அனைத்து நகைக்கடன்களையும் தள்ளுபடி செய்க: எடப்பாடி

politics

தேசியமயமாக்கப்பட்ட மற்றும் தனியார் வங்கிகளில் 5 பவுன் வரை பெற்ற நகைக் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

கூட்டுறவு வங்கிகளில் 5 பவுன் வரை நகைக் கடன் பெற்றவர்களுக்கான கடன் தள்ளுபடி செய்யப்படுவதாக நவம்பர் 1ஆம் தேதி அரசாணை வெளியிடப்பட்டது. கடன் தள்ளுபடி செய்யப்பட்ட நகைகள் வீட்டுக்கே வந்துவிடும் எனவும் கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்தார். இந்நிலையில், தனியார் வங்கிகளில் பெற்ற கடனையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “ இந்த ஆண்டு சட்டப்பேரவைப்‌ பொதுத்‌ தேர்தலின்‌போது, தற்போதைய முதல்வர்‌, அவரது வாரிசு மற்றும்‌ திமுக நிர்வாகிகள்‌ தமிழ்‌நாட்டில்‌ கூட்டுறவு வங்கிகள்‌, தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள்‌ மற்றும்‌ தனியார்‌ வங்கிகள்‌ என்று பொதுமக்கள்‌ எந்த வங்கியில்‌ வேண்டுமானாலும்‌ 5 பவுன்‌ வரை அடமானம்‌ வைத்து நகைக்‌ கடன்‌ பெற்றுக்கொள்ளுங்கள்‌, நாங்கள்‌ ஆட்சிப்‌ பொறுப்பேற்ற உடனேயே நீங்கள்‌ 5 பவுன்‌ வரை அடமானம்‌ வைத்து வாங்கிய நகைக்‌ கடன்கள்‌ அனைத்தும்‌ தள்ளுபடி செய்யப்படும்‌ என்றும்‌ மேடைக்கு மேடை பேசி, மக்களை நகைக்‌ கடன்‌ வாங்கத்‌ தூண்டி வந்தனர்; ஆட்சியையும்‌ பிடித்தனர்.

இவர்களது பொய்யான வாக்குறுதிகளை நம்பி, வேளாண்‌ பெருமக்கள்‌, வியாபாரிகள்‌, மகளிர்‌ சுயஉதவிக்‌ குழு உறுப்பினர்கள்‌ எனப் பொதுமக்கள்‌ பலரும்‌ 5 பவுன்‌ வரை கூட்டுறவு வங்கிகள்‌, தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள்‌ மற்றும்‌ தனியார்‌ வங்கிகளில்‌ அடைமானம்‌ வைத்து நகைக்‌ கடன்‌ பெற்றுள்ளனர்‌. கூட்டுறவு வங்கிகள்‌, நகைக்‌ கடன்‌ வழங்குவதற்காக ஒதுக்கப்பட்டிருந்த நிதியுடன்‌, பருவ காலங்களில்‌ விவசாயிகளுக்குப் பயிர்க்‌ கடனாக வழங்க ஒதுக்கப்பட்டிருந்த நிதியையும்‌, நகைக்‌ கடனுக்காக வழங்கிவிட்டனர்‌. எனவே, இந்த ஆண்டு உறுப்பினர்கள்‌ அனைவருக்கும்‌ பயிர்க்‌ கடனை வழங்கப் போதுமான நிதி கூட்டுறவுக்‌ கடன்‌ சங்கங்களிடம்‌ இல்லை என்றும்‌; எனவே, தமிழக அரசு உடனடியாக அனைத்து கூட்டுறவு கடன்‌ சங்கங்களுக்கும்‌ தேவையான நிதியினை ஒதுக்கீடு செய்ய வேண்டும்‌ என்றும்‌ சட்டப்பேரவையில்‌ அதிமுக‌ சார்பில்‌ கூறினோம்‌.

இந்நிலையில், இரு நாட்களுக்கு முன்பு பல்வேறு நிபந்தனைகளுடன்‌ நகைக்‌ கடன்‌ தள்ளுபடி என்று பெயரளவில்‌ ஒரு அரசாணையை இந்த அரசு வெளியிட்டுள்ளது. தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள்‌ மற்றும்‌ தனியார்‌ வங்கிகள்‌ மூலம்‌ வழங்கப்பட்ட நகைக்‌ கடன்‌ தள்ளுபடி பற்றி எந்த விவரமும்‌ இதில்‌ இல்லை.

எப்போதும்‌ போல்‌ திமுக அரசு கூட்டுறவுச் சங்கங்களிடம்‌ பயிர்க்கடன்‌ வழங்கத்‌ தேவையான அளவு நிதி உள்ளது என்று தெரிவிக்கிறது. ஆனால்‌, உண்மையில்‌ கூட்டுறவுக் கடன்‌ சங்கங்களிடம்‌ பயிர்க்‌ கடன்‌ வழங்கப் போதுமான நிதி இல்லாததால்‌ விவசாயிகள்‌, தனியாரிடம்‌ அதிக வட்டிக்குக்‌ கடன்‌ வாங்க வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்‌.

திமுகவின்‌ தேர்தல்‌ அறிக்கையில்‌ அறிவித்தவாறு, தேசிய மயக்கமாக்கப்பட்ட வங்கிகள்‌ மற்றும்‌ தனியார்‌ வங்கிகள்‌ உட்பட அனைத்து வங்கிகளிலும்‌ 5 பவுன்‌ வரை அடைமானம்‌ வைத்துப் பெறப்பட்ட நகைக்‌ கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும்‌ என்றும்‌ வலியுறுத்தியுள்ளார்.

**-பிரியா**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *