{மோடியை சந்தித்த சிந்தியா: பாஜகவில் இணைகிறார்?

Published On:

| By Balaji

காங்கிரஸ் அதிருப்தி தலைவர் ஜோதிராதித்ய சிந்தியா பிரதமர் நரேந்திர மோடியை இன்று சந்தித்தார்.

மத்திய பிரதேச சட்டமன்றத்திற்கு 2018ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் மொத்தமுள்ள 230 இடங்களில் 114 தொகுதிகளைக் கைப்பற்றிய காங்கிரஸ், பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி மற்றும் சுயேச்சைகள் துணையுடன் 15 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சியைக் கைப்பற்றியது. காங்கிரஸில் முதல்வர் யார் என்ற கேள்வி எழுந்தபோது சீனியரான கமல்நாத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு, ஜோதிராதித்ய சிந்தியா புறக்கணிக்கப்பட்டார்.

மேலும் சிந்தியாவுக்கு முக்கிய பதவிகள் எதுவும் அளிக்கப்படவில்லை. இதனால் அதிருப்தியில் இருந்துவந்தவர் சில மாதங்களுக்கு முன்பு தனது ட்விட்டர் பக்கத்தில் காங்கிரஸ் கட்சியின் அடையாளத்தை நீக்கினார். மேலும் காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதற்கும் ஆதரவு தெரிவித்திருந்தார். இதனிடையே ஜோதிராதித்ய சிந்தியாவுடன் 17 சட்டமன்ற உறுப்பினர்கள் மாயமாகினர். மத்திய பிரதேச காங்கிரஸ் தலைவர்களும், சிந்தியாவை தொடர்புகொள்ள முடியவில்லை என்று ஊடகங்களில் தெரிவித்தனர். இதனால் கமல்நாத் தலைமையிலான அரசுக்கு நெருக்கடி முற்றியது.

பரபரப்பான அரசியல் சூழலில் டெல்லியிலுள்ள தனது இல்லத்திலிருந்து இன்று (மார்ச் 10) காலை காரில் கிளம்பிய ஜோதிராதித்ய சிந்தியா, பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார். அப்போது உள்துறை அமைச்சரும், பாஜக முன்னாள் தலைவருமான அமித் ஷாவும் உடனிருந்தார். அதில், பாஜகவில் இணைவது குறித்து ஜோதிராதித்ய சிந்தியா பேசியிருக்கலாம் என்று டெல்லி வட்டாரங்கள் கூறுகின்றன.

இது ஒருபக்கம் இருக்க போபாலிலுள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் மூத்த தலைவர்கள் ஆலோசனையில் ஈடுபட்டுவருகின்றனர். பாஜக மூத்த தலைவரும், ம.பி முன்னாள் முதல்வருமான சிவராஜ் சிங் சவுகான், விடி சர்மா, பாஜக தேசிய துணைத் தலைவர் வினய் ஆகியோர் தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்கள்.

மாநிலத்தில் நிலவும் அரசியல் சூழல்கள் குறித்து நேற்றிரவு சிவராஜ் சிங் சவுகான் கருத்து தெரிவிக்கையில், “இது காங்கிரஸின் உட்கட்சி விவகாரம். இதில் நான் எந்தக் கருத்தும் சொல்ல விரும்பவில்லை. முதலில் கூறியது போல ஆட்சியைக் கவிழ்ப்பதில் எங்களுக்கு துளியும் விருப்பம் கிடையாது” என்று கூறியுள்ளார்.

**எழில்**

[கமல்நாத் – சிந்தியா மோதல்: அமைச்சர்கள் ராஜினாமா – அந்தரத்தில் ம.பி அரசு](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2020/03/10/19)

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share