|

பாஜக கூட்டணி மற்ற மாநிலங்களில் எப்படி இருக்கிறது?

தமிழ்நாட்டில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாமக, தமாகா, அமமுக, ஐ.ஜே.கே, புதிய நீதிக் கட்சி போன்ற கட்சிகள் இணைந்து போட்டியிடுகின்றன. அனைத்து தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு பிரச்சாரங்கள் துவங்கிவிட்டன. அதேபோல் மற்ற மாநிலங்களில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் நிலை என்னவாக இருக்கிறது என்பதைப் பார்ப்போம்.

மேகாலயா, மணிப்பூர் மற்றும் நாகாலாந்து

மேகாலயா மற்றும் நாகாலாந்து மாநிலங்களில் பாஜக போட்டியிடாமல் அங்குள்ள மாநில கட்சிகளுக்கு ஆதரவளிக்கிறது. மேகாலயாவில் தேசிய மக்கள் கட்சிக்கும் (NPP), நாகாலாந்தில் தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சிக்கும் (NDPP) ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளது.

கடந்த சில மாதங்களில் இந்திய அளவில் அதிகம் பேசப்பட்ட சிக்கல் மணிப்பூரில் நடைபெற்ற கலவரம். அங்கு பாஜக அரசு மிகப்பெரிய குற்றச்சாட்டுக்கு உள்ளாக்கப்பட்டது. தற்போது மணிப்பூர் மாநிலத்தில் உள்ள இரண்டு தொகுதிகளில் ஒரு தொகுதியான இன்னர் மணிப்பூர் தொகுதியில் மட்டும் பாஜக போட்டியிடுகிறது. அவுட்டர் மணிப்பூர் தொகுதியில் நாகா மக்கள் முன்னணி கட்சிக்கு ஆதரவளிக்கிறது.

பஞ்சாப்

பஞ்சாப் மாநிலத்தில் சிரோமணி அகாலி தளம் கட்சியுடன் கூட்டணி அமைப்பதற்கு பாஜக தொடர்ந்து முயற்சித்து வந்தது. சிரோமணி அகாலி தளம் கடந்த 2019 தேர்தலிலேயே பாஜகவுடன் தான் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. ஆனால் அதன்பிறகு விவசாயிகள் போராட்டம் பெருமளவில் வெடித்ததால் சிரோமணி அகாலி தளம் பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறுவதாக அறிவித்தது.

பஞ்சாபில் உள்ள 13 தொகுதிகளில் 5 தொகுதிகளை பாஜக கேட்டதாகவும், ஆனால் சிரோமணி அகாலிதளம் 3 தொகுதிகளை மட்டுமே பாஜகவிற்கு கொடுக்க முன்வந்ததாகவும் தி பிரிண்ட் இணையதளம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக பாஜக பஞ்சாப் மாநிலத்தில் எந்த கூட்டணியும் இல்லாமல் தனியாக நிற்கவுள்ளது. 2022 இல் நடைபெற்ற பஞ்சாப் மாநில சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி இல்லாமல் போட்டியிட்டு பாஜக பெற்ற வாக்கு சதவீதம் 6.6% ஆகும்.

பீகார்

பீகாரில் தேசிய ஜனநாயகக் கூட்டணி பலவீனமானதாக இருப்பதாக பார்க்கப்பட்டு வந்த சூழலில், இந்தியா கூட்டணியில் இடம்பெற்றிருந்த நிதிஷ் குமார் திடீரென பாஜக கூட்டணியில் இணைந்தது நாடு முழுக்க பேசுபொருளாக மாறியது. இது பீகார் தேர்தலில் எந்த அளவுக்கு எதிரொலிக்கும் என்பது தேர்தல் முடிவுகளில் தான் தெரியவரும்.

தற்போது பாஜக கூட்டணியில் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம், ராம் விலாஸ் பஸ்வானின் மகனான சிராக் பஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி மற்றும் இரண்டு மாநில கட்சிகள் இடம்பெற்றிருக்கின்றன. இக்கூட்டணியில் இருந்த ராஷ்ட்ரிய லோக் ஜனசக்தி கட்சியின் தலைவர் பசுபதி பராஸ் கூட்டணியை விட்டு வெளியேறியதுடன், மத்திய அமைச்சர் பதவியையும் ராஜினாமா செய்திருக்கிறார்.

பீகாரில் உள்ள 40 தொகுதிகளில் பாஜக 17 தொகுதிகளிலும், ஐக்கிய ஜனதா தளம் 16 தொகுதிகளிலும், லோக் ஜனசக்தி கட்சி 5 தொகுதிகளிலும், ஹிந்துஸ்தானி ஆவாம் மோர்ச்சா 1 தொகுதியிலும், ராஷ்ட்ரிய லோக் சம்தா கட்சி 1 தொகுதியிலும் போட்டியிடுகின்றன.

ஒரிசா

ஒரிசாவில் ஆளுங்கட்சியான பிஜூ ஜனதா தளம் கட்சியுடன் கூட்டணி அமைப்பதற்கு பாஜக முயற்சித்து வந்தது. பிஜூ ஜனதா தளம் கட்சி தொடர்ந்து ஐந்து முறையாக ஒரிசா மாநிலத்தில் ஆட்சியில் இருந்து வரும் கட்சியாகும். ஒரிசாவில் 2019 நாடாளுமன்றத் தேர்தலில் மொத்தமுள்ள 21 தொகுதிகளில் 12 தொகுதிகளில் பிஜூ ஜனதா தளமும், 8 தொகுதிகளில் பாஜகவும், 1 தொகுதியில் காங்கிரசும் வெற்றி பெற்றது. பிஜூ ஜனதா தளம் 42.8% வாக்குகளையும், பாஜக 38.4% வாக்குகளையும் பெற்றிருந்தது. அதே ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பாஜக 32.5% வாக்குகளையே பெற்றது.

நவீன் பட்நாயக்கின் பிஜூ ஜனதா தளத்தோடு கூட்டணி பேசும்போது பாஜக 15 தொகுதிகளைக் கேட்பதாக ஊடகங்களில் செய்தி வெளியானது. தொகுதிப் பங்கீடு உடன்பாட்டை எட்டாததால் ஒரிசாவில் பாஜக தனியாக போட்டியிட உள்ளது.

கர்நாடகா

கர்நாடகாவில் பாரதிய ஜனதா கட்சி குமாரசாமியின் மதச்சார்பற்ற ஜனதா தளம் (JD(S)) கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளது. கர்நாடகாவில் மொத்தமுள்ள 28 தொகுதிகளில் 25 தொகுதிகளில் பாஜக போட்டியிடுகிறது. 3 தொகுதிகளில் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி போட்டியிடுகிறது.

2019 நாடாளுமன்றத் தேர்தலில் 25 தொகுதிகளில் வெற்றி பெற்ற பாஜக 51.75% வாக்குகளைப் பெற்றிருந்தது. அதன்பிறகு 2023 இல் நடைபெற்ற கர்நாடக சட்டமன்றத்தில் பெரும்பான்மையோடு காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றதுடன், பாஜகவின் வாக்கு சதவீதம் 36% சதவீதமாகவும் குறைந்தது. இந்நிலையில் 13% வாக்குகளைப் பெற்ற மதச்சார்பற்ற ஜனதா தளத்துடன் பாஜக கூட்டணி வைத்திருக்கிறது.

தெலுங்கானா

தெலுங்கானா மாநிலத்தில் மொத்தம் 17 மக்களவை தொகுதிகள் இருக்கின்றன. 2019 நாடாளுமன்றத் தேர்தலில் 19.5% வாக்குகளைப் பெற்று 4 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றிருந்தது. ஆனால் கடந்த ஆண்டு நடைபெற்ற தெலுங்கானா சட்டமன்றத் தேர்தலில் பாஜகவின் வாக்கு சதவீதம் 14 சதவீதமாகக் குறைந்தது. ஒரு பக்கம் இந்தியா கூட்டணியில் காங்கிரசும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் போட்டியிடுகின்றன. இன்னொரு பக்கம் சந்திரசேகர ராவின் பி.ஆர்.எஸ் கட்சி பகுஜன் சமாஜ் கட்சியுடன் கூட்டணி வைத்து களமிறங்கி உள்ளது. பாஜக 17 தொகுதிகளிலும் தனியாக வேட்பாளர்களை நிறுத்த உள்ளது.

மத்தியப் பிரதேசம்

மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள 29 தொகுதிகளில் பாஜக கடந்த 2019 தேர்தலில் தனியாக போட்டியிட்டு 54% சதவீத வாக்குகளைப் பெற்று 28 இடங்களை வென்றிருந்தது. எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி 34.5% வாக்குகளைப் பெற்றிருந்தாலும் 1 தொகுதியை மட்டுமே வெல்ல முடிந்தது. 2023 இல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பாஜகவே பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்திருக்கிறது. ஆனால் பாஜகவின் வாக்கு சதவீதம் 48.5% சதவீதமாகக் குறைந்திருக்கிறது. அதேசமயம் காங்கிரசின் வாக்கு சதவீதம் 40.4% சதவீதமாக அதிகரித்திருக்கிறது. இந்த நிலையில் இந்த முறையும் 29 தொகுதிகளுக்கும் பாஜக வேட்பாளர்களை களமிறக்குகிறது.

சட்டீஸ்கர்

சட்டீஸ்கர் மாநிலத்தில் மொத்தம் 11 மக்களவை தொகுதிகள் உள்ளன. 2019 பாராளுமன்றத் தேர்தலில் 11 தொகுதிகளிலும் போட்டியிட்ட பாஜக 50.7% சதவீத வாக்குகளைப் பெற்று 9 தொகுதிகளில் வெற்றி பெற்றது. 2 தொகுதிகளில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சி 41 சதவீத வாக்குகளைப் பெற்றிருந்தது. 2023 சட்டமன்றத் தேர்தலிலும் பாஜக பெரும்பான்மையோடு வெற்றி பெற்று ஆட்சி அமைத்திருக்கிறது. ஆனால் பாஜகவின் வாக்கு சதவீதம் 46.3% சதவீதமாகக் குறைந்திருக்கிறது. காங்கிரசின் வாக்கு சதவீதம் 42.2% சதவீதமாக உள்ளது. மீண்டும் 11 தொகுதிகளிலும் வேட்பாளர்களை களமிறக்குகிறது பாஜக.

ஜார்க்கண்ட்

ஜார்க்கண்ட் மாநிலத்தில் மொத்தம் 14 மக்களவை தொகுதிகள் உள்ளன. 2019 பாராளுமன்றத் தேர்தலில் பாஜக, அனைத்து ஜார்க்கண்ட் மாணவர் யூனியனுடன் (AJSU) இணைந்து போட்டியிட்டது. பாஜக 13 தொகுதிகளிலும், AJSU ஒரு தொகுதியிலும் போட்டியிட்டது. 56% வாக்குகளைப் பெற்று 12 தொகுதிகளில் பாஜக கூட்டணி வெற்றி பெற்றது.

ஆனால் அதே ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ஹேமந்த் சோரனின் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (JMM) கட்சி, காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம் ஆகியவை கூட்டணி அமைத்து போட்டியிட்டன. இக்கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. பாஜகவின் வாக்கு சதவீதம் 33% சதவீதமாகக் குறைந்து தோல்வியடைந்தது. தற்போது ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரென் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ளது நாடு முழுக்க விவாதமாகியுள்ள நிலையில், பாஜக மீண்டும் 2019 தேர்தலைப் போலவே AJSU உடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது.

மேற்கு வங்காளம்

மேற்கு வங்கத்தில் மொத்தம் 42 மக்களவை தொகுதிகள் உள்ளன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோட்டையாக பார்க்கப்பட்ட மேற்கு வங்கத்தில் பலவீனமாக இருந்த பாஜக 2019 இல் பெரும் வளர்ச்சியைக் கண்டது. 2014 பாராளுமன்றத் தேர்தலில் 2 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றிருந்த பாஜக 2019 பாராளுமன்றத் தேர்தலில் 18 தொகுதிகளில் வெற்றி பெற்றதுடன் 40.7% சதவீத வாக்குகளையும் பெற்றது. 2021 சட்டமன்றத் தேர்தலிலும் இரண்டாம் இடம் பிடித்த பாஜக 38% வாக்குகளைப் பெற்றது.

இந்தியா கூட்டணியில் இருந்தாலும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மேற்கு வங்கத்தில் 42 தொகுதிகளுக்கும் தனியாக வேட்பாளர்களை அறிவித்திருக்கிறது. பாஜகவும் இந்த முறை மேற்கு வங்கத்தில் தனியாகவே வேட்பாளர்களை களமிறக்குகிறது.

மகாராஷ்டிரா

மகாராஷ்டிரா இந்தியாவின் 2வது அதிக தொகுதிகளைக் கொண்ட மாநிலம். இங்கு 48 மக்களவை தொகுதிகள் இருக்கின்றன. மகாராஷ்டிராவைப் பொறுத்தவரை கடந்த 5 ஆண்டுகளில் பல அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. சிவசேனா கட்சியை உடைத்த ஏக்நாத் ஷிண்டே அக்கட்சியின் பெரும்பான்மையான எம்.எல்.ஏக்களுடன் பாஜக கூட்டணியில் இணைந்ததோடு, தற்போது மகாராஷ்டிராவின் முதலமைச்சராகவும் இருக்கிறார். சிவசேனா கட்சியின் தலைவராக இருந்த உத்தவ் தாக்கரே சிவசேனா(உத்தவ்) பிரிவு என்ற பெயரில் தேர்தலில் இந்தியா கூட்டணியில் இருக்கிறார். அதேபோல் சரத் பவாரின் தேசியவாத கட்சியிலிருந்து பெரும்பான்மையான சட்டமன்ற உறுப்பினர்களை சேர்த்துக் கொண்டு அஜித் பவார் பாஜக கூட்டணியில் இணைந்ததுடன், மகாராஷ்டிராவின் துணை முதல்வராகவும் ஆகியிருக்கிறார். தேசியவாத காங்கிரஸ் (சரத்பவார்) பிரிவு என்ற பெயருடன் சரத் பவார் இந்தியா கூட்டணியில் இருக்கிறார்.

2019 பாராளுமன்றத் தேர்தலில் பாஜக சிவசேனா கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டு 41 தொகுதிகளில் வெற்றி பெற்றது. பாஜக 23 தொகுதிகளிலும் சிவசேனா 18 தொகுதிகளிலும் வென்றிருந்தது. பாஜகவின் 2019 வாக்கு சதவீதம் என்பது தனியாக 28% சதவீதமாக இருந்தது. சிவசேனாவிற்கு 23.5% வாக்குகள் பதிவாகின.

அதே ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் சிவசேனாவோடு கூட்டணி அமைத்து போட்டியிட்ட பாஜக 25.75% வாக்குகளைப் பெற்றது. ஆனால் சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே தேர்தலுக்குப் பிறகு காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரசோடு கூட்டணி அமைத்து ஆட்சியில் அமர்ந்தார்.

காங்கிரஸ், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மூன்று கட்சிகளும் தனித்தனியாக 16% வாக்குகளைப் பெற்றிருந்தன. இதில் இரண்டு கட்சிகள் பிளவுபட்டு அவை பாஜக கூட்டணியில் இணைந்திருக்கின்றன.

இன்னும் தொகுதிப் பங்கீடு பாஜக கூட்டணியில் முடிவடையாத நிலையில், பாஜக 26 முதல் 28 தொகுதிகளில் போட்டியிட முயன்று வருகிறது. ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா கட்சிக்கு 12 முதல் 14 தொகுதிகள் ஒதுக்கப்படலாம் என்றும், அஜித் பவாரின் தேசியவாத காங்கிரசுக்கு 5 தொகுதிகள் வரை ஒதுக்கப்படலாம் என்றும் மகாராஷ்டிர ஊடகங்களின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆந்திரா

ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி பாஜக கூட்டணியில் முக்கிய நகர்வாக பார்க்கப்படுகிறது. அத்துடன் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியும் பாஜக கூட்டணியில் இருக்கிறது.

ஆந்திராவில் மொத்தமுள்ள 25 இடங்களில் 17 தொகுதிகளில் தெலுங்கு தேசம் கட்சி போட்டியிடுகிறது. பாஜக 6 தொகுதிகளிலும், ஜன சேனா கட்சி 2 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது.

உத்திரப் பிரதேசம்

இந்தியாவிலேயே அதிக எம்.பி தொகுதிகள் கொண்ட பெரிய மாநிலமாக உத்திரப் பிரதேசம் இருக்கிறது. இங்கு மொத்தம் 80 மக்களவை தொகுதிகள் இருக்கின்றன.

உத்திரப் பிரதேசத்தில் பாஜக வலுவாக இருப்பதால் 74 இடங்களில் போட்டியிடுகிறது. மீதமுள்ள 6 தொகுதிகளை மட்டும் கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கியுள்ளது. ராஷ்டிரிய லோக் தள் (RLD) கட்சிக்கு 2 தொகுதிகளும், அப்னா தள் கட்சிக்கு இரண்டு தொகுதிகளும், சுஹேல்தேவ் பாரதிய சமாஜ் கட்சிக்கு (SBSP) 1 தொகுதியும், நிஷாத் (NISHAD) கட்சிக்கு 1 தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளன.

அசாம்

அசாமில் மொத்தம் 14 மக்களவை தொகுதிகள் உள்ளன. இதில் பாஜக 11 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அசாம் கன பரிஷத் கட்சி பாஜக கூட்டணியில் 2 தொகுதிகளிலும் யூனைடெட் பீப்பிள்ஸ் பார்ட்டி லிபரல் (UPPL) கட்சி 1 தொகுதியிலும் போட்டியிடுகிறது.

ராஜஸ்தான்

ராஜஸ்தான் மாநிலத்தில் பாஜக தனித்துக் களமிறங்குகிறது. கடந்த 2019 தேர்தலில் ராஷ்டிரிய லோக் தந்திரிக் கட்சியுடன் (RLP) கூட்டணி வைத்திருந்த பாஜக அக்கட்சிக்கு 1 தொகுதியை ஒதுக்கியிருந்தது. 2020 விவசாயிகள் போராட்டத்தின் போது ஆர்.எல்.பி கட்சி பாஜக கூட்டணியிலிருந்து விலகியது. இதன் காரணமாக இந்த முறை ராஜஸ்தானில் மொத்தமுள்ள 25 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட உள்ளது பாஜக.

டெல்லி

டெல்லியில் 7 மக்களவை தொகுதிகள் உள்ளன. கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் 7 தொகுதிகளையும் பாஜகவே கைப்பற்றியிருந்தது. ஆனால் அதன் பிறகு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி பெரிய வெற்றியைப் பெற்று ஆட்சி அமைத்தது. தற்போது ஆம் ஆத்மி கட்சி காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்திருக்கும் நிலையில் 7 தொகுதிகளிலும் தனியாக நிற்கிறது பாஜக.

கேரளா

கேரளாவில் 20 மக்களவை தொகுதிகள் உள்ளன. இங்கு பாஜக பாரத் தர்ம ஜன சேனா கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. பாஜக16 தொகுதிகளிலும், பாரத் தர்ம ஜன சேனா 4 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.

2019 தேர்தலிலும் BDJS கட்சியுடனேயே கூட்டணி அமைத்து போட்டியிட்ட பாஜக 13% வாக்குகளைப் பெற்றது. ஆனால் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியவில்லை. 2021 இல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் 12.4% வாக்குகளைப் பெற்ற பாஜக, அத்தேர்தலிலும் எந்த வெற்றியையும் பெற முடியவில்லை.

விவேகானந்தன்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பானை சின்னம்: டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசிக மேல்முறையீடு!

மீண்டும் வெல்வாரா தமிழச்சி…குறிவைக்கும் ஜெயவர்தன்…தட்டிப் பறிப்பாரா தமிழிசை..தென்சென்னை ரேஸில் முந்துவது யார்?

தமிழ்நாட்டின் வேட்பாளர் பட்டியலில் பெண்களுக்கு ஏன் இந்த அவல நிலை?

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts