எய்ம்ஸ் குறித்து மோடியிடம் கேட்டால் எடப்பாடிக்கு கோபம்: உதயநிதி தாக்கு!
எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து கேள்வி கேட்டால் எடப்பாடி பழனிச்சாமிக்கு கோபம் வருகிறது என இன்று (ஏப்ரல் 4) அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கரூர் நாடாளுமன்றத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பாக போட்டியிடும் ஜோதிமணிக்கு ஆதாரவாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (ஏப்ரல் 4) வாக்கு சேகரித்தார்.
அப்போது பேசிய அவர், “இன்று ஆண்களுக்கு நிகராக பெண்கள் இருக்கிறீர்கள். 100 வருடங்களுக்கு முன்பு பெண்களுக்கு அடிப்படை உரிமைகள் கூட மறுக்கப்பட்டது. பெண்களுக்கான அடிப்படை உரிமையை போராடி மீட்டுத் தந்தவர் பெரியார்.
பெண்களுக்கு சொத்துரிமையை கொடுத்தவர் கலைஞர். பெண்களுக்காக புதுமைப் பெண் திட்டத்தைக் கொண்டுவந்தவர் முதலமைச்சர் ஸ்டாலின்.
புதுமைப் பெண் திட்டத்தின்மூலம், அரசு பள்ளிகளில் படித்த பெண்கள் உயர்கல்வி பெறுவதற்காக அரசு அல்லது தனியார் கல்லூரிகளில் சேரும் மாணவிகளுக்கு அவர்களது வங்கி கணக்கில் மாதம் ரூ.1000 அளிக்கப்படுகிறது. புதுமைப் பெண் திட்டத்தின் மூலம் 3 லட்சம் மாணவிகள் இதுவரை பயன்பெற்றுள்ளனர்.
மாணவிகளுக்கான புதுமைப் பெண் திட்டம் போன்று, மாணவர்களுக்கும் மாதம் ரூ.1000 வழங்கும் புதிய திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தற்போது அறிவித்துள்ளார். “தமிழ் புதல்வன்” என்ற இத்திட்டத்தின்மூலம் கல்லூரியில் சேரும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை கனடா நாட்டின் பிரதமர் அங்கு அறிமுகப்படுத்தவுள்ளதாக தெரிவித்துள்ளார். இதுதான் திராவிட மாடல் அரசு. நாம் நமது தேர்தல் பிரச்சாரங்களில், நமது 3 ஆண்டுகால சாதனைகளை மக்களிடம் எடுத்து சொல்கிறோம். தேர்தல் அறிக்கை, தேர்தல் வாக்குறுதிகளை சொல்லி வாக்கு சேகரிக்கிறோம்.
ஆனால், பிரதமராக உள்ள மோடி, எதை சொல்லி தமிழக மக்களிடம் வாக்கு சேகரிக்கிறார். நாம் ஜிஎஸ்டி வரி செலுத்துகிறோம். நாம் ஒரு ரூபாய் செலுத்தினால், ஒன்றிய அரசு நமக்கு வெறும் 29 பைசாவைதான் திருப்பி அளிக்கிறது.
பிரதமர் மோடி வடமாநிலங்களுக்கு நிதியை வாரி வாரி வழங்குகிறார். அதுவும் பாஜக ஆளும் மாநிலங்களுக்கு நிதி அதிகமாக ஒதுக்கப்படுகிறது.
உதாரணமாக, பீகார் மாநிலத்தில் பாஜக கூட்டணியில் உள்ள நிதிஷ்குமார் ஆட்சியில் உள்ளார். நமக்கு ஒரு ரூபாய்க்கு 29 பைசா தருகிறார்கள். ஆனால் பீகாரில் ஜிஎஸ்டி வரி ஒரு ரூபாய்க்கு பதிலாக 7 ரூபாய் திருப்பி அளிக்கப்படுகிறது.
அதேபோன்று, உத்தரப்பிரதேசம் மாநில முதல்வராக யோகி ஆதித்தியநாத் உள்ளார். அங்கு, ஒரு ரூபாய் ஜிஎஸ்டி வரிக்கு பதிலாக ரூ.3 திருப்பி அளிக்கப்படுகிறது. மோடியின் குடும்பம் சிபிஐ, ஐடி, அமலாக்கத்துறை தான். மோடியின் மிக மிக நெருங்கிய நண்பர் அதானி. அரசிடம் இருந்த அனைத்து பொதுத்துறைகளையும் மோடி, அதானியிடம் கொடுத்துவிட்டார்.
எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து மோடியிடம் கேட்டால், எடப்பாடிக்கு கோவம் வருகிறது. இந்த தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி கட்சிகள் நிச்சயமாக வெற்றி பெறும்” என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
Rishabh Pant: ரூ.24 லட்சம் அபராதத்துடன்… 1 போட்டியில் விளையாட தடை விதித்தது பிசிசிஐ
மயிலாடுதுறையில் சிறுத்தை நடமாட்டம்… அச்சத்தில் மக்கள்: வனத்துறை கண்காணிப்பு தீவிரம்!