சட்டமன்ற விதிப்படி எதிர்க்கட்சித் துணைத்தலைவர் பதவி என்ற ஒன்று கிடையாது, எனவே அதை அங்கீகரிக்கவேண்டிய அவசியம் இல்லை என்று சபாநாயகர் அப்பாவு விளக்கம் அளித்துள்ளார்.
சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பிரச்சினையை முன்னிறுத்தி எடப்பாடி பழனிசாமி தரப்பு அமளியில் ஈடுபட்டது. இதையடுத்து அந்தப் பதவி குறித்து சபாநாயகர் அப்பாவு விளக்கம் அளித்தார்.
சட்டமன்றத்தில் முதல் ஒரு மணி நேரம் வினாக்கள் – விடை நேரம். அமைச்சர்கள் பதில் சொல்லுவார்கள். எல்லா உறுப்பினர்களும் துணைக் கேள்வி கேட்பார்கள்.
மதியம் ஒரு மணி வரை என்பதை அரை மணி நேரம் நீட்டித்து அவகாசம் வழங்கினால் கூட முதலமைச்சர் இதுவரை எந்த கருத்தும் சொன்னதில்லை.
இன்று(அக்டோபர் 18) சட்டமன்றம் கூடுவதற்கு முன்பு, எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏக்கள் என்னுடைய அறைக்கு வந்தார்கள். ஏற்கனவே கொடுத்த கோரிக்கைகளை இன்றும் கொடுத்தார்கள்.
அப்போது அவர்களிடம் தெளிவாக சொன்னேன். ஏற்கனவே நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற லெட்டர் பேடிலே எழுதி தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் ஒப்புதலுடன் எதிர்க்கட்சித் தலைவராக எடப்பாடி பழனிசாமியும், துணைத் தலைவர், கொறடா, செயலாளர் என பலரின் பட்டியலை என்னிடம் கொடுத்தார்கள்.
அந்த பட்டியலின்படி தான் இங்கு அமர்ந்திருக்கிறார்கள். சட்டமன்ற விதி 6ன் படி, எதிர்க்கட்சித் தலைவர் தான் அங்கீகரிக்கப்பட்ட பதவி. மற்ற பதவிகள் எல்லாம் சட்டமன்ற உறுப்பினர்களை திருப்திபடுத்த கொடுக்கப்படுகிற பதவிகள்.
அவர்கள் யாரை விரும்புகிறார்களோ, முன் வரிசையில் எப்படி கொடுக்க வேண்டுமோ ஒரு உறுப்பினர் இருந்தால் கூட மரியாதை கொடுக்கும் வண்ணமாக சபை மரபுப்படி இருக்கைகள் வழங்கப்படும்.
அது முழுவதும் பேரவைத் தலைவரின் விருப்பம். அதில் யாரும் தலையிட முடியாது. எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவியில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டு, ஆர்.பி. உதயகுமார் நியமிக்கப்பட்டுள்ளதாக என்னிடம் தெரிவித்தனர்.
ஆனால் நான் தெளிவாக கூறினேன். விதிப்படி துணைத்தலைவர் என்ற பதவியே இல்லை. அந்த அடிப்படையில் அவர்களை அங்கீகரிக்க வேண்டிய கட்டாயம் பேரவைத் தலைவருக்கு இல்லை.
அதேபோன்று அலுவல் ஆய்வுக்குழுவில் உறுப்பினராக ஆர்.பி.உதயகுமாரை சேர்க்கவேண்டும் என்று சொல்லி இருக்கிறீர்கள். 15 உறுப்பினர்களில் யாரை சேர்க்கவேண்டும் என்பது சட்டமன்றத் தலைவரின் முழு உரிமை.
அந்த அடிப்படையில் தான் சேர்க்கவேண்டுமே தவிர, நீங்கள் இவரை சேருங்கள், இவரை நீக்குங்கள் என்று சொல்வதற்கு எந்த அதிகாரமும் இல்லை. ஆகவே அதிலும் தலையிட முடியாது.
ஒரு உறுப்பினர் இடம் சவுகரியமாக இல்லை மாற்றித் தாருங்கள் என்று கேட்கலாம். ஆனால் இந்த இடத்தில் இவரை அமர வையுங்கள் என்று யாரும் சொல்வதற்கு உரிமை கிடையாது என்று அப்பாவு கூறினார்.
கலை.ரா
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு : 17 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க ஆணையம் பரிந்துரை!
நீதிமன்றத் தீர்ப்பை சபாநாயகர் மதிக்கவில்லை: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!