தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கள ஆய்வில் முதலமைச்சர் என்ற நிகழ்ச்சிக்காக மார்ச் 5, 6 தேதிகளில் மதுரையில் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் நடைபெற்று வரும் அரசுத் திட்டங்கள் பற்றிய ஆய்வையும், சட்டம் ஒழுங்கு பற்றிய ஆய்வையும் அவர் இந்த பயணத்தில் மேற்கொண்டார்.
இந்த மதுரை பயணத்தின்போது முதலமைச்சர் ஸ்டாலின் தனது அண்ணனான மு.க. அழகிரியை சந்திப்பார் என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் மட்டுமல்லாமல் மதுரை அதிகாரிகள் வட்டாரத்திலும் எழுந்தது. அந்த எதிர்பார்ப்புக்குக் காரணமும் இருந்தது. அதாவது முதலமைச்சர் ஸ்டாலின் வருகையை ஒட்டி மதுரையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு அரசு அலுவலகங்கள் வண்ணம் பூசப்பட்டன.

இந்த வகையில் அழகிரியின் வீடு அமைந்துள்ள சத்திய சாய் நகர் பகுதியிலும், அந்த பகுதிக்கு செல்லும் வழியில் இருக்கும் ஜெய்ஹிந்த் புரம் மார்க்கெட் பகுதியிலும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு சாலைகள் டச்சப் செய்யப்பட்டன. இதனால் மதுரை வரும் முதல்வர் அழகிரியின் வீட்டுக்கு நிச்சயம் வருவார் என்று எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் மட்டுமல்லாமல் அதிகாரிகள் தரப்பிலும் ஏற்பட்டது.
இதனை வலுப்படுத்துவது போல அழகிரியும் தனது ஆதரவாளர்களிடம், ‘இந்த முறை தம்பி என் வீட்டுக்கு வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது அதனால் யாரும் இங்கே கூட்டம் கூட வேண்டாம்’ என்று முன்கூட்டியே சொல்லியிருந்தார்.
மேலும் தனது தம்பியான முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பிடித்த உணவு வகைகளை சமைப்பதற்காக ஸ்பெஷலாக சமையல்காரரையும் அமர்த்தி இருந்தார் அழகிரி. ‘என் தம்பிக்கு அது பிடிக்கும் இது பிடிக்கும்’ என்றெல்லாம் அந்த சமையல்காரரிடம் சொல்லி விருந்து வைத்து மகிழ்விக்க காத்திருந்தார் அழகிரி.

ஆனால் மதுரையில் தனது பயணத்தின் முதல் நாளான ஐந்தாம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் தனது அண்ணன் அழகிரி வீட்டுக்கு செல்லவில்லை. மதிய சாப்பாட்டை சர்க்யூட் ஹவுசிலேயே முடித்துக் கொண்டார் ஸ்டாலின். அன்று மாலையாவது தன் வீட்டுக்கு வருவார் என்று அழகிரி எதிர்பார்த்தார். அழகிரி ஆதரவாளர்களும் எதிர்பார்த்தனர்.
ஆனால் அன்று மாலையும் முதலமைச்சரால் அழகிரி வீட்டுக்கு செல்ல முடியவில்லை. மறுநாள் ஆறாம் தேதியும் முதலமைச்சர் வருவார் என்று எதிர்பார்ப்பு அழகிரி ஆதரவாளர்களிடம் இருந்தது. ஆனால் தன் மதுரை பயணத்தின் இரண்டாம் நாளான மார்ச் 6ஆம் தேதியும் அழகிரி வீட்டுக்கு ஸ்டாலின் செல்லவில்லை.
இதுகுறித்து அழகிரிக்கு நெருக்கமான வட்டாரங்களில் பேசினோம்.
“மார்ச் 6ஆம் தேதி பிற்பகல் மதுரையில் இருந்து நாகர்கோவிலுக்கு சாலை மார்க்கமாக புறப்பட்டார் முதலமைச்சர் ஸ்டாலின். புறப்படுவதற்கு முன்பு தனது அண்ணன் அழகிரியிடம் சுமார் 25 நிமிடங்கள் தொலைபேசியில் பேசி இருக்கிறார்.
பரஸ்பர உடல்நிலை விசாரித்துவிட்டு, ‘வீட்டுக்கு வருவதாக தான் இருந்தேன். ஆனால் வேலைகள் ரொம்ப அதிகமா இருக்கு. ஞாயிற்றுக்கிழமை கூட கடுமையான வேலைகள் தான். அதனால தான் வீட்டுக்கு வர முடியல’ என்று முதலமைச்சர் ஸ்டாலின் தன் அண்ணன் அழகிரியிடம் சொல்ல… ‘பரவாயில்லப்பா. பாத்துக்கலாம். ரொம்ப அலையாத உடம்ப பாத்துக்க’ என்று உருக்கமாக பேசியிருக்கிறார் அழகிரி.
முதலமைச்சர் ஸ்டாலின் தன் வீட்டுக்கு வராததில் சின்ன வருத்தம் இருந்தாலும் நேற்று மார்ச் 7 ஆம் தேதி மாலை தனது நெருக்கமான ஆதரவாளர்கள் சிலரை மட்டும் இல்லத்துக்கு அழைத்து இது பற்றி விளக்கியிருக்கிறார் அழகிரி” என்றனர்.

அதிகாரிகள் தரப்பில் நாம் பேசும்போது இந்த சந்திப்பு நடக்காமல் போனதற்கான இன்னொரு காரணத்தை விளக்கினார்கள்.
“முதலமைச்சர் ஸ்டாலின் தனது பிரத்தியேக நிகழ்ச்சியான கள ஆய்வில் முதலமைச்சர் என்ற நிகழ்ச்சிக்கு வந்துள்ளார். இந்த நிலையில் தனது அண்ணனை பார்க்க அவரது வீட்டுக்கு சென்றாலோ… அல்லது அண்ணன் அழகிரியை தனது அலுவலகத்துக்கு வரவைத்து சந்தித்தாலோ மதுரையின் இரண்டு நாள் கள ஆய்வு பற்றிய செய்திகள் பின்னுக்கு தள்ளப்பட்டு 9 ஆண்டுகளுக்குப் பிறகு அண்ணன் தம்பி சந்தித்தது மட்டுமே பேசப்படும்.
மேலும் முதலமைச்சரின் அரசு முறை பயணம் குடும்ப முறை பயணம் என்ற அளவுக்கு செய்திகளில் பெரிய அளவில் விவாதத்திற்கு உள்ளாகும். எனவே இந்த நிலையில் குடும்ப ரீதியான சந்திப்புகள் வேண்டாம் என முதலமைச்சருக்கு கடைசி நேரத்தில் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. அந்த அடிப்படையில் தான் இந்த சந்திப்பு தவிர்க்கப்பட்டுள்ளது” என்று கூறுகிறார்கள்.
’அழகிரி- ஸ்டாலின் சந்திப்பு’ என்ற மதுரை சம்பவம் நடந்திருந்தால், எல்லா சேனல்களிலும் இதுதான் விவாதப் பொருளாகியிருக்கும்.
வேந்தன்
எடப்பாடி உருவப்படம் எரித்தது எனக்கு தெரியாது: அண்ணாமலை
எடப்பாடியின் உருவப்படம் எரிப்பு: பாஜகவினர் கைது!