பீகார்: பாஜக-நிதிஷூக்கு எதிராகப் போராடும் 34 வயது இளைஞர்

அரசியல் சிறப்புக் கட்டுரை

பீகாரில் நடக்கும் அரசியல் மாற்றங்கள் என்பது எப்போதுமே இந்தியா முழுதும் உற்று கவனிக்கப்படும். 1976 எமெர்ஜென்சி காலத்தில் பீகாரில் ஜெயப்பிரகாஷ் நாராயணன் உருவாக்கிய எழுச்சி நாட்டையே உலுக்கிப் போட்டது. வட மாநிலங்களில் OBC மக்களின் எழுச்சிக்கு விதை போட்டதில் பீகாரின் அரசியலுக்கு முக்கியப் பங்கு உள்ளது.

அதனால் தான் இந்த தேர்தலிலும் பீகாரில் எந்த கூட்டணி வெற்றி பெறப் போகிறது என்பதை நாடே கவனித்து வருகிறது. இந்தியா கூட்டணி உருவாக்கப்பட்டபோது அதன் முதல் கூட்டம் பீகாரின் பாட்னாவில் தான் நடைபெற்றது. அந்த கூட்டத்தை நடத்தியதில் முக்கியப் பங்கு வகித்தவர் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவரும் பீகார் முதலமைச்சருமான நிதிஷ்குமார்.

பிரம்மாண்டமாக உருவான இந்தியா கூட்டணி

பீகார் மாநிலத்தில் இந்தியா கூட்டணி அசைக்க முடியாத மிக வலுவான கூட்டணியாக பார்க்கப்பட்டது. லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி, நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம், காங்கிரஸ் கட்சி, சிபிஐ, சிபிஎம், சிபிஐ (எம்.எல்) ஆகிய மூன்று முக்கிய கம்யூனிஸ்ட் கட்சிகள் என பிரம்மாண்டமான கூட்டணியாக இந்தியா கூட்டணி உருவானது.

மேலும் இந்தியாவிலேயே முதல்முறையாக லாலு மற்றும் நிதிஷின் கூட்டணி ஆட்சி சாதி வாரிக் கணக்கெடுப்பை நடத்தி முடித்ததுடன் அதனை வெளியிட்டு மிகப்பெரும் விவாதத்தை உருவாக்கியது. இதன் காரணமாக நாடு முழுக்க ஓ.பி.சி அரசியலின் முகமாக இந்தியா கூட்டணி மாறியது. பாஜக ஓ.பி.சி மக்களுக்கு செய்தது என்ன என்ற கேள்விகளும் பாஜகவை நோக்கி எழ ஆரம்பித்தன. காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தியும் ஓ.பி.சி அரசியலை வலுவாகப் பேசி இந்துத்துவ அரசியலுக்கு எதிரான அரசியலாக சாதி வாரிக் கணக்கெடுப்பை முன்வைத்தார்.

நிதிஷ்குமார் அடித்த யூடர்ன்

இந்த நிலையில் திடீர் திருப்பமாக, இந்தியா கூட்டணியின் முக்கிய முகங்களில் ஒன்றாக இருந்த நிதிஷ் குமார் இந்தியா கூட்டணியிலிருந்து விலகி பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்தார். பீகாரில் தனிப் பெரும் கட்சியாக அதிக தொகுதிகளை வென்றது லாலு பிரசாத்தின் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியே. அக்கட்சியின் துணையுடன் தான் நிதிஷ் குமார் பீகாரின் முதலமைச்சராக இருந்தார். ஆனால் நிதிஷ் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, பாஜக கூட்டணியில் இணைந்து பாஜகவின் ஆதரவுடன் மீண்டும் முதல்வராகி விட்டார்.

பீகாரில் சிறு சிறு கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி வைத்திருந்த பாஜக அணி நிதிஷ்குமார் சேர்ந்த பிறகு வலுவான கூட்டணியைப் போன்ற உருவத்தினைப் பெற்றது. பீகாரின் சாதி வாரிக் கணக்கெடுப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்த பாஜக, நிதிஷ் குமாரின் வருகைக்குப் பிறகு நாங்கள் தான் ஓ.பி.சி மக்களுக்கான கட்சி என்று பேசி வருகிறது. நிதிஷின் மாற்றம் பீகாரின் அரசியலிலும் சில மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கிறது என்றே சொல்ல வேண்டும்.

முடிந்த தொகுதிப் பங்கீடு

பீகாரில் உள்ள 40 தொகுதிகளிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணி மற்றும் இந்தியா கூட்டணி ஆகிய இரண்டு கூட்டணிகளின் தொகுதிப் பங்கீடும் முடிந்து விட்டது. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜகவிற்கு 17 தொகுதிகளும், நிதிஷின் ஐக்கிய ஜனதா தளத்திற்கு 16 தொகுதிகளும், ராம் விலாஸ் பஸ்வானின் மகன் சிராக் பஸ்வான் தலைவராக இருக்கும் லோக் ஜன சக்தி கட்சிக்கு 5 தொகுதிகளும் மற்ற கட்சிகளுக்கு 2 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.

அதே போல் இந்தியா கூட்டணியில் தேஜஸ்வி யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சிக்கு 26 தொகுதிகளும், காங்கிரஸ் கட்சிக்கு 9 தொகுதிகளும், மூன்று கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் சேர்த்து 5 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.

கவனத்தை ஈர்த்த தேஜஸ்வி

சமீபத்தில் பீகாரில் தேஜஸ்வி யாதவ் நடத்திய நடைபயணத்தில் கூடிய மக்கள் கூட்டம் அனைவரின் கவனத்தையும் அவரை நோக்கி திருப்பியுள்ளது. நிதிஷ் குமார் கூட்டணி மாறிய பிறகு இந்தியா கூட்டணி பலமிழந்துவிட்டது என்று செய்யப்பட்ட பிரச்சாரங்களை மறு பரிசீலனை செய்ய வைத்துள்ளது தேஜஸ்விக்கு கூடிய கூட்டம்.

ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி பாபர் மசூதி இடிப்பிற்கு கடுமையான எதிர்ப்பினை பதிவு செய்த கட்சி. நாடு முழுதும் அத்வானி ரத யாத்திரை நடத்திய போது, அவரை பீகாரில் கைது செய்ய உத்தரவிட்டது லாலுவின் அரசு. இதனால்தான் அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டதை பெரும் பிரச்சாரமாக பீகாரில் முன்னெடுத்து வருகிறது பாஜக. இதன் மூலம் இந்துக்களுக்கு எதிரான அரசியல் செய்வதாக ராஷ்டிரிய ஜனதா தளத்தினை குறிவைத்திருக்கிறது பாஜக.

யாதவ் மற்றும் முஸ்லிம்களின் வாக்கு வங்கி ராஷ்டிரிய ஜனதா தளத்தின் பலமாக பார்க்கப்படும் சூழலில், தலித்துகளின் வாக்குகளையும் தனதாக்க வேண்டுமென கடுமையாக முயன்று வருகிறார் தேஜஸ்வி.

சாதிக் கட்சிகளை மையப்படுத்திய பாஜகவின் அரசியல்

பாஜகவைப் பொறுத்தவரை பீகாரின் பல்வேறு சமூகங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளுடன் கூட்டணி வைப்பதன் மூலம் அவர்களின் வாக்குகளைப் பெற்றுவிடலாம் என்ற ஃபார்முலாவைப் பயன்படுத்தியுள்ளது. சாதி கட்சிகளின் சின்ன சின்ன தலைவர்களுக்குக் கூட பீகாரில் ஒய் பிளஸ் செக்யூரிட்டியினை அளித்து முக்கியத்துவத்தைக் கொடுப்பதன் மூலம் அந்தந்த சாதி வாக்குகளை பெற முயற்சித்து வருகிறது.

நிதிஷ்குமாரைப் பொறுத்தவரை அவர் பாஜகவால் விழுங்கப்பட்டுவிட்டதாகவும், அவரது அரசியல் எதிர்காலம் என்பது கேள்விக்கு உள்ளாகியிருப்பதாகவும் முக்கியமான அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.

தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த ஆர்.ஜே.டி

2019 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவின் இதே கூட்டணி கிட்டத்தட்ட 52% வாக்குகளைப் பெற்றது. 2020 சட்டமன்றத் தேர்தலில் இது 34.8% சதவீதமாகக் குறைந்தது.

இன்னொரு பக்கம் 2019 நாடாளுமன்றத் தேர்தலில் 23% வாக்குகளையே பெற்ற தேஜஸ்வி யாதவ் கூட்டணியின் வாக்கு சதவீதம், 2020 சட்டமன்றத் தேர்தலில் கிட்டத்தட்ட 36 சதவீதமாக அதிகரித்தது. இதனால் ராஷ்டிரிய ஜனதா தளம் பீகாரின் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது.

தேஜஸ்வி யாதவின் இந்த எழுச்சி பீகாரில் நாடாளுமன்றத் தேர்தலில் என்ன விளைவை ஏற்படுத்தப் போகிறது, அதேபோல் நிதிஷ்குமார் நம்பகத்தன்மை இல்லாத தலைவர் எனும் விமர்சனங்கள் பீகாரின் மூலை முடுக்கெங்கும் போய் சேர்ந்திருக்கின்றன, இது என்ன விளைவை ஏற்படுத்தும் என்பதும் இத்தேர்தலில் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

நிதிஷ்குமார் கூட்டணியில் சேர்ந்ததும் ஓ.பி.சி வாக்குகளைப் பெற தனக்கு புது தெம்பு கிடைத்து விட்டதாக பாஜக நம்புகிறது. ஒரு கடுமையான களம் பீகாரில் காத்திருக்கிறது என்ற போதிலும், கிரிக்கெட் பிளேயராக இருந்து லாலுவின் மகன் என்ற ஒரே அடையாளத்துடன் அரசியலில் நுழைந்து, 34 வயது இளைஞராக தலைமையேற்று களத்தில் நிற்கும் தேஜஸ்வி யாதவ் பாஜக-நிதிஷ் அணிக்கு கடும் போட்டியைத் தான் தந்து கொண்டிருக்கிறார்.

விவேகானந்தன்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கடலூர்: தங்கர் பச்சானின் அலைபேசி… விஷ்ணுபிரசாத்தின் நம்பிக்’கை’… தேனீயாய் தேமுதிக

பாஜக கூட்டணி மற்ற மாநிலங்களில் எப்படி இருக்கிறது?

ஜனாதிபதிக்கு அவமரியாதை… பெண் என்பதாலா? பழங்குடி என்பதாலா? : தலைவர்கள் கண்டனம்!

+1
0
+1
0
+1
0
+1
3
+1
0
+1
2
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *