திமுக மதிப்பதே இல்லை: காங்கிரஸ் கூட்டத்தில் கரைச்சல்!

அரசியல்

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவரான அழகிரி விரைவில் மாற்றப்படப் போகிறார் என்ற தகவல்கள் அலையடித்துக் கொண்டே இருக்கும் நிலையில் ஜூலை 13 ஆம் தேதி மாவட்டத் தலைவர்கள் கூட்டத்தைக் கூட்டினார்.

இந்தக் கூட்டத்தில் மொத்தமுள்ள 78 மாவட்டத் தலைவர்களில் கணிசமானவர்களே கலந்துகொண்டனர். அதேபோல சில மாதங்களாகவே அழகிரியைத் தொடர்ந்து புறக்கணித்து வரும் சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் செல்வப் பெருந்தகை, முன்னாள் தலைவர்களான ஈவிகேஸ் இளங்கோவன், தங்கபாலு, திருநாவுக்கரசர் ஆகியோரும் கலந்துகொள்ளவில்லை.

கூட்டம் தொடங்கியதும் அழகிரி, ‘வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு நாம் தயாராக வேண்டும், பூத் கமிட்டிகளை அமைக்க வேண்டும், பகுதி காங்கிரஸ் கமிட்டிகளை பலப்படுத்த வேண்டும். பூத் கமிட்டிகளை அமைத்தால்தான் திமுக நம்மை மதிப்பார்கள்’ என்று பேசினார்.

அப்போது பேசிய மாவட்டத் தலைவர்கள் பலர், ‘பூத் கமிட்டிகள் அமைத்தாலும் அமைக்காவிட்டாலும் திமுகவினர் நம்மை மதிப்பதே இல்லை. கடந்த உள்ளாட்சித் தேர்தலிலும் நம்மை மதிக்கவில்லை. வரும் நாடாளுமன்றத் தேர்தலிலாவது மதிப்பார்களா என்று தெரியவில்லை. அரசு வேலை வாய்ப்புகளில் காங்கிரஸ் கட்சியினரின் சிபாரிசுகள் எல்லாம் எடுபடுவதே இல்லை. இதுபற்றி எல்லாம் நீங்கள் முதலமைச்சர் ஸ்டாலினிடம் பேச வேண்டும்’ என்று முறையிட்டனர்.

நாகப்பட்டினம் மாவட்ட தலைவர் அமிர்தராஜா பேசும்போது, ‘வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கும் நமது தலைவர் அழகிரியே கட்சித் தலைவராக தொடரவேண்டும்’ என்றார். அவரது பேச்சுக்கு அழகிரி ஆதரவு மாவட்டத் தலைவர்கள் ஆதரவு தெரிவித்தனர்.

காங்கிரஸ் எஸ்.சி.எஸ்.டி பிரிவு தலைவர் ரஞ்சன் குமார் பேசும்போது மைக்கில் தமிழக சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் செல்வப் பெருந்தகையை தாக்கிப் பேசத் தொடங்கினார். அப்போது அழகிரி, ‘இதெல்லாம் இங்கே பேசக் கூடாது. தலைவர் என்கிற முறையில் தனிப்பட்ட முறையில் என்னிடம் சொல்லுங்கள். கூட்டங்களில் இப்படியெல்லாம் பேசக் கூடாது’ என்று அந்த சப்ஜெக்ட்டை ஆஃப் செய்தார்.

ஆனால் அழகிரியின் பேச்சைக் கேட்காமல் தொடர்ந்து பேசிய ரஞ்சன் குமார், ‘இங்கே பேச நீங்கள் வாய்ப்பளிக்கவில்லை. அதனால் நான் செல்வப் பெருந்தகையை பற்றி இனி பொதுவெளிகளில் பேசுவேன், என்னை நீங்கள் கண்டிக்கக் கூடாது, என் மேல் நடவடிக்கை எடுக்கக் கூடாது’ என்று அழகிரிக்கே ஆர்டர் போடும் வகையில் உரிமையோடு மிரட்டலாக பேசினார். அதற்கு அழகிரி எதுவும் பதிலளிக்கவில்லை. ரஞ்சன் குமார் அழகிரியின் தீவிர ஆதரவாளர் என்பது குறிப்பிடத் தக்கது.


நேற்று (ஜூலை 12) சத்தீஸ்கர் காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாற்றப்பட்டிருக்கிறார். சட்டமன்றத் தேர்தலை எதிர்கொண்டிருக்கும் சத்தீஸ்கர் மாநில காங்கிரஸ் தலைவராக எம்.பி.யான தீபக் மாஜியை நியமித்திருகிறது தேசியத் தலைமை. இந்த வகையில் தமிழ்நாட்டுக்கும் மாற்றம் வரும் என்ற நிலையில்தான் நாடாளுமன்றத் தேர்தல் வரை அழகிரியே தலைவராக இருக்க வேண்டும் என்ற குரலை இந்தக் கூட்டத்தின் மூலமாக ஒலிக்க விட்டிருக்கிறார் அழகிரி என்கிறார்கள் சத்தியமூர்த்தி பவன் வட்டாரத்தில்!
வேந்தன்

டிஜிட்டல் திண்ணை: ஸ்டாலினுக்கு எதிராக கலைஞர் பாணி… எடப்பாடி நடத்திய அவசர, ரகசிய மீட்டிங்!

அமுதம் அங்காடியில் தக்காளி, பருப்பு : விலை இதோ!

+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *