டும் 1,300 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளதாகவும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இந்த சூழலில் மழை பாதித்த பகுதிகளை முதல்வர் ஸ்டாலின் தினசரி ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

அதன்படி இன்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்டார். காஞ்சி மாவட்டம் வரதராஜ புரம் ஊராட்சிக்குட்பட்ட பி.டி.சி குடியிருப்புப் பகுதிகளில் மழை காரணமாக 4 அடி உயரத்துக்கு தண்ணீர் சூழ்ந்துள்ளது. இதனால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வரமுடியாமல் தவித்து வருகின்றனர். மழை வெள்ளம் சூழ்ந்து வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களைத் தேசிய மற்றும் மாநில பேரிடர் மேலாண்மை குழு, தீயணைப்பு மற்றும் காவல்துறையினரால் பைபர் படகுகளில் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். காஞ்சியில் மட்டும் மொத்தம் 25 முகாம்களில் 900க்கும் மேற்பட்டோர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், வரதராஜ புரத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களைப் பார்வையிட்டு ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலின் சீரமைப்புப் பணிகளைப் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். அப்பகுதி மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்த முதல்வர் விரைந்து சரி செய்யப்படும் என்று உறுதியளித்தார். வேல்ஸ் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள முகாமிற்குச் சென்ற அவர், அங்குத் தங்கியுள்ள மக்களுக்கு உணவு மற்றும் நிவாரணப் பொருட்களை வழங்கினார்.

செங்கல்பட்டு மாவட்டத்தின் நீர் நிலைகள் கனமழை காரணமாக நிரம்பி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், தாம்பரம், முடிச்சூர், பெருங்களத்தூர், ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி, நவலூர், கேளம்பாக்கம், தாழம்பூர் என மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் தீவாக மாறியுள்ளன. இதனால் செங்கல்பட்டு மாவட்டத்தில் 2000க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், முடிச்சூர் ஊராட்சிக்குட்பட்ட ஜோதி நகர், அமுதம் நகர் பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை முதல்வர் இன்று பார்வையிட்டார். மழைநீரைத் துரிதமாக அகற்றிட மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டு, பொதுமக்களிடம் தேவைப்படும் உதவிகள் குறித்துக் கேட்டறிந்தார். தாம்பரம் மாநகராட்சி, வானியன்குளம், இரும்புலியூர் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் வெள்ளத் தடுப்பு பணிகளையும் ஆய்வு செய்தார்.

**-பிரியா**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *