இருட்டறையில் ஒரு விளக்கு – மினி தொடர் – 19
அகில இந்திய பார் கவுன்சில், தமிழக பார் கவுன்சில் இரண்டுமே தங்கள் பதவிக் காலத்தைத் தாண்டி இப்போது ஓவர் டைம் பார்த்துக் கொண்டிருக்கின்றன. ஆனால் மீண்டும் மீண்டும் பார் கவுன்சில் தேர்தலுக்கு பல முட்டுக் கட்டைகள் முளைத்துக் கொண்டே இருக்கின்றன. இதுபற்றி நாம் மின்னம்பலம் மொபைல் பத்திரிகையில், ‘இருட்டறையில் ஒரு விளக்கு’ தொடரில் விளக்கமாகப் பார்த்தோம்.
இந்நிலையில் பல்வேறு தடைகளைத் தாண்டி பார் கவுன்சில் தேர்தல் நடைபெற உச்ச நீதிமன்றம் கண்டிப்பான உத்தரவுகளைப் பிறப்பித்ததன் அடிப்படையில், 21-1-18 அகில இந்திய பார் கவுன்சில், தேர்தலுக்கான அட்டவணையை வெளியிட்டது. அதன்படி பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை வேட்பு மனுதாக்கல், அதன் பிறகு 23 ம் தேதி மனுக்கள் பரிசீலனை என்றும் அதன் பிறகு தேர்தல் என்றும் அறிவிக்கப்பட்டது.
தேர்தல் நடத்தும் அலுவலராக ஓய்வு பெற்ற நீதிபதி அக்பர் அலியை நியமித்தது பார் கவுன்சில். மேலும் ஏற்கனவே பார் கவுன்சில் அட்வகேட் ஜெனரல் தலைமையில் இடைக்கால நிர்வாகக் குழுவின் இரு உறுப்பினர்களுக்கும் தேர்தல் நடத்தும் பணிகளில் ஈடுபட்டு வந்தனர். இதற்கிடையில் பார் கவுன்சில் தேர்தல் இடைத்தேர்தல்களை மிஞ்சிவிடும் வகையில் ஓட்டுக்கு பணம் கொடுப்பதாக பல்வேறு புகார்கள் எழுந்தன.
இந்நிலையில், ஜனவரி 24 ஆம் தேதி தமிழ்நாடு பார்கவுன்சிலின் இடைக்கால நிர்வாகக் குழு, பார் கவுன்சில் தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கு புதிய தகுதிகள் என்று சிலவற்றை நிபந்தனைகளாக விதித்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
இரண்டு முறைக்கு மேல் தொடர்ந்து பார் கவுன்சில் தேர்தலில் போட்டியிருந்தால் மீண்டும் போட்டியிடக் கூடாது, அரசியல் கட்சிகளில் பொறுப்பில் இருப்பவர்களோ, அரசியல் கட்சியைத் தொடங்கி நடத்துபவர்களோ பார் கவுன்சில் தேர்தலில் போட்டியிடக் கூடாது உள்ளிட்ட ஏழு நிபந்தனைகளை வைத்து தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறது.
மாநில பார் கவுன்சில் நிறைவேற்றும் எந்த முடிவும் அகில இந்திய பார் கவுன்சிலின் ஒப்புதலைப் பெற வேண்டும். அதற்காக இந்த தீர்மானம் டெல்லிக்கு அனுப்பப்பட்டது.
ஏற்கனவே, வழக்கறிஞர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் தேர்தல் தள்ளிப்போடப்பட்டு இப்போதுதான் அறிவிக்கப்பட்டுள்ளது.
பார் கவுன்சில் தேர்தல் நடைமுறைகள் தொடங்கும் நேரத்தில் இதுபோன்ற புதிய நிபந்தனைகள் மீண்டும் குழப்பத்தை ஏற்படுத்தி, தேர்தலை மேலும் தள்ளிப் போட வழி வகுக்குமென்று கருதப்பட்டது. அதனால், இடைக்கால குழுவின் பரிந்துரைகளுக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. ‘இந்த குழுவுக்கு தேர்தல் பற்றிய விதிமுறைகளை வகுக்க அதிகாரமில்லை’ என்று அந்த வழக்கில் சுட்டிக் காட்டப்பட்டது
தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி அப்துல் குத்தூஸ் ஆகிய நீதிபதிகள் அடங்கிய அமர்வின் முன் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர் அய்யாதுரை வாதிட்டார்.
‘’இந்திய வழக்கறிஞர்கள் சட்டம் 1961-ன்படி இந்த குழுவுக்கு தேர்தல் விதிமுறைகளை வகுக்க அதிகாரமில்லை. மேலும் 1980 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் கொடுத்த ஒரு தீர்ப்பிலும் இது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. எனவே இந்த புதிய நிபந்தனைகளை நீதிமன்றம் நிராகரிக்க வேண்டும்’’ என்று தன் வாதத்தில் குறிப்பிட்டார்.
இடைக்கால நிர்வாகக் குழுவில் யார் இந்த புதிய நிபந்தனைகளைப் பிறப்பித்துக் கையெழுத்திட்டார்களோ, அதே வழக்கறிஞர்கள்தான் தங்களுக்காக இந்த வழக்கில் ஆஜர் ஆகினர். இது நீதிமன்ற மரபுக்கு மாறானது என்பதால் வித்தியாசமாக பார்க்கப்பட்டது.
இந்த வழக்கு பிப்ரவரி 2-ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில், தமிழக பார் கவுன்சில் இடைக்கால நிர்வாகக் குழு வைத்த வாதத்தில், ‘’2009-ல் தரப்பட்ட உச்ச நீதிமன்றத் தீர்ப்பொன்றில் மாநில பார்கவுன்சிலுக்கும்,இடைக்கால நிர்வாகக் குழுவுக்கும் இதுபோன்ற முடிவுகளை எடுக்க அதிகாரங்கள் உண்டு’ என்று மேற்கோள் காட்டி வாதிட்டனர்.
இதற்கு பதிலளித்த மனு தாரர் தரப்பு வழக்கறிஞர், ‘’2009 -ல் வழங்கப்பட்ட உச்ச நீதிமன்றத் தீர்ப்பு என்பது முழுக்க முழுக்க தேர்தலுக்குப் பின் அமைக்கப்படும் நிர்வாகம் பற்றிய வழக்குக்கானது. தலைவர், துணைத் தலைவர் ஆகியோரைப் பதவி நீக்கம் செய்வது தொடர்பான வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு அது. அந்த உச்ச நீதிமன்ற ஆணை என்பது பார்கவுன்சில் தேர்தல் நடைமுறை தொடர்பான இந்த வழக்குக்கு எந்த விதத்திலும் பொருந்தாது’’ என்று வாதிட்டனர்.
இவ்வழக்கில் அகில இந்திய பார் கவுன்சில் சார்பில், ‘’தமிழக பார் கவுன்சில் சிறப்புக் குழுவின் தீர்மானம் பற்றி வரும் பிப்ரவரி 4-ம் தேதி அகில இந்திய பார்கவுன்சில் கூட்டம் டெல்லியில் நடக்கிறது. எனவே அதுவரை நீதிமன்றம் இவ்வழக்கில் முடிவெடுக்கக் கூடாது’’ என்று தெரிவிக்கப்பட்டது. அதுபற்றி தங்களுக்குக் கவலையில்லை என்று தெரிவித்த உயர் நீதிமன்றம் இந்த வழக்கில் பிப்ரவரி 5-ம் தேதி மதியம் 2 மணிக்கு தீர்ப்பு வழங்குவதாக ஒத்தி வைத்தது.
இந்நிலையில் நேற்று பிப்ரவரி 4 ஆம் தேதி டெல்லியில் அகில இந்திய பார் கவுன்சில் கூட்டம் கூடியது. அதில் தமிழக பார் கவுன்சில் சிறப்புக் குழு பரிந்துரைத்த புதிய நிபந்தனைத் தீர்மானங்கள் பற்றி எந்த முடிவும் எடுக்காமல் தள்ளி வைத்துவிட்டனர். எனவே அகில இந்திய பார் கவுன்சிலின் ஒப்புதல் கிடைக்காத நிலையில் தமிழக பார் கவுன்சில் சிறப்புக் குழுவின் இந்த புதிய தீர்மானங்களுக்கு இதுவரை உயிர் இல்லை என்கிறார்கள் மூத்த வழக்கறிஞர்கள்.
இன்று சென்னை உயர் நீதிமன்றம் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட இருக்கிற நிலையில் அகில இந்திய பார் கவுன்சில் கூட்டத்தின் முடிவுகள் தீர்ப்பில் எதிரொலிக்கலாம் என்றும் சட்ட வட்டாரங்களில் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
ஏழு கடல் ஏழு மலையைத் தாண்டி அந்த கூண்டில் இருக்கும் கிளியைப் பிடித்தாலும் பிடிக்கலாம். ஆனால் தமிழ்நாடு பார் கவுன்சில் தேர்தலை நடத்துவதற்கு இவ்வளவு முட்டுக்கட்டைகள் போடப்படுகிறதே’ என்ற ஆற்றாமைக் குரல் பல வழக்கறிஞர்களிடம் இருந்தும் கேட்கிறது.
பார் கவுன்சில் தேர்தலுக்கான முட்டுக் கட்டைகள் இன்றைய தீர்ப்பில் முறிக்கப்படுமா என்பதே அவர்கள் மத்தியில் எழுந்துள்ள கேள்வி.
(விளக்கு ஒளிரும்)
இருட்டறையில் ஒரு விளக்கு! மினி தொடர் – 1
இருட்டறையில் ஒரு விளக்கு! மினி தொடர் – 2
இருட்டறையில் ஒரு விளக்கு! மினி தொடர் – 3
இருட்டறையில் ஒரு விளக்கு! மினி தொடர் – 4
இருட்டறையில் ஒரு விளக்கு! மினி தொடர் – 5
இருட்டறையில் ஒரு விளக்கு! மினி தொடர் – 6
இருட்டறையில் ஒரு விளக்கு! மினி தொடர் – 7
இருட்டறையில் ஒரு விளக்கு! மினி தொடர் – 8
இருட்டறையில் ஒரு விளக்கு! மினி தொடர் – 9
இருட்டறையில் ஒரு விளக்கு! மினி தொடர் – 10
இருட்டறையில் ஒரு விளக்கு! மினி தொடர் – 11
இருட்டறையில் ஒரு விளக்கு! மினி தொடர் – 12
இருட்டறையில் ஒரு விளக்கு! மினி தொடர் – 13
இருட்டறையில் ஒரு விளக்கு! மினி தொடர் – 14
இருட்டறையில் ஒரு விளக்கு! மினி தொடர் – 15
இருட்டறையில் ஒரு விளக்கு! மினி தொடர் – 16
இருட்டறையில் ஒரு விளக்கு! மினி தொடர் – 17
இருட்டறையில் ஒரு விளக்கு! மினி தொடர் – 18