ஆ.ராசா, நாடாளுமன்ற உறுப்பினர் Sanatana Dharma law does not apply Constitution
சட்டமும் மதமும் வரலாற்றில் சமூக நிறுவனங்களாக வளர்ச்சி பெறுவது இந்தியாவில் மட்டுமல்ல, ரோம, யூத, கிறித்துவ, இஸ்லாமிய நாடுகள் உட்பட உலகெங்கிலும் காணக்கிடைக்கும் ஒரு போக்குதான். ஆங்கில காலனிய ஆட்சியில் இந்தியாவின் இறையியல் கோட்பாடுகள், தீவிர ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. Sanatana Dharma law does not apply Constitution
‘சனாதன தர்மம்: இந்து மதம் மற்றும் அதன் தர்மங்கள் குறித்த ஒரு தொடக்க நிலைக் கையேடு’ (Sanatana Dharma: An Elementary Text Book of Hindu Religion and Ethics) என்கிற நூலை, பனாரஸ் மத்திய இந்து கல்லூரி 1916 இல் வெளியிட்டுள்ளது. அந்நூலில், ‘இந்து’ என்பது ஒரு மதத்தை அடையாளப்படுத்துவதைவிட ஓர் இனத்தை அடையாளப்படுத்தும் சொல் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.
பெர்சியர்களும் கிரேக்கர்களும் அச்சொல்லை, சிந்து நதிக்கு அப்பால் வாழும் மனிதர்களைக் குறிக்கப் பயன்படுத்தினர். அந்நூலின் தொடக்க வரிகளே இதை நமக்கு தெளிவாகச் சொல்கின்றன: “சனாதன தர்மம் என்றால் முடிவற்ற மதம்; பழமையான சட்டம்; அது பலப்பல யுகங்களுக்கு முன்பு மனிதர்களுக்கு வழங்கப்பட்ட வேதத்தை அடிப்படையாகக் கொண்டது. அது ஆரிய இனத்தின் முதல் தேசத்திற்கு வழங்கப்பட்டதால் அது ஆரிய மதம் என்றும் அழைக்கப்படுகிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
உண்மையில் ‘சனாதன தர்மம்’ என்றால் என்ன? அந்தப் பதத்தின் வரையறைகளும் உள்ளடக்கமும் அது தோன்றிய இம்மண்ணில் பொதுமக்களின் – தர்க்கங்களுக்கோ, ஆய்வுகளுக்கோ – உட்படுத்தப்பட்டதே இல்லை. சனாதன தர்மம்
பற்றி இதுவரையில் வந்திருக்கும் பெரும்பாலான விளக்கங்கள் இந்தியர் அல்லாத, இந்து அல்லாத இந்தியவியல் ஆய்வாளர்களிடமிருந்து, குறிப்பாக ஐரோப்பிய அறிஞர்களிடமிருந்துதான் வந்துள்ளன.
ஆனால், இருபத்தோராம் நூற்றாண்டின் இந்தியாவில், சனாதன தர்மம் பற்றி மேற்கொள்ளப்படும் எந்தவிதமான விவாதத்தையும், மக்களிடத்தில் பிளவை உண்டாக்குகிற, வகுப்புவாத அரசியலின் ஒரு விவாதப்பொருளாக முன்னிறுத்துவதற்கான முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சனாதன தர்மம் குறித்து அண்மையில் நடைபெற்ற விவாதங்களில் பிரதமரும், மற்றவர்களும் வெளிப்படுத்தியிருக்கும் கருத்துக்கள் குறுகிய எண்ணம் கொண்ட மோசமான கருத்துக்கள் ஆகும். அத்தகைய தவறான கருத்துக்களால் இந்த விவாதம் முழுவதுமாகப் பாழ்படுத்தப்பட்டுள்ளது. Sanatana Dharma law does not apply Constitution
1916 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ‘சனாதனம்’ குறித்த இப்புத்தகம் பற்றிய விளக்கத்திற்கு வருவோம். ‘ஸ்ருதி’ என்பது ‘பிறரால் சொல்லி கேட்கப்பட்டதை’ குறிக்கிறது என்றும்; ‘ஸ்மிருதி’ என்பது ‘நினைவில் வைத்துக் கொள்ளப்பட்டு வருபவை’ என்றும் இந்தப் புத்தகம் கூறுகிறது. ஆரியர்கள் வசித்த பகுதியில் நடைமுறையில் இருந்த ஆரியச் சட்டங்களின் குறிப்பிடத்தகுந்த கூறுகளாக விளங்கிய மந்திரம், பிராமணம், உபநிடதம், மனுஸ்மிருதி உள்ளிட்ட வேதங்களின் தொகுப்புகள், பின்னாளில் இந்து மரபுகளில் உள்வாங்கப்பட்டன என்றும் இந்நூல் குறிப்பிடுகிறது.
1960களில் சனாதன தர்மம் குறித்த மற்றொரு புத்தகத்தை பம்பாயில் உள்ள பாரதிய வித்யா பவன் வெளியிட்டது. அரசியல் நிர்ணய சபையில் மிகச்சிறந்த பங்களிப்பை அளித்த திரு. கே.எம்.முன்ஷி இதே போன்ற விளக்கங்களுடன் அந்த நூலைத் தொகுத்திருந்தார். இந்த புத்தகங்கள் சில ‘உன்னதமான நெறிமுறைகளையும்’ தந்துள்ளன என்றும் அய்யமின்றி கூறலாம்.
சனாதன தர்மத்தை விளக்கும் இவ்விரு நூல்களிலும், ‘வர்ணம்’ என்ற பெயரில், பிராமணர் (அர்ச்சகர்கள்), சத்திரியர் (அரசர்கள்), வைசியர்கள் (வணிகர்கள்), சூத்திரர் (மற்ற மூன்று வகுப்பினருக்கும் சேவை செய்பவர்கள்) என வகைப்படுத்தப்பட்டு, பிறப்பின் அடிப்படையிலான தொழில் பிரிப்பு (Division of Labour) கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
பல்வேறுபட்ட கடமைகளை ஏற்று இந்த சமூகத்தை கௌரவிக்கும் பெண்களை இந்த இரண்டு நூல்களும் அடிமைப்படுத்தப்பட்ட, தாழ்ந்த நிலையில் வைத்திருக்க வலியுறுத்துகின்றன. இந்நூல்களைப் படிக்கும் எவரும் “சாதி அமைப்பை ஒரு சமூகத்தின் ‘செங்குத்தான பிரிவினை’ என்றும் அது – ஏறு வரிசையில் மதிப்பையும் இறங்கு வரிசையில் இழிவையும் அளிப்பதாக’ – மனிதர்களைப் பிறப்பு மற்றும் பாலின அடிப்படையில் தனித் தனியாக நீர்புகா பெட்டிகளில் அடைத்திருப்பதாக” டாக்டர் அம்பேத்கர் சொன்னதைப் புரிந்து கொள்ள முடியும்.
“வேதங்களை நம்புபவர்களுக்கும், வேதங்கள் பிழைகளுக்கு அப்பாற்பட்டு புனிதமானவை என்று நம்புபவர்களுக்கும், நால்வருணத்தை நம்புபவர்களுக்கும், யாகங்களின் செயல்திறனையும் புனிதத்தையும் முக்திக்கான வழிமுறைகளாக அவற்றை நம்புபவர்களுக்கும் மட்டுமே இந்து மதம் என்றில்லாமல், மிகவும் பரந்த அர்த்தத்தில்- இந்த கோட்பாடுகளில் நம்பிக்கை இல்லாத பௌத்தர்கள், சமணர்கள், சீக்கியர்கள் போன்றவர்களையும் சேர்த்துக் கொண்டு பரந்துபட்ட உணர்வில் ‘இந்து மதம்’ என்று பயன்படுத்துகிறோம். புத்தரும் மகாவீரரும் வேத பிராமணர்களிடமிருந்து வேறுபட்டவர்கள்; வேதங்களின் கற்பிதங்களை அவர்கள் நம்பவில்லை. அவர்கள் கொண்ட வேறுபாடுகள் மத நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டவை. என்றாலும் அவர்கள் தங்களைப் பின்பற்றுபவர்களுக்கென்று ஒரு தனி சட்ட அமைப்பை முன்மொழியவுமில்லை” என்று அம்பேத்கர் அரசியல் நிர்ணய சபையில் விளக்கம் அளித்தார்.
மேற்கத்திய அறிஞர்களைத் தவிர, இந்தியாவின் சர்.சி.பி.ராமசாமி ஐயர், ‘இந்து நம்பிக்கையும் பண்பாடும்’ என்ற தனது நூலில், ‘தெற்கில் திராவிடர்களின் நாகரிகம் மிகவும் முன்னேறிய நாகரிகம்” என்றும், ‘வடக்கிலிருந்த ஆரியர்களுடன் வணிக, பண்பாட்டுத் தொடர்புகளை இவர்கள் கொண்டிருந்தனர்” என்றும் உறுதிப்படுத்துகிறார். மொழி மற்றும் இன வேறுபாடுகள் இருந்தபோதிலும், இவர்களிடமிருந்து விரிவான சட்ட அமைப்புமுறை நிலவியது என்றும் அவர் குறிப்பிடுகிறார். இத்தகைய வரலாற்றுச் சூழல்களின் பின்புலத்திலும்; இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை கட்டமைத்திருக்கும் ஆக்கக் கூறுகள்; இந்து பழக்க வழக்கங்கள், நடைமுறைகள்; அம்பேத்கரின் இந்து சட்ட மசோதா குறித்த அரசியல் நிர்ணய சபை விவாதங்கள் ஆகியவற்றையும் ஒருங்கே கருத்தில் எடுத்துக் கொண்டு, நமது மதச்சார்பற்ற விழுமியங்களை அச்சமின்றிப் பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்ட சுதந்திர இந்தியாவின் எழுதப்பட்ட அரசியலமைப்பில் ‘சனாதன’த்தின் பொருத்தம் பற்றி நாம் மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
அரசமைப்பு சட்டம் பரிசீலனைகளுக்கு எடுத்துக்கொள்ளப்படும் முன்பே, சுதந்திர இந்தியாவின் தேசியக் கொடி வடிவமைக்கப்பட்டு, அரசியல் நிர்ணய சபையின் ஒப்புதலுக்காக 1947, ஜூலை 18 அன்று வைக்கப்பட்ட போது, நேருவின் விருப்பப்படி தேசியக் கொடியின் நடுவில் ‘அசோகச் சக்கரம்’ வைக்கப்பட்டது. அந்த சமயத்தில் நேரு இவ்வாறு பேசினார்: “இந்திய வரலாற்றில் அசோகரின் காலம் ஒரு சர்வதேசக் காலம். அது வெறும் குறுகிய தேசியக் காலம் அல்ல.
இந்தியத் தூதர்கள் அப்போது தொலைதூர நாடுகளுக்குச் சென்றது, ஏகாதிபத்திய அரசின் வடிவமாக அல்ல. மாறாக, அமைதி, கலாச்சாரம், நல்லெண்ணத்தின் தூதர்களாக அவர்கள் சென்றனர்; எந்தவொரு ஒரு குறிப்பிட்ட தேசமோ அல்லது குறிப்பிட்ட இனமோ மட்டும்தான் உலகின் பிற நாடுகளுக்கு எதையும் வழங்கமுடியும், உலகின் மற்ற நாடுகளிலிருந்து நாம் பெறுவதற்கு ஏதுமில்லை என்று நினைப்பது முட்டாள்தனம்; ஒரு தேசமோ அல்லது இனமோ அப்படிச் சிந்திக்கத் தொடங்கிவிட்டால், அந்த நாடு தன்னை தானே சுருக்கிக் கொண்டு வளர்ச்சியடையாமல் தேக்கமடைந்துவிடும்; உண்மையில், எப்போதெல்லாம் இந்தியா அப்படிப்பட்ட மூடிய மனநிலையில் உலகின் மற்ற பகுதியிலிருந்து எதையும் ஏற்காமல் இருந்ததோ அப்போதெல்லாம் அது பின்னடைவுடன் கூடிய சிதைவையே கண்டிருக்கிறது.
சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் நாட்டின் தர்மம் குறித்த அணுகுமுறையில் ஒரு ‘மாற்றம்’ தேவை என்ற கணிப்புடன் தேசிய கொடியை ஆதரித்து வலுவான குரலில் பேசினார். “அசோகரின் சக்கரம் நமது சட்டத்தின் சக்கரம், தர்மத்தின் சக்கரம்.. சாதி, தீண்டாமை போன்ற நிறுவப்பட்ட பல அமைப்புகள் நம் சமூகக் கட்டமைப்பில் இன்னும் இயங்குகின்றன.
இவற்றை களையாதவரை, நாம் சத்தியத்தைக் கடைப்பிடிக்கிறோம் என்றோ அல்லது நல்லொழுக்கத்தைக் கடைப்பிடிக்கிறோம் என்றோ சொல்ல முடியாது. சுழன்று கொண்டிருக்கும் இந்த சக்கரம், எப்போதும் சுற்றி கொண்டே இருக்கும் ஒன்றாகும். தேக்கம் ஏற்பட்டுவிட்டால் அது மரணம்தான் என்று நமக்கு அது உணர்த்தும். இயக்கத்தில் தான் உயிர் இருக்கிறது.
நமது தர்மம் சனாதனமாகும்; அது நிரந்தர வைப்புத் தொகை (Fixed Deposit) என்ற பொருளில் கருதப்படக் கூடாது. மாறாக அது தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கிறது என்ற அர்த்தத்தில் தான் கருதப்பட வேண்டும். இடையறாத தொடர்ச்சியே அதன் சனாதனப் பண்பாகும். எனவே நமது சமூக நிலையைப் பொறுத்தவரை, நாம் முன்னேற வேண்டியது அவசியம் எப்போதும் விழிப்புடன் இருங்கள், எப்போதும் இயங்கிக் கொண்டே இருங்கள், முன்னோக்கிச் செல்லுங்கள், நெகிழ்வான, இரக்கமுள்ள, கண்ணியமான ஜனநாயக சமூகத்தில் கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், முஸ்லிம்கள், இந்துக்கள், பௌத்தர்கள் அனைவரும் பாதுகாப்பான புகலிடத்தைக் கண்டுபிடிப்பார்கள் என்று இந்தக் கொடி நமக்குச் சொல்கிறது” என்று சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் கூறினார்.
இவ்வாறாக, அரசியலமைப்புச் சட்டத்தை இயற்றுவதற்கு முன்னரே, அனைவரையும் உள்ளடக்கிய சனாதன தர்மத்திற்கான புதிய விளக்கத்தை தேசியக் கொடியின் ஊடாக தந்து நமது தலைவர்கள் அழைப்பு விடுத்தார்கள். சமத்துவ தர்மத்தை நிறுவுவதற்கான தீவிரமான மாற்றங்களை அறிமுகப்படுத்துவதற்கு உரிய செயல்பாடுகளோடு நிலையான நகர்வுகளையும், மாற்றங்களையும் வரவேற்று நமது தலைவர்களிடமிருந்து விளக்கங்களும், அழைப்புகளும் வந்தன. சுழன்று கொண்டே பரிணாம வளர்ச்சி பெறும் புதிய தர்மம் பற்றிய இந்தக் கருத்துகள் அரசியலமைப்பின் முகப்புரையிலேயே பின்னர் இணைக்கப்பட்டது.
1949 பிப்ரவரியில் அரசியல் நிர்ணய சபையில் அறிமுகப்படுத்தப்பட்ட அம்பேத்கரின் ‘இந்து சட்ட மசோதா’ மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய முக்கியத்துவம் கொண்டது. “இந்து சமூகத்தின் ஆன்மாவாகத் தொடர்ந்து இருந்து வரும் சாதி அமைப்பில் ஒரு வகுப்புக்கும் இன்னொரு வகுப்புக்கும் இடையிலான ஏற்றத்தாழ்வுகளை அப்படியே விட்டுவிட்டு, ஒரு பாலினத்திற்கும் (ஆண்/பெண்) இன்னொரு பாலினத்திற்கும் இடையிலான ஏற்றத்தாழ்வுகளை விட்டுவிட்டு பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு மட்டுமே சட்டங்களை நிறைவேற்றுவது நமது அரசியலமைப்பை கேலி செய்வதாகும்” என்று அம்பேத்கர் கண்டித்துப் பேசத் தவறவில்லை.
இந்து சட்ட மசோதாவின் ஆதரவாளர்களோ அல்லது எதிர்ப்பாளர்களோ இந்த இந்து தனிநபர் சட்டத்திற்கு அடிப்படையாக எந்த தர்ம சாஸ்திரங்களையும் அடிப்படையாகக் கொள்ளவில்லை. மாறாக இரு தரப்பினரும் பகுத்தறிவு ரீதியான காரணங்கள் மற்றும் பாலின சமத்துவ அடையாளங்கள் குறித்தே தங்கள் வாதங்களை முன்வைத்தனர். இந்து மத நூல்களைப் பயன்படுத்தி இந்த மசோதாவுக்கு எதிராக வாதிட்ட ஒரு சிலர், ‘இந்த மசோதா நமது சாஸ்திரங்கள் மற்றும் வேதங்களின் கோட்பாடுகளுக்கு எதிரானது’ என்றும், ‘பெண்களுக்கு அதிக உரிமைகளை வழங்குவது இந்து சமூகத்தின் அமைதியான சமநிலையை சீர்குலைக்கும்’ என்றும் கூறினர்.
அப்போதைய இந்து மகாசபையைச் சேர்ந்த சியாமா பிரசாத் முகர்ஜி, ஸ்மிருதி, ஸ்ருதி, சதாச்சாரம் போன்ற இந்துச் சட்டத்தின் ஆதாரங்கள் அவற்றின் முக்கியத்துவத்தை இழக்கப் போகின்றன என்று ஆரம்பத்திலேயே தனது அச்சத்தை வெளிப்படுத்தியிருந்தார். என்றாலும், “இந்த மசோதாவிற்கு எதிர்ப்புகள்
இருந்தாலும் கூட, டாக்டர் அம்பேத்கரின் அற்புதமான படைப்பு இதுவாகும்; இது மிகவும் சிக்கலான விஷயம் என்பதை நான் ஒப்புக் கொள்ளத் தயாராக இருக்கிறேன், முள் மீது நடப்பது போன்ற கூர்மையான இந்த விஷயத்தில் எதிர்ப்புகள் இருந்தபோதும் தன் திறமையாலும் அறிவுமிக்க ஆற்றலுடன் அவர் செயல்பட்டிருக்கிறார்” என்றும் முகர்ஜி ஒப்புக்கொண்டு பாராட்டினார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
இந்து மதம் சகிப்புத்தன்மைக்கும், வெளியில் இருந்து சிறந்த கருத்துக்களை பெற்றுக் கொள்வதற்கும் பெயர் பெற்றது என்று இந்த மசோதாவை எதிர்ப்பவர்களும் கூட வாதிட்டனர். அதற்கு அம்பேத்கர், “இந்து சமுதாயத்தின் மிகவும் உயரிய இயல்புகளில் ஒன்று, அதை எதிர்ப்பவர்களிடமிருந்து எதையாவது பெறுவது என்பதில் சந்தேகமில்லை. ஆனால், என் கேள்வி இதுதான். எதிரிகளின் கோட்பாட்டை உள்வாங்கிக் கொண்டதன் விளைவாக இந்து சமூகம் தனது கட்டமைப்பில் மாற்றம் அடைந்துள்ளதா? புத்தர் போதித்தது என்ன? அவர் சமத்துவத்தை போதித்தார். ‘சதுர்வர்ணம்’, ‘வேதங்கள்’ ஆகியவற்றின் பெரும் எதிர்ப்பாளராக புத்தர் இருந்தார். ஏனெனில் அவர் பகுத்தறிவை அடிப்படையாகக் கொண்ட காரணங்களை நம்பினார். பிழையற்ற புனிதத்தன்மை கொண்டதாக எந்த நூலையும் புத்தர் ஏற்கமாட்டார். பிராமண சமுதாயம் ஏற்றுக்கொள்ளும் அகிம்சையை புத்தர் நம்பினார்.
ஆனால் அவர்கள் புத்தரது சமத்துவ போதனைகளை எதிர்த்தனர்… இந்து சமுதாயம் வேறு எதை ஏற்றுக்கொண்டாலும், சூத்திரர்களையும் பெண்களையும் அடிமைப்படுத்துவதற்கான அதன் சமூகக் கட்டமைப்பை ஒருபோதும் கைவிடாது. இதன் காரணமாகத்தான் இந்து சமூகம் முன்னேறுவதற்கு இந்தச் சட்டம் இயற்றப்பட வேண்டும்” என்று பதில் கூறினார்.
அதேபோன்று, ஒரு சமூகத்தின் மதச் சட்டங்களில் தலையிடுவதற்கு நாடாளுமன்றங்களுக்கு உள்ள அதிகாரம் குறித்துக் கடுமையாகக் கேள்வி எழுப்பப்பட்டபோது, அம்பேத்கர் இப்படி உறுதியாக அறிவித்தார்: “அவர்களின் தனிநபர் சட்டத்தில் தலையிட இந்த நாடாளுமன்றத்திற்கு உரிமை இல்லை என்று கூறப்படும் எந்த வாதத்தையும் நான் இந்த அவையில் ஒப்புக்கொள்ள மாட்டேன்.
இந்த பாராளுமன்றம் முற்றிலும் உயர்வானது. தனிநபர் சட்டத்தைப் பொறுத்தவரையில் அது சமூகங்களைக் கையாளுகிறதே தவிர, அவர்களின் மதத்தை அல்ல” என்று அம்பேத்கர் உறுதிபட அறிவித்தார்.
இந்தக் கருத்தை ஆமோதித்த நேரு, 1948 ஆகஸ்ட் 15 அன்று அரசியல் நிர்ணய சபையில் பின்வருமாறு குறிப்பிட்டார்: “இந்த இந்து சட்டத் திருத்த மசோதாவை நாங்கள் முக்கியத்துவம் அற்றதாகக் கருதுகிறோம் என்று இந்த அவை ஒரு சிறிதும் கூட கருதிவிடக்கூடாது என்று நான் கூற விரும்புகிறேன். நாங்கள் அதற்கு அதிகமான முக்கியத்துவம் அளிக்கிறோம். நான் கூறியது போல, இந்த சட்டத்தின் எந்தவொரு குறிப்பிட்ட பகுதி அல்லது பிரிவு காரணமாகவோ, வேறு எந்தக் காரணத்தினாலோ இந்த முக்கியத்துவம் தரப்படவில்லை. மாறாக, பொருளாதார மற்றும் சமூக ரீதியான பிற சிக்கல்களுடன் நெருக்கமான தொடர்புடைய இந்த நாட்டின் பிரச்சினைகளே இந்த அணுகுமுறைக்கான காரணமாகும்.
“தொடர்ந்து விவாதத்தை அம்பேத்கர் இப்படி முடித்து வைத்திருந்தார்; “அரசியல் சட்டத்தின் 15-வது பிரிவிற்கு ஏற்ப இந்துச் சட்டம் மாற்றியமைக்கப்படா விட்டால், முறைப்படுத்தப்படா விட்டால் இந்த அரசமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வரும் முன்பாக நடைமுறையில் இருந்து வந்த இந்து சட்டத்தின் சில பகுதிகள் அரசியலமைப்புச் சட்டத்தின் 13-வது பிரிவின்படி செல்லாது என்று அறிவிக்கப்படும் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை என்று ஒரு வழக்குரைஞராக நான் கூறுவேன்.
மதம், இனம், சாதி, பாலினம், பிறந்த இடம் அல்லது இவற்றில் ஏதேனும் ஒன்றின் அடிப்படையில் எந்தவொரு குடிமகனுக்கும் அரசு பாகுபாடு காட்டக்கூடாது என்று அரசியல் சட்ட உறுப்பு 15 கூறுகிறது; அரசியல்சட்டப் பிரிவு 13 “இந்த
அரசியலமைப்பு தொடங்குவதற்கு முன்பு வரையிலும் நடைமுறையில் இருந்த அனைத்து சட்டங்களும் – அரசியலமைப்பிற்கு முரணாக இருந்தால் – அத்தகைய முரண்பாடுகளின் அளவிற்கேற்ப அவை செல்லுபடியாகாது” என்று கூறுகிறது.
1951 அக்டோபரில் இந்து மதச்சட்ட மசோதாவை நிறைவேற்றுவதை ஒத்திவைக்கும் பிரச்சினையில் அம்பேத்கர் அமைச்சரவையிலிருந்து விலகினார்.
எனினும், 1952 பொதுத் தேர்தலுக்குப் பிறகு, மசோதா நான்கு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு 1952-56க்கும் இடையில் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு அப்போதைய இந்து மகாசபா, அப்போதைய ஜனசங்கம் போன்ற கட்சிகளிடம் இருந்து வரவில்லை என்பதும், அவை நாடாளுமன்றத்தில் வெறும் 6 உறுப்பினர்களை மட்டுமே கொண்டிருந்தன என்பதும், காங்கிரஸ் கட்சிக்குள்தான் இதற்கான எதிர்ப்பு பலமாக இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத் கூட இந்து சட்ட மசோதா தொடர்பாக நேருவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
நாடாளுமன்றத்தில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால், குடியரசுத் தலைவர் என்ற முறையில், அதனை நிராகரிப்பது குறித்து, தன்னுடைய சிறப்புரிமையின் அடிப்படையில் பரிசீலிக்கக் கூடும் என்று நேருவுக்கு எழுதிய கடிதத்தில் ராஜேந்திர பிரசாத் சூசகமாகத் தெரிவித்திருந்தார். “இத்தகைய நடவடிக்கை இந்தியாவின் ஜனநாயகத்தால் தாங்கிக் கொள்ள முடியாத ஒரு அரசியலமைப்பு நெருக்கடியைத் தூண்டும். வளர்ந்து வரும் இந்திய ஜனநாயகம் இதனைத் தாங்காது” என்று அந்த அச்சுறுத்தலுக்கு நேரு பதிலடி தந்தார்.
இவ்வாறாக, வைதீக இந்து சம்பிரதாயங்கள், சாஸ்திரங்கள் மற்றும் பிற காலாவதியான ‘புனித’ நூல்கள் உள்ளிட்டவைகள் அனைத்தும் சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவத்தின் மீது கட்டமைக்கப்பட்ட நம் அரசியலமைப்பின் கீழ் அறிவார்ந்த அணுகுமுறையின் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. ‘இந்துக்கள்’ என்பதற்கான வரையறையும், அவர்களின் குடிமை வாழ்க்கைக்காக இயற்றப்பட்ட சட்டங்களும் நடைமுறையில் உள்ளன. எனவே, இதற்குப் பிறகும் எந்தவிதமான சாஸ்திர விளக்கங்களுக்கும் தொடர இடமளிக்க முடியாது என்று அரசியலமைப்பு கூறுகிறது.
இந்த மாபெரும் நாட்டின் நிர்வாகத்துறை, சட்டமன்றம், நீதித்துறை ஆகியவற்றில் உயர்ந்த பதவிகளில் இருப்பவர்கள் எவராக இருந்தாலும், காலாவதியான ‘தர்மங்களை’ எந்த வடிவத்திலும், எந்தப் பெயரைக் கொண்டும் திரும்ப சிலாகித்துப் பேசுவதும், ஆதரிப்பதும் சட்டரீதியாக பொருத்தமற்றது மட்டுமல்ல, அது நமது அரசியல் சட்டத்தை இழிவுபடுத்துவதற்கும் களங்கப்படுத்துவதற்குமான முயற்சியே ஆகும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
(மெயின்ஸ்ட்ரீம் வீக்லி ஆங்கில வார இதழில் (04.11.2023) வெளியான கட்டுரையின் தமிழாக்கம்)
இன்றும் நாளையும் கனமழை: எந்தெந்த மாவட்டங்களில்?
IndVsNz: மீம்ஸ் போட்டு கொண்டாடும் ரசிகர்கள்!
சரசியலமைப்பைக் காப்போம் சனநாயகம் காப்போம்.