அமேதியில் போட்டியிட பயந்து ராகுல் காந்தி ரேபரேலியில் போட்டியிடுவதாக பிரதமர் மோடி விமர்சித்துள்ளார்.
நீண்ட சஸ்பென்ஸுக்கு பின்னர் இன்று (மே 3) அமேதி, ரேபரேலி வேட்பாளர்களை காங்கிரஸ் கட்சி அறிவித்தது. சோனியா காந்தியின் தொகுதியான ரேபரேலியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடுகிறார்.
இந்நிலையில், ரேபரேலியில் ராகுல் காந்தி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளதை மேற்குவங்கத்தில் இன்று (மே 3) நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற மோடி கடுமையாக விமர்சித்துள்ளார்.
அவர் கூறுகையில், “மக்களவைத் தேர்தல் முடிவுகள் தெளிவாக உள்ளது. ராகுல் காந்தி வயநாடு தொகுதியில் தோல்வி அடைவார். அதனால் வேறு ஒரு தொகுதியை தேர்ந்தெடுப்பார் என்று நான் ஏற்கனவே கூறியிருந்தேன்.
இப்போது அவர் அமேதியில் போட்டியிட பயந்து, ரேபரேலிக்கு ஓடிவிட்டார். அவர் வயநாடு தொகுதியில் தோல்வியை சந்திப்பார். அதே நிலைதான் ரேபரேலியிலும் ஏற்படும். அவருக்கு தோல்வி காத்திருக்கிறது.
அடுத்து அவர் மூன்றாவது தொகுதியை தேடிச் செல்ல வேண்டிய நிலை ஏற்படும். காங்கிரஸ் தலைவர்கள் தேர்தலுக்கு முன்னே தோல்வி பயத்தில் இருக்கிறார்கள்.
மற்றவர்களைப் பார்த்து அச்சப்பட வேண்டாம் என்று கூறும் காங்கிரஸ், அமேதியில் போட்டியிட பயப்படுகிறது. நான் அவர்களை பார்த்து கூறுகிறேன், பயப்படவும் வேண்டாம். ஓடி ஒளியவும் வேண்டாம்
சோனியா காந்தி ரேபரேலியில் போட்டியிட பயந்துதான் மாநிலங்களவை எம்.பி.ஆகியுள்ளார். இதுபோன்றவர்களால் எப்படி ஆட்சி அமைக்க முடியும்” என்று கேள்வி எழுப்பினார்.
மேலும் அவர், “இடதுசாரிகள், திரிணாமுல் காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளுக்கு வளர்ச்சி பற்றிய தொலைநோக்கு பார்வை இல்லை” என்றும் குறிப்பிட்டார்.
ரேபரேலியில் ராகுல் போட்டியிடுகிறார் என்று அறிவித்த ஒருசில மணி நேரத்தில் மேற்கு வங்கத்தில் நடந்த பிரச்சார கூட்டத்தில் மோடி இவ்வாறு விமர்சித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
தகிக்கும் வெயில்: கொஞ்சலம் ரிலாக்ஸ்… வானிலை மையம் கொடுத்த கூல் அப்டேட்!