தென் சென்னையில் மறுவாக்குப்பதிவு: தமிழிசை வலியுறுத்தல்!
தென்சென்னை தொகுதிக்குட்பட்ட மயிலாப்பூர் 13-வது வாக்குச்சாவடி 122வது வட்டத்தில் மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்று பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று (ஏப்ரல் 20) தெரிவித்துள்ளார்.
தமிழிசை சவுந்தரராஜன் சென்னையில் இன்று (ஏப்ரல் 20) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தேர்தல் நேர்மையாக நடைபெற வேண்டும். அதன்மூலம் நேர்மையாளர்கள் வெற்றி பெற வேண்டும் என்பது தான் ஜனநாயகத்தின் நடைமுறை.
திமுகவிற்கு எப்போதெல்லாம் தோல்வி பயம் வருகிறதோ, அப்போதெல்லாம் அவர்கள் மாற்று பாதையை கடைபிடிப்பது வழக்கம்.
அந்தவகையில், தென்சென்னை தொகுதிக்குட்பட்ட மயிலாப்பூர் 13-வது வாக்குச்சாவடி 122வது வட்டத்தில் 50பேர் புகுந்து உள்ளே இருக்கும் அதிகாரிகளை அடித்து, மிரட்டி கள்ள ஓட்டு போட முயற்சி செய்துள்ளனர். பின்பு அவர்கள் காவல்துறையினரால் தடுக்கப்பட்டுள்ளனர்.
இருந்தும் அந்த வாக்குச்சாவடியில் குளறுபடிகள் நடந்திருக்க வாய்ப்புள்ளது. அதனால், அந்த வாக்குச்சாவடியில் மறு வாக்குப்பதிவு நடத்த நாங்கள் கோரிக்கை விடுத்துள்ளோம்.
அதேபோல், பல வாக்குச்சாவடிகளில் கள்ள ஓட்டு போடும் முயற்சியில் சிலர் ஈடுபட்டுள்ளனர். சோழிங்கநல்லூரிலும் இதேபோன்ற சம்பவம் நடந்துள்ளது, பாஜகவின் ஏஜெண்டுகள் அதனை தடுத்துள்ளனர்.
மேலும், பல இடங்களில் அதிகளவிலான வாக்காளர்களின் பெயர்கள் மொத்தமாக நீக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தியாகராய நகர் 199, 200, 201 இந்த வாக்குச்சாவடிகளில் ஆயிரக்கணக்கான வாக்காளர்களின் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளது.
பெயர் நீக்கம் விவகாரத்தில் தேர்தல் ஆணையம் கவனம் செலுத்த வேண்டும். தேர்தல் ஆணையத்திற்கு மேலும் ஒரு வேண்டுகோள், வெள்ளிக்கிழமை வாக்குப்பதிவை வைக்கிறார்கள். அதனைத் தொடர்ந்து 2 நாட்கள் விடுமுறை என்பதால் இந்த முறை வாக்கு சதவீதம் குறைந்துள்ளது. வாக்களிக்கும் விதிமுறை மாறி அது விடுமுறையாகிவிட்டது.
100 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற அனைத்து தரப்பிலும் அதிக தொகை செலவளிக்கப்பட்டது. ஆனால், அது எந்த விதத்திலும் பயனளிக்கவில்லை என்பது சென்னை போன்ற நகரங்களின் வாக்கு சதவீதத்தில் இருந்தே நன்றாக தெரிகிறது.
எனவே வாக்கு சதவீதம் உயர மக்களிடையே கூடுதல் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.” என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
‘குக் வித் கோமாளி’ ஆரம்ப தேதி வெளியானது… செம குஷியில் ரசிகர்கள்…!
எலான் மஸ்க் இந்தியப் பயணம் திடீர் ரத்து!