பிரதமர் மோடி அடுத்தடுத்து தமிழ்நாட்டுக்கு தேர்தல் பரப்புரைக்காக வந்து சென்றுகொண்டிருக்கும் நிலையில், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் இதில் சேர்ந்துகொண்டிருக்கிறார்.
ஏப்ரல் 4, 5 தேதிகளில் தமிழ்நாட்டுக்கு வருவதாக இருந்த அமித் ஷாவின் பயணத் திட்டம் நாளை மட்டும் பிரச்சாரம் என மாற்றி அமைக்கப்பட்டிருக்கிறது.
இன்று (ஏப்ரல் 4) இரவு மதுரை வரும் அமித்ஷா நாளை தேனி, சிவகங்கை, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய பகுதிகளில் பாஜக கூட்டணியினருக்கு தேர்தல் பிரச்சாரம் செய்ய இருக்கிறார். அமித் ஷாவின் தேர்தல் பயணம் கட்சிக்குள் பல சலசலப்புகளுக்கு பிறகே ஒரு முடிவுக்கு வந்திருக்கிறது. குறிப்பாக அமித் ஷாவின் சிவகங்கை பயணம், அவரது அழுத்தத்துக்குப் பிறகே இறுதி செய்யப்பட்டிருக்கிறது என்கிறார்கள்.
இதுகுறித்து சிவகங்கை பாஜக வட்டாரத்தில் விசாரித்தபோது,
“காளையார்கோவில் திமுக ஒன்றிய செயலாளராக இருந்த மேப்பல் சக்தி சமீபத்தில் திமுகவில் இருந்து விலகி பாஜகவுக்கு வந்தார். அவர்தான் இப்போது சிவகங்கை மாவட்ட தலைவர். இந்த நாடாளுமன்றத் தேர்தலில் மேப்பல் சக்தி வேட்பாளராக களமிறக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பாஜக கூட்டணியில் இருக்கும் இந்திய கல்வி முன்னேற்றக் கழகத்தின் தலைவர் தேவநாதன் யாதவ் இங்கே பாஜக வேட்பாளராக நிறுத்தப்பட்டிருக்கிறார்.
தேவநாதன் யாதவ் தனது வேட்பு மனுவில் அவருக்கும் அவரது மனைவிக்குமான சொத்து மதிப்பாக 305 கோடி ரூபாய்க்கு கணக்கு காட்டியிருக்கிறார். இவ்வளவு சொத்துகளை வைத்திருக்கும் வேட்பாளராக இருந்தும் பிரச்சாரத்தில் பெரிய அளவு அவர் சுறுசுறுப்பாக இல்லை.
மாவட்ட தலைவர் மேப்பல் சக்தி உள்ளிட்ட எந்த பாஜக நிர்வாகியுடனும் கலந்துகொள்ளாமல் அவர் தனி டிராக்கில் போய் வருகிறார். திருமயம் அருகே ஒரு சொகுசு ஹோட்டலில் தங்கிக் கொண்டு மாலையானால் யாராவது ஒரு விஐபியை சந்தித்துவிட்டு… தனது ஆதரவாளர்கள் சிலருடன் பிரச்சாரத்துக்கு சென்றுவிட்டு திரும்புகிறார். மற்றபடி அவர் அழுத்தமான பரப்புரை எதுவும் செய்யவில்லை, பணத்தையும் பெரிதாக செலவு செய்யவில்லை.
இந்நிலையில், அமித் ஷா தனது பிரச்சார பயணத்தைத் திட்டமிட்டபோது அதில் ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரத்தின் தொகுதி நிச்சயமாக இடம்பெற வேண்டும் என்று சொல்லியிருக்கிறார். அதன் அடிப்படையில் சிவகங்கையில் ரோடு ஷோ நடத்துவது என திட்டமிடப்பட்டது. மாவட்டத் தலைவருக்கும் தகவல் சொல்லப்பட்டது.
இதற்காக மாவட்ட தலைவர் மேப்பல் சக்தி வேட்பாளார் தேவநாதனிடம், அமித் ஷா வருகிறார். உங்களுக்காகத்தான் வருகிறார். செலவுக்கான ஏற்பாடுகளை செய்யுங்கள் என்று சொல்லியிருக்கிறார். அதற்கு தேவநாதன் யாதவ், ‘எனக்கு இதுவரை பாஜகவிடம் இருந்து எந்த உதவியும் வரவில்லை. கூட்டணிக் கட்சிகளில் பாமகவுக்கெல்லாம் செஞ்சிருக்கீங்களே… அதுபோல எங்களுக்கும் செய்யலாமே’ என்று கேட்டிருக்கிறார்.
இந்த விவகாரத்தை மாவட்ட தலைவர் மேப்பல் சக்தி உடனடியாக மாநில அமைப்புப் பொதுச் செயலாளர் கேசவவிநாயகத்திடம் பாஸ் பண்ணிவிட்டார். உடனே கேசவ விநாயகன் வேட்பாளர் தேவநாதனைத் தொடர்புகொண்டு, ‘அமித் ஷாவே உங்க தொகுதிக்கு பிரச்சாரம் செய்ய விரும்புறாரு. நீங்களும் ஒத்துழைக்கணும்’ என்று அறிவுறுத்தியிருக்கிறார்.
இப்படி வேட்பாளருக்கும் மாவட்ட தலைவருக்கும் இடையிலான சலசலப்புக்கு இடையில்தான் அமித் ஷா சிவகங்கைக்கு செல்கிறார்.
இதேபோல தென்காசியில் கடந்த ஓராண்டாகவே தேர்தலுக்காக வேலை செய்து வந்த ஆனந்தன், தொகுதி ஜான் பாண்டியனுக்கு போனதும் ஆஃப் ஆகிவிட்டார். இது தொடர்பாக ஜான் பாண்டியனும் தலைமைக்கு தகவல் அனுப்ப… இதுகுறித்து கேசவ விநாயகன் தலையிட்டு பஞ்சாயத்து செய்திருக்கிறார்.
அமித் ஷா பிரச்சாரம் செய்யும் இன்னொரு தொகுதி டிடிவி தினகரன் போட்டியிடும் தேனி. டிடிவி தினகரன் பாஜக தரப்பிடம், ‘அமித் ஷா வருகை உள்ளிட்ட தேர்தல் செலவுகளை எல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன். எங்களது திருச்சி வேட்பாளர் செந்தில்நாதனுக்கு மட்டும் உதவுங்கள். அங்கே திமுகவும், அதிமுகவும் கடுமையாக செலவு செய்கிறார்கள். எனவே அவருக்கு மட்டும் உதவுங்கள்’ என்று கோரிக்கை வைத்திருக்கிறார்.
இந்த பின்னணியில் நடைபெறும் அமித் ஷாவின் தமிழ்நாடு பயணத்தில் மதுரை, சிவகங்கை, தேனி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய தொகுதிகளில் மதுரை, கன்னியாகுமரி ஆகிய இரு தொகுதிகளில் மட்டுமே நேரடி பாஜக வேட்பாளர்கள் போட்டியிடுவது குறிப்பிடத் தக்கது.
–வேந்தன்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
எய்ம்ஸ் குறித்து மோடியிடம் கேட்டால் எடப்பாடிக்கு கோபம்: உதயநிதி தாக்கு!
அதிமுக திட்டங்களுக்கு திமுக ஸ்டிக்கர்: ஸ்டாலின் மீது எடப்பாடி குற்றச்சாட்டு!