மறைந்த முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணாவின் 115வது பிறந்தநாளான இன்று (செப்டம்பர் 15) அவரது சிலைக்கு அரசியல் தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.
மறைந்த முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணாவின் 115வது பிறந்தநாள் இன்று. அவரது பிறந்தநாளை முன்னிட்டு திமுக மற்றும் அதிமுக நிர்வாகிகள் பலரும் அவரது உருவச்சிலை மற்றும் உருவப்படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.
அறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் மகளிர் உரிமைத் தொகை திட்டம் இன்று தொடங்க உள்ளது. இந்த திட்டத்தை தொடங்கி வைப்பதற்காக காஞ்சிபுரம் சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின் அன்னை இந்திரா காந்தி சாலையில் மாநகராட்சி வளாகத்தில் உள்ள பேரறிஞர் அண்ணாவின் உருவச் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அப்போது அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, காஞ்சிபுரம் மேயர், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், காஞ்சிபுரம் துணை மேயர், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் உடன் இருந்தனர்.
அதே போன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உள்ள அறிஞர் அண்ணாவின் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து, உருவப்படத்திற்கு மலர் தூவி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். அப்போது திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு, அமைச்சர்கள் சேகர் பாபு, மா.சுப்பிரமணியன், சென்னை மேயர் பிரியா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
சென்னை அண்ணா சாலையில் உள்ள அறிஞர் அண்ணாவின் உருவச் சிலைக்கு கீழ் வைக்கப்பட்டுள்ள உருவ படத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கும்பகோணம் சுவாமி மலையில் உள்ள அறிஞர் அண்ணாவின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவருடன் அமமும நிர்வாகிகள் உடனிருந்தனர்.
மோனிஷா
பாரதிராஜாவுக்கே நடிப்பு சொல்லிக்கொடுத்த இயக்குநர்!
காய்ச்சலால் பயிற்சி மருத்துவர் உயிரிழப்பு!