Truths and Lies of Nationalism According to Savarkar

சார்வாகர் கூறும் தேசியத்தின் உண்மைகளும், பொய்களும் – அறிஞர் பார்த்தா சாட்டர்ஜி அளித்துள்ள அபூர்வ நூல்

அரசியல் சிறப்புக் கட்டுரை

ராஜன் குறை Truths and Lies of Nationalism According to Savarkar

வங்கத்தைச் சேர்ந்த உலகப் புகழ்பெற்ற சிந்தனையாளர், அறிஞர் பார்த்தா சாட்டர்ஜி. அரசியல் தத்துவப்  பேராசிரியர். நியூயார்க்கிலுள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்தில் நான் ஆய்வு படிப்பை மேற்கொண்டபோது என் ஆசிரியராக விளங்கியவர். இவருடைய நூல்கள் பலவும் பல்வேறு நாடுகளில் பயிலப்படும் தேசியம் குறித்த கோட்பாட்டு நூல்களாகும். குறிப்பாக இந்திய தேசியம் எப்படி உருப்பெற்றது, அது முழுமையானதா, அந்த தேசிய சிந்தனையில் உள்ள குறைபாடுகள் என்னவென்பதை பல்வேறு நூல்களில் திறம்பட விவாதித்துள்ளவர்.

பார்த்தா சாட்டர்ஜி இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஆங்கிலத்தில் ஒரு அபூர்வமான நூலை வெளியிட்டார். அதன் தலைப்பு: Truth and Lies of Nationalism – as told by Carvak என்பதாகும். நாடு கோவிட் பெருந்தொற்று காலத்தில் பாதிக்கப்பட்டிருந்தபோது அவர் வீட்டு வாயிலில் ஒரு பெட்டி வைக்கப்பட்டிருந்ததாகவும், அதில் அவர் விலாசம் இடப்பட்டிருந்ததாகவும் அதனுள் ஒரு கையெழுத்துப்படி இருந்ததாகவும் கூறுகிறார். அந்த கையெழுத்துப்படிதான் சார்வாகர் என்று தன்னை கூறிக்கொள்ளும் ஒருவர் அவரே பேசுவது போல எழுதிய இந்த இந்திய தேசியம் குறித்த நூலாகும்.

பார்த்தா சாட்டர்ஜி அந்த கையெழுத்துப் படியை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்து, குறிப்புகள் சேர்த்து நூலாக வெளியிட்டார். அந்த நூல் அனைத்து மக்களும் எளிதில் புரிந்துகொள்ளும்படி இந்திய தேசிய உருவாக்கத்தின் பல்வேறு அம்சங்களை விவாதிப்பதாக விளங்குகிறது. அதை நானும், நண்பர் அசோகா பல்கலைக்கழக பேராசிரியர் ரவீந்திரன் ஸ்ரீராமச்சந்திரனும் தமிழில் மொழியாக்கம் செய்துள்ளோம். இப்போது நடைபெறும் சென்னை புத்தகக் காட்சியில் இந்த நூல் எதிர் வெளியீட்டின் அரங்கில் கிடைக்கிறது.

இந்த நூலைக்குறித்து நான் இங்கே எழுத காரணம் இன்றைய நிலையில் இந்திய தேசியம் சந்திக்கும் முக்கிய பிரச்சினைகளையெல்லாம் இந்த நூல் சிறப்பாக விவாதிக்கிறது என்பதுதான். அதனால் நாட்டின் அரசியலில் அக்கறை கொண்டோர் அனைவரும் படித்துப் பார்ப்பது பயன்தரும்.

Truths and Lies of Nationalism According to Savarkar

தொன்மையும், பன்மையும்  

இந்த நூலின் தொடக்கமே தெளிவுபடுத்தும் ஒரு விஷயம் என்னவென்றால் இன்று உலகிலுள்ள எல்லா தேசங்களுமே நவீனமானவை என்பவைதான். தொன்மையான தேசம், பண்டைய தேசம் என்று எதுவும் கிடையாது. இந்தியக் குடியரசு 1950ஆம் ஆண்டு உருவானபோதுதான் இன்றைய இந்தியா என்பது அதிகாரபூர்வமாக பிறந்தது. அதற்கு முன் எந்தக்காலத்திலும் இந்த நிலப்பரப்பு ஒரே அரசியல் அமைப்பு கொண்டதாக இருந்ததில்லை. ஒரே பேரரசின் கீழ் கூட இருந்ததில்லை.

இப்படிச் சொல்லும்போது நாம் தேசத்திற்கு எதிரானவர்கள் இல்லை. உண்மையான தேசபக்தி என்பது உண்மைகளைப் பேசுவதுதானே தவிர கற்பிதங்களை பேசுவதல்ல. இப்போது ஒருவர் கேட்கலாம்; ஒரே நாடாக இருக்காவிட்டால் என்ன, இந்திய நிலப்பரப்பு முழுவதிலும் ஒரு பண்பாட்டுத் தொடர்ச்சி இருந்ததாகக் கருதலாமே என்று கேட்கலாம். அதையும் இந்த நூல் விரிவாக விவாதிக்கிறது. இந்தியாவின் பண்பாடுகள் அளப்பரிய பன்மை கொண்டவை என்பதை சுட்டிக்காட்டுகிறது.

இந்தியாவுக்கு ஒற்றை பண்பாட்டு அடையாளத்தைக் கற்பிக்க முடியாது; அந்த பண்பாடு தொன்றுதொட்டு மாற்றங்களில்லாமல் தொடர்ந்து வருவதாகக் கூற முடியாது. பல்வேறு மாற்றங்களுக்கு உட்பட்ட பல்வேறு பண்பாடுகளின் தொகுப்புதான் இந்தியா என்பதை ஏராளமான தரவுகளுடன் எடுத்துரைக்கிறார் சார்வாகர்.

எல்லைகளும், தொல்லைகளும் Truths and Lies of Nationalism According to Savarkar

தேசத்தின் எல்லைகளைக் காக்கும் ராணுவ வீரர்களைப் பற்றியெல்லாம் மிகவும் உணர்ச்சிகரமான சொல்லாடல்களுக்கு நாம் பழக்கப்பட்டிருப்போம். நாட்டின் பாதுகாப்பு என்பது முக்கியம்தான். ஆனால் நாட்டின் எல்லைகள் என்பவை கடவுளால் உருவாக்கப்பட்ட புனிதமான கோடுகள் அல்ல. அது பல்வேறு அதிகாரிகள், இந்தியாவைப் பொறுத்தவரை பல்வேறு பிரிட்டிஷ் அதிகாரிகள் பலவிதமான சந்தர்ப்பங்களில் வகுத்த எல்லைகள்தான்.

சதாத் ஹசன் மண்டோ என்ற எழுத்தாளரின் புகழ்பெற்ற டோபா தேக் சிங் என்ற கதையை வாசித்திருப்பீர்கள். எல்லைக்கோட்டினை வரைவதன் அபத்தமான தற்குறித்தன்மையை அவல நகைச்சுவையாக வெளிப்படுத்தும் புகழ்பெற்ற கதை அது. எல்லா திசைகளிலும் இந்தியாவின் எல்லைகள் எப்படியெல்லாம் தீர்மானிக்கப்பட்டன என்பதை இந்த நூலில் விரிவாக விளக்குகிறார் சார்வாகர்.

எல்லைகள் வகுத்ததில் உருவான தொல்லைகள் பல வகைப்பட்டவை. ஒரு சில பிரச்சினைகள் காலப்போக்கில் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்பட்டன. சில பிரச்சினைகள் இன்னும் தீர்க்கப்படாமல் புகைந்துகொண்டு உள்ளன. எந்தெந்த பகுதிகள் இந்தியாவுடன் இணைய வேண்டும், எவை இணைய வேண்டாம் என்பதெல்லாமே எந்த அடிப்படைகளில் முடிவு செய்யப்பட்டன என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

மேலும் இந்தியாவும், பாகிஸ்தானும் இரண்டு நாடுகளாக பிரிந்து சுதந்திரம் பெற்றபோது நூற்றுக்கணக்கான தன்னாட்சி உரிமையுள்ள சமஸ்தானங்கள் இருந்தன. அவை தனித்திருப்பதா, இந்தியாவுடன் இணைவதா என்பது ஒரு கேள்வி. ஒரு சில சமஸ்தான ங்கள் இந்தியாவுடன் இணைவதா, பாகிஸ்தானுடன் இணைவதா என்பது மற்றொரு கேள்வி. இதில் முடிவுகள் எட்டப்பட்ட விதம் ஒருபடித்தானவை அல்ல. காஷ்மீர் சமஸ்தானத்தின் பிரச்சினை இன்றளவும் புகைந்துகொண்டுதான் இருக்கிறது. உலகிலேயே ஏராளமாக ராணுவும் குவிக்கப்பட்டுள்ள பகுதிகளில் ஒன்று காஷ்மீர் எனப்படுகிறது.

இதையெல்லாம் இந்த நூல் விரிவாகப் பேசக் காரணம், இந்தியா எப்படி வரலாற்றுப் போக்கில் கட்டமைக்கப்பட்ட தேசம் என்பதை விளக்குவதற்குத்தான். வேதங்கள், இதிகாசங்கள், புராணங்கள் ஆகிய எவற்றையும் காட்டி இன்றைய இந்திய தேசத்தின் உருவாக்கத்தை விளக்க முடியாது. இது ஒரு நவீன அரசியல் ஏற்பாடு. அது அனைத்து மக்களுக்கும் நன்மை புரியும் ஏற்பாடாக இருக்க வேண்டும் என்பதே முக்கியம்.

தேசம் என்பது அரசா, மக்களா?

பார்த்தா சாட்டர்ஜி அவரது பல்வேறு நூல்களிலும், கட்டுரைகளிலும், எழுப்பிய முக்கியமான கேள்வி தேசம் என்பது அரசா, மக்களா என்பதுதான். தேசிய அரசா அல்லது மக்களின் தேசமா என்று கேட்கிறார் அவர். இந்தக் கேள்வியை நாம் பொறுமையாகவும், நிதானமாகவும் புரிந்துகொள்ள வேண்டும்.

பண்டைய வரலாற்றில் அரசர்களே இறையாண்மையின் வடிவமாக இருந்தார்கள். ஓர் அரசர் எந்தெந்த பகுதிகளை அவர் கட்டுப்பாட்டில் கொண்டு வருகிறாரோ அது அவருடைய நாடு. சோழ மன்னர் தர்மபுரி பகுதியை கைப்பற்றினால் அது அவருடைய ஆட்சிக்கு உட்பட்டது. அதை ராஷ்டிரகூடர்கள் கைப்பற்றினால் அது அவர்களுக்கு உரியதாகிவிடும். அதிகாரம் மன்னர்கள், மந்திரிகள், தளபதிகள், மதகுருமார்கள், நிலப்பிரபுக்கள் என்று வடிவம் பெற்று இருந்தது.

நவீன அரசியலில் ஏற்பட்ட மிகப்பெரிய மாற்றம் மக்களாட்சி என்பதுதான். அது என்னவென்றால் இறையாண்மை அனைத்து மக்களுக்கும் உரியது என்ற கருத்தாக்கம். அப்படியென்றால் அனைத்து மக்களும் தங்களைத் தாங்களே ஆட்சி செய்து கொள்ள வேண்டும். அப்படி செய்வதற்காக மக்கள் உள்ளூரில், தல மட்டத்தில் தொடங்கி தங்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பார்கள். உள்ளூர் நிர்வாகம், மாநில நிர்வாகம், தேசிய அளவில் ஒன்றிய அரசின் நிர்வாகம் எல்லாமே மக்களின் பிரதிநிதிகளால் வழி நடத்தப்படும். அதற்கான அரசியலமைப்பு சட்டம் இயற்றப்படும்.

அதனால்தான் இந்தியாவிலிருந்த ஐந்நூறுக்கும் மேற்பட்ட மன்னர்களெல்லாம் குடியரசில் இணைய நேர்ந்தது. சிறிது காலம் அவர்களுக்கு இழப்பீடாக மன்னர் மானியம் தரப்பட்டது. ஆனால் 1971ஆம் ஆண்டு இந்திரா காந்தி அந்த இழப்பீடு தருவதை ஒழித்துவிட்டார். மன்னர் மானிய ஒழிப்பு என்று அறியப்பட்ட முற்போக்கு நிகழ்வு இது.

ஆனால் இப்போதும் என்ன ஒரு வேறுபாடு என்றால், மக்களிலேயே பணபலமும், சமூக செல்வாக்கும் பெற்ற சிலர் அரசினை கட்டுப்படுத்துவதில் அதிக ஆற்றலுடன் இருக்கிறார்கள். இடதுசாரிகள் இதை ஆளும் வர்க்கம் என்று அழைப்பார்கள். எளிய மக்கள் அரசால் ஆளப்படுபவர்களாக இருக்கிறார்கள். அரசியல்வாதிகள் எளிய மக்களிலிருந்து உருவாகி அவர்களுக்காக செயல்பட்டாலும், அரசினை கட்டுப்படுத்தும் அதிகாரம் படைத்ததாக ஆளும் வர்க்கம், பெரு முதலீட்டியம் விளங்கி வருகிறது.

பெருமுதலீட்டியத்தின்  நலன்களுக்கும், வெகுமக்களின் நலன்களுக்கும் முரண்பாடு உள்ளது. அதனால்தான் இந்தியா உட்பட உலக நாடுகள் பலவற்றிலும் பொருளாதார ஏற்றத்தாழ்வு அதிகரித்து வருகிறது. தோராயமாகச் சொன்னால் சொத்துகளை வைத்திருப்பதிலும் சரி, வருமானத்திலும் சரி 10% பேரே 50% சொத்துகளும், வருமானமும் உள்ளவர்களாக இருக்கிறார்கள். மீதமுள்ள 90% மக்கள் மீதமுள்ள 50%-ஐ பங்கு போட்டுக்கொள்கிறார்கள் எனலாம்.

அரசிடமுள்ள அதிகாரம் முதலீட்டியத்தின் நலனுக்காக செயல்படுகிறதா, மக்களின் நலனுக்காக செயல்படுகிறதா என்பதே கேள்வி. அரசியல் கட்சிகளிடையே நிகழும் தேர்தல் மோதல்கள் அவர்களை மக்களுக்காக சில நலத்திட்டங்களை செய்ய நிர்பந்திக்கின்றன. ஆனால் முதலீட்டிய நலனை அனுசரிக்காவிட்டால் அவர்களால் நாட்டின் பொருளாதாரத்தை நிர்வகிக்க முடியாது. இதுதான் வலதுசாரி, இடதுசாரி என்ற பிரிவாக அரசியலில் விளங்குகிறது.

ஒரு திரைப்படப் பாடல் உங்களுக்கு நினைவிருக்கும்.

நாடென்ன செய்தது உனக்கு

என்று நீயும் கேட்பது எதற்கு

நீயென்ன செய்தாய் அதற்கு

என்று கேட்டால் நன்மை உனக்கு…

இந்தப் பாடலின் நோக்கம் எல்லோரும் சுயநலத்துடன் வாழக்கூடாது, பொது நன்மை கருதி வாழ வேண்டும் என்பதாகும். ஆனால் இப்படிக் கூறுபவர்கள், பொருளாதார ஏற்றத்தாழ்வு, சமூக ஏற்றத்தாழ்வு ஆகியவற்றை நீக்குவதில் முன்னிற்காவிட்டால் நாட்டுக்காக வாழ்வது என்பது அரசுக்காக வாழ்வது, அல்லது ஆளும் வர்க்கத்துக்காக வாழ்வது என்றாகிவிடும்.

ஒன்றியத்தில் குவியும் அதிகாரமும், மாநில சுயாட்சியும்

மக்களிடம் அதிகாரம் பரவலாக சென்றடைய வேண்டும் என்பதற்கான முதல் படி ஒன்றிய அரசிடம் குவிந்துள்ள அதிகாரம் மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்பதாகும். இந்த நூல் அதைத் தெளிவாக வலியுறுத்துகிறது. ஒன்றிய அரசின் அதிகாரத்தின் பின்னால் பெருமுதலீட்டிய சக்திகள் அணிவகுத்து நிற்கின்றன.

மக்களின் அரசியல் வெளிப்பாட்டுக்கு மாநில அரசியலே முக்கியமான களம் அமைத்துத் தருகிறது. முதலில் மாநில அரசியல் வெகுமக்களின் மொழியில் அமைந்துள்ளது. இரண்டாவது அவர்களின் அவசியத் தேவைகளான கல்வி, சுகாதாரம், சட்டம் ஒழுங்கு ஆகியவை மாநில அரசின் பொறுப்பில் உள்ளன. எனவேதான் மாநில அரசுகளுக்கு அதிக அதிகாரம், அதிக நிதிப்பங்கீடு என்பது மக்களுக்கு அதிக அதிகாரம் என்பதாகவே பொருள்படும். ஒன்றிய அரசிடம் அதிகாரத்தை குவிப்பதென்பது மக்களை மேலும் அந்நியப்படுத்துவதாகும்.

அனைத்தையும் தொகுத்துப் பார்த்தால் இன்றைய இந்துத்துவ அரசியல் என்பது இந்தியாவின் தொன்மையைப் பேசி ஒற்றை இந்துத்துவ அடையாளத்தை உருவாக்குவது, ஒன்றிய அரசில் அதிகாரத்தைக் குவிப்பது, பெருமுதலீட்டிய ஆதரவு என்று செயல்படுவதைப் பார்க்கலாம்.

சார்வாகரின் நூல் எட்டு இயல்களில் இந்தப் போக்கினை விரிவாகச் சுட்டிக்காட்டி விளக்குவதுடன், இளைஞர்கள் விழிப்புணர்வுடன் மக்களை மேம்பட்ட வாழ்வினை நோக்கி அழைத்துச் செல்ல வேண்டும் என்றும் கோருகிறது.

அனைவரும் எளிதில் வாசித்து புரிந்துகொள்ளும்படி ஏராளமான தரவுகளுடன் எழுதப்பட்டுள்ள இந்த நூல் பலருக்கும் அரசியலில் பல தெளிவுகளைத் தரும் என்றே நம்புகிறேன். அதன் பொருட்டே அதைத் தமிழில் மொழியாக்கம் செய்துள்ளோம்.

கட்டுரையாளர் குறிப்பு:

Truths and Lies of Nationalism According to Savarkar by Rajan Kurai

ராஜன் குறை கிருஷ்ணன் – பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி. இவரைத் தொடர்புகொள்ள: rajankurai@gmail.com

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பொங்கல் ஸ்பெஷல்: சேமியா சர்க்கரை பொங்கல்

பிக்பாஸ் சீசன் 7: வரலாற்றை மாற்றியெழுதி… டைட்டில் வின்னராக மகுடம் சூடிய அர்ச்சனா

இந்த பொங்கல் தளபதி பொங்கல்: G.O.A.T படக்குழு அறிவிப்பு!

அதிமுக ‘இடத்தில்’ நாம் தமிழர்: பொதுக்குழுவில் நடந்தது என்ன?

Truths and Lies of Nationalism According to Savarkar

+1
0
+1
0
+1
0
+1
3
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *