ராகுல்காந்திக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பினராயி விஜயன் பேசியது இந்தியா கூட்டணி தலைவர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டின் 39 தொகுதிகள் உட்பட நாடு முழுவதும் 102 தொகுதிகளுக்கான மக்களவை முதற்கட்ட தேர்தல் நேற்று (ஏப்ரல் 19) நடைபெற்று முடிந்தது.
இதனையடுத்து இரண்டாம் கட்ட மக்களவை தேர்தல் வரும் 26ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் கேரளாவில் உள்ள 20 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.
அங்கு இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸும், இடதுசாரி கட்சியும் தனித்தனியாக கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. இன்னும் தேர்தலுக்கு 5 நாட்களே உள்ள நிலையில், இரு கட்சியினரும் மாறி மாறி வார்த்தை மோதலில் ஈடுபட்டு வருகின்றனர்.
பினராயிக்கு எதிராக செயல்படவில்லை ஏன்?
வயநாட்டில் மீண்டும் போட்டியிடும் ராகுல்காந்தி, நேற்று முன்தினம் கண்ணூரில் நடந்த பேரணியில் பங்கேற்று பேசுகையில், “ஹேமந்த் சோரன், அரவிந்த் கெஜ்ரிவால் என இரண்டு முதல்வர்களை சிறைக்கு அனுப்பிய மத்திய அரசு ஏன் பினராயி விஜயனுக்கு எதிராக செயல்படவில்லை? என கேள்வி எழுப்பினார்.
மேலும், “நான் பாஜகவை 24×7 தாக்குகிறேன், கேரள முதல்வர் என்னை 24×7 தாக்குகிறார். இது சற்று குழப்பமாக உள்ளது. விஜயன் தனது மகள் வீணாவின் ஐடி நிறுவனத்தில் முறைகேடாக பணம் செலுத்திய முறைகேடு மற்றும் திருச்சூரில் உள்ள கூட்டுறவு வங்கியில் நடந்த நிதி மோசடி தொடர்பாக மத்திய அமைப்புகள் விசாரணை நடத்தியதால், பிரதமர் நரேந்திர மோடியை விஜயன் விமர்சிக்கவில்லை” என்று குற்றஞ்சாட்டினார்.
ராகுல்காந்தியின் இந்த பேச்சு இந்தியா கூட்டணி தலைவர்களிடையே விவாதத்தை எழுப்பியது.
மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பிருந்தா காரத் “பினராயி விஜயனை கைது செய்ய வலியுறுத்திய பேச்சை திரும்பப் பெறுமாறு ராகுல் காந்திக்கு காங்கிரஸ் தலைவர்கள் அறிவுறுத்த வேண்டும்” என பிருந்தா காரத் தெரிவித்திருந்தார்.
Rahul Gandhi and his Congress in Kerala and the BJP (practically everywhere) seem like birds of the same feather! pic.twitter.com/19ckwaVrkb
— N. Ram (@nramind) April 20, 2024
எந்த விசாரணை, ஏஜென்சி மீதும் பயமில்லை!
இந்த நிலையில் கோழிக்கோட்டில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் முதல்வர் பினராயி விஜயன் பேசுகையில், “பாஜக அரசு ஏன் கேரள முதலமைச்சரைக் கேள்வி கேட்கவில்லை, ஏன் வழக்கு பதியவில்லை, ஏன் காவலில் எடுக்கவில்லை என்று ராகுல்காந்திக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கிறது.
ராகுல்காந்தி… உங்களுக்கு முதலில் ஒரு பெயர் இருந்தது. அதில் இருந்து இன்னும் நீங்கள் மாறவில்லை என்று நினைக்க வைக்காதீர்கள். அது நல்லதல்ல.
உங்கள் பாட்டி (இந்திரா காந்தி) அவங்க இந்த நாட்டை மொத்தமாக அடக்கி ஆண்டு கொண்டிருந்தபோது, அவர்கள் தான் எங்களையெல்லாம் ஒன்றரை வருஷம் சிறையில அடைத்தார்கள்.
அதனால் சிறையென்றால், உங்கள் அசோக் சவுகான் மாதிரி ‘அய்யோ.. அங்கெல்லாம் போகமாட்டேன்’ என்று சொல்கிறவர்கள் நாங்கள் இல்லை. எந்த விசாரணை ஏஜென்சி மீதும் எங்களுக்கு பயமில்லை” என்று விஜயன் கூறினார்.
ராகுல்காந்திக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பினராயி விஜயனின் இந்த பேச்சு இந்தியா கூட்டணி தலைவர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவரும், கட்சியின் செயற்குழு உறுப்பினருமான ரமேஷ் சென்னிதலா, ”ராகுலுக்கு எதிரான கருத்துக்களை விஜயன் வாபஸ் பெற்று மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா