ஆங்கிலேயர்களை ஆளப்போகும் இந்திய மருமகன் : யார் இந்த ரிஷி சுனக்?
உங்களுக்கு ஆளத்தெரியவில்லை எனக் கூறி 200 ஆண்டுகளுக்கும் மேல் இந்தியாவையே அடிமைப்படுத்தி வைத்திருந்த ஆங்கிலேயர்கள், இன்று தங்கள் நாட்டுப் பொருளாதார வீழ்ச்சியை சமாளிக்க முடியாமல், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரிடம் இங்கிலாந்தின் ஆட்சியை தாங்களாகவே ஒப்படைத்திருக்கின்றனர்.
பிரெக்ஸிட் என்கிற பெயரில் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியான போது தொடங்கிய இங்கிலாந்தின் பொருளாதார சரிவு இன்று வரை சரியான மீட்பர் யாரும் இன்றி பாதாளத்தை நோக்கி பயணம் செய்து கொண்டிருக்கிறது.
தெரசா மே, போரிஸ் ஜான்சன், லிஸ் டிரஸ் என அடுத்தடுத்து 3 பிரதமர்கள், 3 ஆண்டுகளில் ராஜினாமா செய்திருப்பது பிரிட்டனின் பொருளாதாரத்தை மட்டுமல்ல, அரசியல் நிலைத்தன்மையையும் ஆட்டம் காண வைத்துள்ளது.
ராணியின் மரணம், பிரதமர்களின் விலகல் என அடிமேல் அடி வாங்கி மீட்பருக்காக ஏங்கி தவித்த பிரிட்டனுக்கு நம்பிக்கை ஒளி பாய்ச்சியுள்ளார் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக்.
ரிஷி சுனக், 1980-ம் ஆண்டு மே மாதம் 12-ம் தேதி சவுதாம்டன் நகரில் பிறந்தவர். அவருக்கும் இந்தியாவுக்குமான தொடர்பை தெரிந்துகொள்ள 2 தலைமுறைகள் பின்னோக்கிச் செல்ல வேண்டும்.
ரிஷி சுனக்கின் தாத்தாக்கள் இரண்டு பேரும் சுதந்திரத்திற்கு முந்தைய இந்தியாவின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள குஜ்ரன்வாலா நகரில் பிறந்தவர்கள். இரண்டு பேரும் தங்களது இளம் வயதிலேயே ஆப்ரிக்காவுக்கு புலம் பெயர்ந்து அங்கிருந்து பின்னர் இங்கிலாந்துக்கு குடியேறியவர்கள்.
ரிஷி சுனக்கின் தந்தை யாஸ்விர் ஒரு மருத்துவர். தாய் உஷா மருந்தாளுநராக பயிற்சி பெற்று சொந்தமாக மெடிக்கல் நடத்தியவர். ராம்சே நகரில் உள்ள பள்ளியில் தொடக்கக் கல்வியை பயின்ற ரிஷி சுனக், வின்ஸ்டர் காலேஜ் எனும் பள்ளியில் படிப்பை முடித்தார். அதே பள்ளியில் ரிஷி சுனக் தலைமை மாணவனாக இருந்தது, சிறுவயதிலேயே அவர் ஆளுமை திறன் கொண்டிருந்ததை வெளிக்காட்டுகிறது.
ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக் கழகத்தில் உள்ள லிங்கன் கல்லூரியில் தத்துவம், அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் பட்டம் பெற்ற ரிஷி சுனக், முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். படிக்கும் காலத்திலேயே இண்டர்ன்ஷிப் மூலமாக கன்சர்வேட்டிவ் கட்சியின் பிரச்சார தலைமையகத்தில் பணியாற்றும் வாய்ப்பையும் ரிஷி சுனக் பெற்றுள்ளார்.
இதன் பிறகு, 2006-ம் ஆண்டு ஸ்டான்ஃபோர்டு பல்கலைக் கழகத்தில் எம்பி.ஏ பட்டம் பெற்ற ரிஷி சுனக், அங்கு தான் இன்ஃபோஸிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தியின் மகள் அக்ஷிதா மூர்த்தியைச் சந்தித்து காதலில் விழுந்தார். 2009-ம் ஆண்டு அவரை கரம் பிடித்த ரிஷி சுனக்கிற்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.
கல்லூரி பருவத்தில் கன்சர்வேட்டிவ் கட்சியுடன் ரிஷி சுனக் வைத்திருந்த தொடர்பு, 2014-ம் ஆண்டு மீண்டும் புதுப்பிக்கப்பட்டது. ஒரு புறம் தனது மாமனார் நாராயண மூர்த்தியின் கெட்டமரன் வென்சர்ஸ் நிறுவனத்தின் இயக்குநராகவும், மற்றொரு புறம் ரிச்மண்ட் யார்க்ஸ் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்காகவும் கடுமையாக உழைத்துக்கொண்டிருந்தார் ரிஷி சுனக்.
2015-ம் ஆண்டு நடந்த தேர்தலில் வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்ற ரிஷி சுனக், 2016-ம் ஆண்டு ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறும் பிரெக்ஸிட் முடிவுக்கு ஆதரவாக வாக்களித்தார்.
2017-ல் நடந்த பொதுத்தேர்தலில் மீண்டும் மாபெரும் வெற்றி பெற்று நாடாளுமன்றத்துக்குள் நுழைந்த ரிஷி சுனக், தெரசே மே-வின் பிரெக்ஸிட் வாபஸ் பெறும் ஒப்பந்தத்திற்கு ஆதரவாக வாக்களித்தார்.
பின்னர் 2019-ம் ஆண்டு போரிஸ் ஜான்சன் கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவராக ஆதரவு தெரிவித்த ரிஷி சுனக்கிற்கு 2020-ம் ஆண்டு போரிஸ் ஜான்சன் ஆட்சியில் நிதியமைச்சர் பதவி கிடைத்தது.
அப்போது கொரோனா பெருந்தொற்றும் சேர்ந்துகொள்ள நாட்டின் பொருளாதாரத்தை சம நிலையில் வைக்க புதிய வரி விதிமுறைகளை அமல்படுத்தினார் ரிஷி சுனக். இது 1940-ம் ஆண்டுக்கு பிறகு மக்கள் மீது விதிக்கப்பட்ட அதிகபட்ச வரிச்சுமை என ஊடகங்கள் அவரை சாடின. மக்களின் மன நிலையும் ரிஷி சுனக்கிற்கு எதிராக திரும்பியது.
இந்த நிலையில் தான் ரிஷி சுனக்கின் மனைவி அக்ஷதா மூர்த்தி இங்கிலாந்து விதிகளை தவறாக பயன்படுத்தி, தனது வருமானத்திற்கு வரி கட்டாமல் விலக்கு பெற்றுள்ளதாக விமர்சனத்தில் சிக்கினார். 7 ஆயிரத்து 500 கோடி சொத்துக்களை கொண்ட அக்ஷதா 11.5 மில்லியன் பவுண்டுகளை வருமானமாக ஈட்டியும் இங்கிலாந்துக்கு வரி கட்டாதது சாமானிய மக்களையும் எரிச்சலடைய வைத்தது.
உக்ரைன் மீது போர் தொடுத்ததை கண்டித்து ரஷ்ய நிறுவனங்கள் இங்கிலாந்தில் செயல்பட ரிஷி சுனக் தடை போட்ட நேரத்தில், அவரது மனைவியின் நிறுவனங்கள் ரஷ்ய நிறுவனங்களுடன் வணிகத்தில் ஈடுபட்டதும் சர்ச்சையில் சிக்கியது.
இப்படி அடுத்தடுத்து சர்ச்சையில் சிக்கிய ரிஷி சுனக், 2 ஆண்டுகளில் தனது பதவியை ராஜினாமா செய்தார். போரிஸ் ஜான்சனுக்கும் தனக்கும் இடையிலான பொருளாதார கொள்கைகள் அடிப்படையில் மாற்றம் இருப்பதாக அவர் விளக்கமளித்தார்.
பின்னர், போரிஸ் ஜான்சன் பிரதமர் பதவியில் இருந்து விலகிய பிறகு, அந்த இடத்திற்கு ரிஷி சுனக் போட்டியிட்டார். அவருக்கு எதிராக லிஸ் டிரஸ் களமிறங்கினார். கன்சர்வேட்டிவ் கட்சி எம்.பி.க்களின் வாக்களிப்பில் ரிஷி சுனக் வெற்றி பெற்றாலும் உறுப்பினர்களின் வாக்களிப்பில் ரிஷி சுனக் தோல்வியடைந்தார். இதனால் லிஸ் டிரஸ் பிரதமராகப் பதவியேற்றார்.
ஆனால், அவரால் 45 நாட்களுக்கு மேல் பதவியில் நீடிக்கமுடியவில்லை. பிரெக்ஸிட், கொரோனா, உக்ரைன் – ரஷ்யா இடையிலான போர் என அடுத்தடுத்து அரங்கேறிய நிகழ்வுகளால் உருக்குலைந்து கிடக்கும் இங்கிலாந்தின் பொருளாதாரத்தை சீரமைக்க முடியாமல் அக்டோபர் 20-ம் தேதி தனது ராஜினாமாவை அறிவித்தார் லிஸ் டிரஸ்.
இதனால் முன்பு தட்டிப்போன வாய்ப்பு இந்த முறை ரிஷி சுனக்கை தேடி வந்தது. மீண்டும் பிரதமருக்கான போட்டியில் குதித்த ரிஷி சுனக் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பென்னி மோர்டண்ட்டை விட அதிக எம்.பி-க்களின் ஆதரவைப் பெற்று பிரதமர் பதவியையும் கட்சி தலைவர் பதவியையும் தனதாக்கியுள்ளார்.
இதன் மூலம் வெள்ளையர் அல்லாத முதல் பிரதமர், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முதல் பிரதமர் என பல சாதனைகளுக்கு அவர் சொந்தக்காரராகி உள்ளார்.
இந்தியாவில் இருந்து விலகி இங்கிலாந்தில் பிறந்து வளர்ந்திருந்தாலும் ரிஷி சுனக்கிற்கு அவரது பெற்றோர் பஞ்சாபி மற்றும் இந்தி மொழிகளோடு சேர்த்து இந்திய கலாச்சாரத்தையும் ஊட்டியே வளர்த்தனர்.
இதன் விளைவாக தான் கட்சி பிரச்சார மேடைகள் தொடங்கி தான் செல்லும் மேடைகளில் எல்லாம், இந்துவாக இருக்க பெருமைப்படுகிறேன் என பேசி வருகிறார் ரிஷி சுனக். இது மட்டும் அல்ல, தான் எம்.பி.யாக பதவி ஏற்கும் போது கூட பகவத் கீதை மீது சத்தியப் பிரமாணம் எடுத்துக்கொள்ளும் அளவுக்கு அவருக்கு இந்து மதத்தின் மீது பற்று உள்ளது.
அப்துல் ராஃபிக்
“தீவிரவாதத்தை வேரோடு அழிக்க வேண்டும்” – ஓபிஎஸ் காட்டம்
இணையத்தில் வைரலாகும் நோ பால் சர்ச்சை!