25 ஆண்டுகள் முதலமைச்சர்…அஸ்திவாரத்தை அசைக்கும் பாஜக…ஒடிசாவைக் கைப்பற்றப்போவது யார்?

அரசியல் சிறப்புக் கட்டுரை

ஒடிசாவின் தேர்தல் களத்தில் வழக்கத்திற்கு மாறாக அனல் பறக்கத் தொடங்கியுள்ளது. கடந்த 25 ஆண்டுகளாக ஒடிசாவின் அசைக்க முடியாத முதல்வராக இருந்து வருபவர் பிஜூ ஜனதா தளம் கட்சியின் தலைவர் நவீன் பட்நாயக். 2000 ஆம் ஆண்டு தொடங்கி அடுத்தடுத்து நடைபெற்ற 5 சட்டசபை தேர்தல்களிலும் பிஜூ ஜனதா தளம் கட்சியே வாகை சூடியது. ஆனால் 2019 ஆம் ஆண்டிலிருந்து ஒடிசாவில் பாஜக கண்டு வரும் வளர்ச்சி இந்த தேர்தலில் ஓரிசாவின் களத்தில் கடும் அனலை பறக்கச் செய்துள்ளது. ஒடிசாவில் பாராளுமன்றத் தேர்தலுடன் சட்டமன்றத் தேர்தலும் நடைபெற இருப்பதால் பரபரப்பு இன்னும் கூடியுள்ளது.

உடன்பாட்டை எட்டாத கூட்டணி

வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பிஜூ ஜனதா தளத்துடன் கூட்டணி அமைப்பதற்கு பல பேச்சுவார்த்தைகளை பாஜக நடத்தி வந்தது. இரண்டு கட்சிகளும் கூட்டணி அமைத்துப் போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டாததால் இரு கட்சிகளும் எதிரெதிராக தனியாகக் களமிறங்குகின்றன. ஒடிசாவில் மொத்தம் 21 நாடாளுமன்றத் தொகுதிகள் இருக்கின்றன. அதில் 14 தொகுதிகளை பாஜக கேட்பதாகவும், அதனால்தான் கூட்டணியில் உடன்பாடு எட்டப்படவில்லை என்றும் ஒடிசாவிலிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

யார் இந்த பிஜூ பட்நாயக்?

25 ஆண்டுகள் எப்படி நவீன் பட்நாயக்கால் ஒடிசாவில் முதலமைச்சராக இருக்க முடிந்தது என்ற கேள்வி நமக்கு எழும். அதற்கு அவரது தந்தையைப் பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டும். நவீன் பட்நாயக்கின் தந்தை பிஜூ பட்நாயக் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பல ரகசிய மிஷன்களில் ஈடுபட்டதால் பிரிட்டிஷ் அரசாங்கத்தால் சிறை வைக்கப்பட்டவர். இந்திய விடுதலைப் போராட்டம் மட்டுமல்லாமல் இந்தோனேசிய விடுதலைப் போராட்டத்திலும் முக்கியமான பங்கு வகித்தவர். இந்தோனேசியாவில் டச்சு அரசுக்கு எதிராகப் போராடிய தலைவர்களும், வீரர்களும் நாட்டை விட்டு போக முடியாதபடி கடும் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்தபோது, ஜவகர்லால் நேருவின் உத்தரவின் பேரில் பிஜூ பட்நாயக் விமானத்தை எடுத்துக் கொண்டு ரகசியமாக ஜாவா தீவுகளுக்கு பறந்து சென்று, இந்தோனேசிய தலைவர்களை மீட்டு வந்து நேருவை சந்திக்கச் செய்தார். பிஜூ பட்நாயக்கின் மனைவியும் ஒரு பைலட்தான். அவரும் இந்த மிஷனில் இந்தோனேசியாவிற்குச் சென்றார். பிஜூ பட்நாயக்கின் இந்த வீரச் செயலுக்காக, இந்தியாவின் பாரத ரத்னாவைப் போன்ற இந்தோனேசியாவின் உயர்ந்த விருது பிஜூ பட்நாயக்கிற்கு வழங்கப்பட்டது.

பிஜூ ஜனதா தளம் உருவானது எப்படி?

சுதந்திரத்திற்குப் பிறகு ஒடிசா மாநில காங்கிரஸ் தலைவராக இருந்த அவர் 1961 இல் ஒடிசாவின் முதலமைச்சரானார். 1969 இல் காங்கிரசுடன் முரண்பட்டு வெளியில் வந்தவர் உத்கல் காங்கிரஸ் என்ற கட்சியைத் தொடங்கினார். அதன்பிறகு இந்தியாவில் ஜெயப்பிரகாஷ் நாராயணின் இயக்கம் எழுச்சி கண்டபோது அவருடன் இணைந்து கொண்டார். இந்திரா காந்தி அரசாங்கத்தால் எமெர்ஜென்சி அறிவிக்கப்பட்டபோது முதலில் கைது செய்யப்பட்டவர்களில் பிஜூ பட்நாயக்கும் ஒருவர். ஜனதா தளத்தில் இணைந்த அவர் வி.பி.சிங்கை பிரதமராக்குவதற்கு பின்னால் இருந்து வேலை செய்தவர். 1990 ஆம் ஆண்டு ஜனதா தளத்தின் சார்பில் ஒடிசாவின் முதல்வராக மீண்டும் பதவியேற்றார். கலிங்கம் என்ற அடையாளத்தை முன்னிறுத்தி ஒடிசாவின் மாநில உரிமைக்காக போராடியது அவருக்கான நீங்கா இடத்தினை ஒடிசாவின் மக்கள் மனதில் உருவாக்கியது.

1997-இல் பிஜூ பட்நாயக் இறந்த பிறகு அவரது ஆதரவாளர்கள் ஜனதா தளத்திலிருந்து வெளியேறி, அவரது மகனான நவீன் பட்நாயக் தலைமையில் பிஜூ ஜனதா தளம் கட்சியை ஆரம்பித்தனர்.

பாஜகவிற்கு அடித்தளம் போட்ட பிஜூ ஜனதா தளம்

அதுவரையில் ஒடிசாவில் பெரிதாக குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெறாத பாஜக, 1998 இல் பிஜூ ஜனதா தளத்துடன் கூட்டணி அமைத்த பிறகு தனது கால் தடத்தினை பதிக்க ஆரம்பித்தது. 2000 மற்றும் 2004 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற இரண்டு சட்டமன்றத் தேர்தல்களிலும் பிஜூ ஜனதா தளம், பாஜக கூட்டணி மிகப் பெரிய வெற்றி பெற்று நவீன் பட்னாயக் முதலமைச்சரானார்.

தனிப்பெரும் சக்தியாக உருவெடுத்த நவீன் பட்நாயக்

2008 ஆம் ஆண்டு மதமாற்றம் நடப்பதாகச் சொல்லி இந்துத்துவ அமைப்புகளால் ஒடிசாவில் பெரிய மதக்கலவரம் ஏற்பட்டது. இதன் காரணமாக பாஜகவுடனான கூட்டணியை முறித்தது பிஜூ ஜனதா தளம். அதன்பிறகு ஒடிசாவில் பாஜகவின் தடங்கள் மறைய ஆரம்பித்தன. இதற்கு முன்பு பிஜூ ஜனதா தளத்தின் கூட்டணியில் 7 முதல் 9 எம்.பி தொகுதிகளில் வெற்றி பெற்று வந்த பாஜகவால், பிஜூ ஜனதா தளம் வெளியேறிய பிறகு 2009 நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியவில்லை. மறுபக்கம் பிஜூ ஜனதா தளத்தின் வாக்கு சதவீதமோ மடமடவென உயர்ந்தது. ஒடிசாவின் வீழ்த்தவே முடியாத கட்சியாக பிஜூ ஜனதா தளம் உருவெடுத்து, அடுத்தடுத்த தேர்தல்களில் தனியாகவே நின்று அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றிக் கனியை தட்டிப் பறித்தது.

2014 இல் நாடு முழுவதும் மோடி அலை வீசுவதாக சொல்லப்பட்ட போது ஒடிசாவில் நவீன் பட்நாயக் அலையே வீசியது. ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே பாஜகவால் வெற்றி பெற முடிந்தது.

மோடிக்குப் பிறகு ஒடிசாவில் நடந்த மாற்றம்

ஆனால் இந்த நிலைமை ஒரு கட்டத்தில் மாற ஆரம்பித்தது. நவீன் பட்நாயக்கின் வயது முதிர்ச்சியும், அவருக்கு அடுத்ததாக இரண்டாம் கட்டத் தலைவராக யாரையும் உருவாக்காததும் மீண்டும் பாஜகவின் வளர்ச்சிக்கு ஒடிசாவில் வழிவகுத்தது. 2014 இல் மோடி ஆட்சிக்கு வந்ததும் பாஜகவில் look east policy என்றொரு கொள்கை உருவாக்கப்பட்டு ஒடிசா, மேற்குவங்கம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களைக் குறிவைத்து கட்சியை வளர்க்க தனித்திட்டங்கள் உருவாக்கப்பட்டன. மோடி, அமித்ஷா உள்ளிட்டோர் அடிக்கடி ஒடிசாவிற்கு பயணம் செய்தனர். நவீன் பட்நாயக் நிர்வாகத்திற்கு எதிராக மண்டல அளவிலான போராட்டங்கள் பரவலாக பாஜகவால் முன்னெடுக்கப்பட்டன. இதன்காரணமாக 2017 இல் ஒடிசாவில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் பெரிய முன்னேற்றத்தினை பாஜக கண்டது.

அடுத்ததாக 2019 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக 8 தொகுதிகளில் வெற்றி பெற்றதுடன், 34.8% வாக்குகளையும் பெற்று, காங்கிரசை வீழ்த்திவிட்டு ஒடிசாவின் பிரதான எதிர்கட்சியாகவும் உருவெடுத்தது. அத்துடன் ஒடிசாவைச் சேர்ந்த மூவருக்கு மத்திய அமைச்சர் பதவிகளை கொடுத்தது பாஜக.

பிஜூ ஜனதா தளத்தில் போட்டியிடுவதற்கு வாய்ப்பு கிடைக்காத பல நிர்வாகிகள் பாஜகவில் இணைந்தனர். பாஜகவில் அவர்களுக்கான வாய்ப்புகள் கொடுக்கப்பட்டது. இதனால் பாஜகவின் வளர்ச்சி ஒடிசாவின் பல்வேறு பகுதிகளிலும் மென்மேலும் துளிர்விட ஆரம்பித்தது. ஆனாலும் பிஜூ ஜனதா தளத்தின் கட்டமைப்பை வீழ்த்தும் அளவிற்கு பாஜகவின் கட்டமைப்பு வளர்ந்துவிடவில்லை.

மீண்டும் நெருக்கம் காட்டிய மோடி

ஒரு கட்டத்தில் பாஜக பிஜூ ஜனதா தளத்துடன் மீண்டும் நெருங்க ஆரம்பித்தது. நவீன் பட்நாயக்கும் மத்திய அரசுக்கு நெருக்கமானவராக மாறினார். நேரடியாக கூட்டணியில் இல்லாவிட்டாலும் பாராளுமன்றத்தில் பாஜக அரசின் அனைத்து மசோதாக்கள் மற்றும் கொள்கைகளை ஆதரித்து வாக்களிக்கும் கட்சியாக பிஜூ ஜனதா தளம் மாறியது.

இந்த நிலையில் தான் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பிஜூ ஜனதா தளமும், பாஜகவும் கூட்டணி அமைப்பதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்தன. ஒரு மாநிலத்தின் ஆளுங்கட்சியும், பிரதான எதிர்கட்சியும் சேர்ந்து கூட்டணி அமைக்கப் பேச்சுவார்த்தை நடத்தியது அரசியலில் ஒரு விசித்திரமான சூழல் தான்.

பாஜகவில் இணைந்த பிஜூ ஜனதா தளம் எம்.பி

ஆனால் பாஜக அதிக இடங்களை எதிர்பார்த்ததாலும், இரு கட்சியின் நிர்வாகிகளும் இக்கூட்டணியில் பெரிய விருப்பம் காட்டாததாலும் கூட்டணி பேச்சுவார்த்தை முறிந்தது.

அதன்பிறகு இந்த தேர்தலை எதிர்கொள்ள இரண்டு கட்சிகளின் வார் ரூம்களும் போருக்குத் தயாராவதைப் போல தயாராகிக் கொண்டிருக்கின்றன. கூட்டணி இல்லை என்று முடிவான ஒரு வாரத்திலேயே பிஜூ ஜனதா தளத்தின் 6 முறை எம்.பியான பர்துருஹரி மஹ்தாப் பாஜகவில் இணைந்திருக்கிறார். இதன் காரணமாக மற்ற மாநிலங்களில் செய்வதைப் போல் எதிர்கட்சி எம்.பிக்களை தன் கட்சிக்கு இழுக்கும் வேலையை பாஜக, ஒடிசாவிலும் துவங்கிவிட்டதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

தமிழ்நாட்டைச் சேர்ந்த வி.கே.பாண்டியனின் ரோல்

நவீன் பட்நாயக் தமது கட்சியின் முக்கிய ஆக்சன் லீடராக தமிழ்நாட்டைச் சேர்ந்த வி.கே.பாண்டியனை நியமித்துள்ளார். வி.கே பாண்டியன் ஒடிசாவில் ஐ.ஏ.எஸ் அதிகாரியாக இருந்து, நவீன் பட்நாயக்கின் நம்பிக்கைக்குரியவராக மாறி, அவரின் தனிச்செயலராகவும் இருந்தவர். ஒரு கட்டத்தில் ஐ.ஏ.எஸ் பதவியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்ற அவர், 2023 ஆம் ஆண்டின் இறுதியில் பிஜூ ஜனதா தளம் கட்சியிலேயே இணைந்து விட்டார். இப்போது நவீன் பட்நாயக்கிற்கு அடுத்தபடியாக பிஜூ ஜனதா தளத்தின் முக்கியத் தலைவராக இருப்பது வி.கே.பாண்டியன் தான்.

நவீன் பட்நாயக் போன்ற ஆளுமைக்கு இணையான ஒரு இமேஜ் ஒடிசா மாநில பாஜகவில் இல்லாதது பாஜகவிற்கு முக்கியமான மைனசாக இருக்கிறது. மோடியை முன்னிலைப்படுத்தியே பாஜகவானது நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டமன்றத் தேர்தல் இரண்டையும் சந்திக்கிறது. மோடியின் பிம்பத்திற்கு ஒடிசாவில் பெரும் வரவேற்பு இருப்பதால் அதுவே பாஜகவின் ப்ள்ஸ் ஆகவும் மாறுகிறது.

வெல்லப் போவது யார்?

நீண்ட காலமாக ஆட்சியில் இருப்பதால் மக்களிடையே ஏற்பட்டிருக்கிற எதிர்ப்புணர்வு மற்றும் கட்சிக்குள் இருக்கும் உட்கட்சிக் குழப்பம் போன்றவை பிஜூ ஜனதா தளத்திற்கு தலைவலியாக நிற்கின்றன. இவை இரண்டையும் பயன்படுத்தி பாஜக தனது வாக்குகளை அதிகப்படுத்தும் திட்டத்தில் இருக்கிறது.

ஒடிசா முழுதும் பரவியுள்ள கட்சியின் கட்டமைப்பு நவீன் பட்நாயக்கின் அசைக்க முடியாத பலமாக இருக்கிறது. ஆனால் கட்சியின் வளர்ச்சியை உறுதி செய்ய நவீன் பட்நாயக்கிற்கு அடுத்ததாக இரண்டாம் கட்ட பெரிய தலைவர்கள் கட்சியில் இல்லாததும் பிஜூ ஜனதா தளத்தின் மைனஸ்.

சமீப காலமாக காங்கிரசிலிருந்து பல நிர்வாகிகள் பிஜூ ஜனதா தளத்தில் இணைந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு சீட்டு கொடுப்பதன் மூலம் பல இடங்களில் தங்களின் வாக்குவங்கியை சரியாமல் தக்க வைக்கலாம் என பிஜூ ஜனதா தளம் முயற்சித்து வருகிறது.

அதேபோல் பாஜகவும் காங்கிரஸ் நிர்வாகிகளை கட்சிக்குள் இணைப்பதை குறிவைத்து வேலை செய்து வருகிறது. பிஜேபி, பிஜேடி இரண்டு கட்சிகளுமே காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு தூண்டில் போடுவதை தொடர்ச்சியாக செய்து வருகிறார்கள்.

தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகளைப் பொறுத்தவரை ஒடிசாவில் கடுமையான போட்டி நிலவும் என்றே தெரிவிக்கின்றன. இந்தியா டுடே-சி வோட்டர்ஸ் இணைந்து நடத்திய கருத்துக்கணிப்பு பீகாரில் மொத்தமுள்ள 21 மக்களவை தொகுதிகளில் 11 தொகுதிகளை பிஜூ ஜனதா தளம் கைப்பற்றும் என்றும், 10 தொகுதிகளை பாஜக கைப்பற்றும் என்றும் தெரிவித்துள்ளது. இந்தியா டிவி-சி.என்.எக்ஸ் கருத்துக்கணிப்பும் இதே முடிவுகளையே சொல்கிறது.

எனவே ஒடிசாவைப் பொறுத்தவரை ஒரு கடுமையான போட்டி காத்திருக்கிறது. ஆனால் நவீன் பட்நாயக் மற்றும் மோடி இருவருக்கும் சமீப காலங்களில் ஒரு நல்ல உறவு இருந்து வருகிற காரணத்தால், ஒடிசாவில் யார் வெற்றி பெற்றாலும் தேர்தலுக்குப் பிறகு பாஜக கூட்டணிக்கு ஆதரவாக மாறக் கூடிய வாய்ப்பு இருக்கிறது என்பதே ஒடிசாவின் கடந்த காலம் நமக்கு சொல்லும் செய்தியாக இருக்கிறது.

விவேகானந்தன்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பீகார்: பாஜக-நிதிஷூக்கு எதிராகப் போராடும் 34 வயது இளைஞர்

பாஜக கூட்டணி மற்ற மாநிலங்களில் எப்படி இருக்கிறது?

கோவை : ஒரே மேடையில் ஸ்டாலின், ராகுல் பிரச்சாரம்!

எய்ம்ஸ் குறித்து மோடியிடம் கேட்டால் எடப்பாடிக்கு கோபம்: உதயநிதி தாக்கு!

+1
0
+1
2
+1
0
+1
5
+1
0
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *