திருவண்ணாமலையில் கடல் என்றால் அது ஏதோ தமிழ்நாட்டின் பூகோள அமைப்பையே திருத்தி எழுதுவதாகத்தான் இருக்கும். திருவண்ணாமலை என்றாலே மலைதான் நினைவுக்கு வரும்.
அந்த திருவண்ணாமலை திமுகவில் மலை போன்ற உறுதியான அமைச்சர் எ.வ. வேலு இருப்பதால், கடந்த 22 ஆம் தேதி திருவண்ணாமலை மாவட்டத்தில் ’கழகக் கடலும் கொண்டுவரப்பட்டது’ என்கிறார்கள் திமுக நிர்வாகிகளே.
நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் திமுக ஒவ்வொரு மண்டலமாக பாகப் பொறுப்பாளர்களின் மாநாட்டை பயிற்சிப் பாசறையாக நடத்தி வருகிறது. ஏற்கனவே டெல்டா மண்டல வாக்குச் சாவடி பொறுப்பாளர்கள் மாநாடு திருச்சியிலும், தென் மண்டல மாநாடு ராமநாதபுரத்திலும், மேற்கு மண்டல மாநாடு காங்கேயத்திலும் நடந்தது.
வடக்கு மண்டல மாநாடு- கேட்டு வாங்கிய வேலு
அந்த வகையில் வடக்கு மண்டல வாக்குச் சாவடி பொறுப்பாளர்கள் மாநாட்டை நடத்தும் பொறுப்பை கேட்டு வாங்கினார் திருவண்ணாமலை தெற்கு மாவட்டச் செயலாளரும் அமைச்சருமான எ.வ. வேலு.
திருவண்ணாமலை தெற்கு, திருவண்ணாமலை வடக்கு, தருமபுரி கிழக்கு, தருமபுரி மேற்கு, கள்ளக்குறிச்சி வடக்கு, கள்ளக்குறிச்சி தெற்கு, கிருஷ்ணகிரி கிழக்கு, கிருஷ்ணகிரி மேற்கு, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர், விழுப்புரம் வடக்கு, விழுப்புரம் தெற்கு ஆகிய 13 மாவட்டங்களின் வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் இதில் பங்கேற்றுள்ளனர்.
13 மாவட்டங்களில் உள்ள ஒவ்வொரு வாக்குச் சாவடிப் பொறுப்பாளர்கள், ஒன்றிய செயலாளர்கள், கழக நிர்வாகிகள் என சுமார் 14 ஆயிரம் பேர் இந்த மாநாட்டில் பங்கேற்றனர்.
உள்ளூர் இசை முதல் உலக இசைவரை… முதல்வருக்கு வரவேற்பு
எ.வ.வேலு நிகழ்ச்சி என்றாலே அந்த மாவட்ட எல்லையில் முதலமைச்சருக்கு கொடுக்கப்படும் வரவேற்பு தொடங்கி…. நன்றியுரை முடிந்து வழியனுப்பி வைக்கும் நேரம் வரை ஒவ்வொரு நொடியும் திட்டமிட்டு செதுக்கப்பட்டிருக்கும் என்பது திருவண்ணாமலையில் மீண்டும் மெய்ப்பிக்கப்பட்டிருக்கிறது.
22 ஆம் தேதி நிகழ்ச்சிக்காக 21 ஆம் தேதி மாலை சென்னையில் தன் இல்லத்தில் இருந்து புறப்பட்டார் முதலமைச்சர் ஸ்டாலின். செஞ்சி வழியாக கீழ்ப்பெண்ணாத்தூர் தாண்டி திருவண்ணாமலை மாவட்ட எல்லையான சோமாசிப்பட்டி வரும்போது வேறு லெவல் வரவேற்பை எதிர்கொண்டார் முதல்வர்.
21 ஆம் தேதி பிற்பகல் இரண்டு மணி முதலே சோமாசிப்பட்டி முதல் திருவண்ணாமலை வரை பத்து பாயின்ட்டுகளில் வித விதமான கலை வடிவங்களில் முதலமைச்சருக்கு வரவேற்பு கொடுக்க திட்டமிட்டு அதை மேற்பார்வையிட கள்ளக்குறிச்சி தெற்கு மாசெவும், ரிஷிவந்தியம் எம்.எல்.ஏ.வுமான வசந்தம் கார்த்திகேயனை நியமித்தார்,
அவர் ஒவ்வொரு பாயின்ட்டாக போய் வரவேற்பு ஏற்பாடுகளை கவனித்து வந்தார். திருவண்ணாமலை வடக்கு மாசெ தரணி வேந்தனும் இந்த ஒருங்கிணைப்பில் பணியாற்றினார். வசந்தத்தின் டீம்தான் வரவேற்பில் சுற்றிச் சுழன்றது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
முதலமைச்சர் ஸ்டாலின் மாவட்ட எல்லையான சோமாசிப்பட்டியில் இரவு வந்தடையும்போது ஏதோ அந்த இடம் பகல் போல் விளக்குகளால் மின்னியது, அதுமட்டுமல்ல முதல்வரின் வாகனம் தொண்டர்களின் முற்றுகையால் தத்தளித்தது. அந்த இடமே வரவேற்பு இசை முழக்கங்களால் அதிர்ந்தது.
திருவண்ணாமலை எல்லையை முதல்வர் ஸ்டாலின் தீண்டும்போது நாட்டுப்புற மேள இசைக் கலைஞர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், நாதஸ்வர- தவில் கலைஞர்கள் 300 பேர் என சுமார் ஆயிரத்து முன்னூறு கலைஞர்களின் கலை வடிவங்கள் முழங்கின. தொண்டர்களின் எண்ணத் துடிப்பையும், மக்களின் எண்ணத் துடிப்பையும் அந்த கலைஞர்கள் பேரிசையாய் வெளியிட்டனர்.
அங்கிருந்து திருவண்ணாமலை செல்லும் வரைக்கும் முதலமைச்சர் வாகனத்துக்கு வேகம் என்பது மறந்துபோய்விட்டது. சோமாசிப்பட்டியில் இருந்து ஒவ்வொரு பாயின்ட்டாக வெரைட்டியான வரவேற்பை திட்டமிட்டிருந்தார் எ.வ.வேலு. ஓர் இடத்தில் பொம்மலாட்ட வரவேற்பு, அடுத்து பரத நாட்டிய வரவேற்பு, அடுத்த ஓரிடத்தில் திமுக ஆன்மீகத்துக்கு எதிரியல்ல என்பதை நிரூபிக்கும் வகையில் நவராத்திரியில் நவ லட்சுமிகளின் வரவேற்பு, சினிமா பாட்டு, இன்னொரு இடத்தில் கதகளி, அப்புறம் மேற்கத்திய இசை என்று இந்திய இசை வடிவங்கள், உலக இசை வடிவங்கள் அனைத்தையும் முதல்வரின் வரவேற்புக்காக திருவண்ணாமலைக்கு கொண்டு வந்துவிட்டார் எ.வ.வேலு.
அருணை மருத்துவ உள்கட்டமைப்பின் அடுத்த கட்டம்!
இப்படியாக திருவண்ணாமலை திமுக கொடுத்த வரவேற்பிலேயே டயர்ட் ஆகிவிட்டார் முதலமைச்சர். அன்று 21 ஆம் தேதி இரவு அருணை விருந்தினர் மாளிகையில் ஓய்வெடுத்தார் முதல்வர்.
மறுநாள் காலை அருணை மருத்துவமனை திருவண்ணாமலை மக்களுக்கு ஆற்றி வரும் சேவையின் அடுத்த கட்டத்தைத் துவக்கி வைத்தார் முதலமைச்சர். ஆம். திருவண்ணாமலை, அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் கட்டப்பட்டுள்ள 600 அதிநவீன படுக்கை வசதி கொண்ட பல்நோக்கு மருத்துவமனையை திறந்து வைத்தார்.
அப்போது பொதுச்செயலாளர் – நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி., முதன்மைச் செயலாளர்- அமைச்சர் கே.என். நேரு, அமைச்சர் க. பொன்முடி, அமைச்சர் எ.வ. வேலு, சட்டப்பேரவை துணைத் தலைவர் கு.பிச்சாண்டி, அருணை மருத்துவக் கல்லூரி தலைவர் திருமதி சங்கரி, துணைத் தலைவர் எ.வ.வே. குமரன், மருத்துவக் கல்லூரி இயக்குநர் எ.வ.வே. கம்பன் உள்ளிட்டோர் இந்த திறப்பு விழாவில் கலந்துகொண்டனர்.
திருவண்ணாமலையின் மருத்துவ உள்கட்டமைப்புக்கு மிக முக்கியமான அடையாளமாக திகழும் இந்த பன்னோக்கு மருத்துவமனை பற்றி குமரனும், கம்பனும் முதல்வரிடம் விளக்கினார்கள்.
ஏற்கனவே மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட படுக்கைகள் இருப்பதை சுட்டிக் காட்டி, இப்போது பன்னோக்கு மருத்துவமனையின் தேவை பற்றியும் இங்கே கொண்டுவரப்பட்டிருக்கும் நவீன உபகரணங்கள் பற்றியும் முதல்வரிடம் விளக்கினார்கள். மருத்துவமனை வளாகத்தில் கலைஞர் சிலையையும் திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின். இந்நிகழ்ச்சி முடிந்து முதல்வர் சில சந்திப்புகளை நடத்தினார்.
வியக்க வைக்கும் மாநாட்டு ஏற்பாடுகள்
இதற்கிடையே திருவண்ணாமலையில் இருந்து சுமார் ஐந்தாறு கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் கோம்பை அருணாசலா சுகர் மில் இருந்த இடத்தில் பாகப் பொறுப்பாளர்கள் காலை முதலே குவியத் தொடங்கினர். அந்த இடத்தை மிக பிரம்மாண்டமான அரங்கமாக மாற்றியிருந்தார் வேலு.
ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் விரிவான இட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் வந்த பாகப் பொறுப்பாளர்களை காலை 10 மணியளவிலேயே ஒன்றிய செயலாளர்கள் மூலம் அந்தந்த இடங்களில் அமர வைத்தனர், அவர்கள் அரங்கத்துக்குள் வரும்போதே கல்யாணத்துக்கு கொடுக்கப்படும் தாம்பூலப் பை போல கழகத் தாம்பூலப் பை தரப்பட்டது. அதில் ஒரு வாட்டர் பாட்டில், நோட்டு-பேனா, கொஞ்சம் ஸ்னாக்ஸ் ஆகியவை வைக்கப்பட்டிருந்தன.
பிரம்மாண்டமாகத் தொடங்கிய மாநாட்டில் பாகப் பொறுப்பாளர்களுக்கு பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டன. ’வாக்குச் சாவடிப் பொறுப்பாளர்களின் கடமைகளும் பணிகளும்’ என்ற தலைப்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ எம்.பி வகுப்பு எடுத்தார். ’வாக்காளர் பட்டியல் சரிபார்ப்புப் பணிகள் மற்றும் அதன் முக்கியத்துவம்’ குறித்தும், அதற்கான செயலிகள் குறித்தும் வேலூர் மாவட்டச் செயலாளரான அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார் வகுப்பு எடுத்தார். அதையடுத்து’சமூக வலைத்தளங்களின் பயன்பாடும், செயல்படுத்த வேண்டிய முறையும்‘ என்பது குறித்து பொறியாளர் அணிச் செயலாளர் எஸ்.கே.பி. கருணா வகுப்பெடுத்தார்.
பாகப் பொறுப்பாளர்களை பிரம்மிக்க வைத்த நள பாகம்!
இப்படி தேர்தல் மெக்கானிசம் குறித்த வகுப்புகள் நடந்த நிலையில் மதிய உணவு இடைவேளை வந்தது. திமுகவின் கட்சி நிகழ்ச்சிகளில் இப்படி ஒரு உணவு உபசரிப்பு இல்லை என்று சொல்லும் விதமாக… பாகப் பொறுப்பாளர் மாநாட்டுக்கு சற்றும் சளைக்காத வகையில் நள பாகப் பொறுப்பாளர் மாநாடு போல உணவுக் கூடம் அமைந்தது. பிரபல சமையல் கலை நிபுணர் மாதம்பட்டி சிவக்குமார் குழுவினர்தான் உணவு சமைக்கும் பொறுப்பேற்றிருந்தனர்.
மாநாட்டு வளாகத்தில் எப்படி ஒவ்வொரு மாவட்டம் தொகுதி என இடம் வரையறுக்கப்பட்டிருந்ததோ, அதேபோல உணவுக் கூடத்திலும் மாவட்டம் தொகுதி வாரியாக பந்தி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஒரு பந்திக்கு ஆயிரம் பேர் அமரும் வகையில் விரிவான ஏற்பாடுகள், தலை வாழை இலை வைத்து அதிலே வைக்கப்பட்ட பதார்த்தங்கள் வேறு லெவல்,
சாதம், சாம்பார், ரசம், கூட்டு- பொறியல், சிக்கன் குழம்பு, மட்டன் குழம்பு, சிக்கன் வறுவல், மீன் வறுவல், மட்டன் பிரியாணி, பாயாசம் எல்லாம் சாப்பிட்டு ஏப்பம் வந்த பிறகு இனிமையான முத்தாய்ப்பாய் ஒரு வாழைப் பழம் என்று கழகக் கல்யாணத்தையே நடத்திவிட்டார் எ.வ. வேலு.
மட்டன் பிரியாணி என்றால் ரெண்டு பீஸு, மீதி ரைஸ் என்பது மாதிரி இல்லை. போதும் போதும் என்று சொல்கிற அளவு மட்டன் பீஸ்களும், நல்லி எலும்புகளும் பரிமாறப்பட்டன.
உணவும் ருசி… உபசரிப்பும் ருசி…
உணவு உபசரிப்பு குழுவின் தலைவராக திருப்பத்தூர் எம்.எல்.ஏ நல்லதம்பியை நியமித்திருந்தார் அமைச்சர் எ.வ.வேலு. அவர் உணவுக் கூடத்தில் பணியாளர்களோடு சேர்ந்து, அனைத்து பாகப் பொறுப்பாளர்களையும் கனிவாக உபசரித்தார்.
14 ஆயிரம் பாகப் பொறுப்பாளர்களுக்கும் மஞ்சள் நிற பேட்ச் அணிவிக்கப்பட்டிருந்தது. ஒரு பந்திக்கு ஆயிரம் பேர் வீதம் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் தொகுதிவாரியாக எழுதி வைக்கப்பட்டிருந்த இடத்தில் அமர்ந்து ஆற அமர சாப்பிட்டனர். ஏற்பாடுகள் விரிவாக இருந்ததால், அவர் சாப்பிட்டு முடிக்கும் வரை இவர் காத்திருக்கும் நிலை எல்லாம் இல்லை.
அதேபோல மாவட்டச் செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், தொகுதிப் பார்வையாளர்கள் ஆகியோருக்கு என்று தனி உணவுக் கூடம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அங்கே பெரிய டேபிள் போட்டு சுற்றிலும் நாற்காலிகள் இருந்தன. இப்படி உணவு ருசி மட்டுமல்ல, ஏற்பாடுகளும் ருசியாகவே இருந்தன.
விழா வேந்தன் வேலு
ஒவ்வொரு பாகப் பொறுப்பாளரும் சாப்பிட்டு விட்டு திருப்தியாக வந்து அமர்ந்த நிலையில்தான் முதலமைச்சர் அரங்கத்துக்கு வந்தார்.
அதன் பின் திமுக பொதுச்செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் தலைமையுரை நிகழ்த்தினார். திருவண்ணாமலை தெற்கு மாவட்டச் செயலாளரும், பொதுப்பணித்துறை அமைச்சருமான எ.வ. வேலு வரவேற்புரை நிகழ்த்தினார்.
அரங்கத்தில் அனைவரும் வேலுவுக்கு நன்றியும் பாராட்டும் சொல்லிக் கொண்டிருக்க, அவையடக்க வெளிப்பாடாக வந்தவர்களுக்கு திருவண்ணாமலை வடக்கு மாவட்டச் செயலாளர் எம்.எஸ்.தரணிவேந்தன் நன்றியுரை ஆற்றினார்.
அதன் பின் முதலமைச்சர் ஆற்றிய உரையில்தான் திமுகவின் பாகப் பொறுப்பாளர்களுக்கு உரமூட்டினார்.
முதல்வர் பேசும்போது அமைச்சர் எ.வ.வேலுவைப் பற்றி குறிப்பிட்டார்.
“இந்த பாக முகவர்களின் வடக்கு மண்டல மாநாட்டை எழுச்சியோடும் ஏற்றத்தோடும் அருணாசலம் நகரில் இருக்கும் கலைஞர் பெயரால் அமைந்த திடலில் நடத்திக் காட்டியிருக்கும் நம்முடைய மதிப்பிற்குரிய எ.வ.வேலு அவர்களுக்குப் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
“எதையும், யாரும் ஏவாமலேயே செய்யக் கூடியவர் வேலு” என்று தலைவர் கலைஞர் அவர்கள் பாராட்டினார். திருவாரூரில் கலைஞர் கோட்டம் – மதுரையில் கலைஞர் நூலகம் – சென்னையில் கலைஞர் ᳚நூற்றாண்டு பல்நோக்கு மருத்துவமனை இதெல்லாம் எவ்வாறு அமைய வேண்டும் என்று நான் விரும்பினேனோ, அதே மாதிரி, அழகோடும் கம்பீரத்தோடும் அமைத்தவர்தான் நம்முடைய அன்புக்குரிய வேலு அவர்கள்!
கழகத்தின் ‘விழா வேந்தன்’ என்றால் அது, வேலுதான் என்று திருவண்ணாமலை கலைஞர் சிலை திறப்பு விழாவில் நான் சொன்னேன். அப்படிப்பட்ட அவரோடு தோளோடு தோள் நின்று பணியாற்றும் ஒருங்கிணைந்த திருவண்ணாமலை மாவட்டக் கழக நிர்வாகிகளுக்கு தலைமைக் கழகத்தின் சார்பிலும் – என்னுடைய முறையிலும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார் முதலமைச்சர் ஸ்டாலின்.
திருவண்ணாமலை பாகப் பொறுப்பாளர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் அறிவு, மனது, வயிறு என மூன்றும் நிரம்பி மாலை புறப்பட்டார்கள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
-வேந்தன்
பிறந்தநாளில் புரொபோசல்… அமலாபால் ரியாக்சன்: க்யூட் வீடியோ!
மகளிர் உரிமைத் தொகை… 11 லட்சம் பேர் மேல்முறையீடு: அமைச்சர் உதயநிதி