சிலிண்டர் விலையில் 200 ரூபாய் குறைப்பால் பாஜகவின் பத்தாண்டு கால பாவங்கள் ஒருபோதும் கழுவப்படாது என்று மல்லிகார்ஜூன கார்கே கடுமையாக விமர்சித்துள்ளார்.
கடந்த சில மாதங்களாக ரூ.1,100க்கு விற்கப்பட்டு வரும் வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் ரூ.200 வரை குறைக்க மத்திய அமைச்சரவை இன்று (ஆகஸ்ட் 29) முடிவு செய்துள்ளது.
வர இருக்கும் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற தேர்தல்களில், கடந்த 9 ஆண்டுகளில் 3 மடங்காக உயர்ந்துள்ள கேஸ் சிலிண்டர் விலை எதிரொலிக்கும் என்று கருதப்படுகிறது.
காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் கேஸ் சிலிண்டர் விலை குறைப்பை தங்களது தேர்தல் வாக்குறுதியாக அறிவிக்க திட்டமிட்டிருந்தன.
இந்த நிலையில் இன்று டெல்லியில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் ரூ.200 வரை குறைக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
ரக்ஷா பந்தன் பண்டிகையில் விலை குறைப்பு!
இதுகுறித்து பிரதமர் மோடி தனது சமூகவலைதள பக்கத்தில், “ரக்ஷா பந்தன் பண்டிகை நம் குடும்பத்தில் மகிழ்ச்சியை அதிகரிக்கும் நாள். இந்த நாளில் சிலிண்டர் விலை குறைப்பு நாட்டில் உள்ள சகோதரிகளின் வசதியை அதிகரித்து அவர்களின் வாழ்க்கையை எளிதாக்கும். என்னுடைய ஒவ்வொரு சகோதரியும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும், ஆரோக்கியமாக இருக்க வேண்டும், மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். இதுவே என் விருப்பம்” என்று கூறியிருந்தார்.
சிலிண்டர் விலை குறைப்பினை ”ஓணம் மற்றும் ரக்ஷா பந்தன் பண்டிகைக்காக நாட்டின் பெண்களுக்கு மோடி வழங்கிய பரிசு” என்று மத்திய அமைச்சர் அனுராக் தாகூரும் தெரிவித்திருந்தார்.
வாக்குகள் குறையும் பரிசுகள்!
இந்த நிலையில் மத்திய அரசின் சிலிண்டர் விலைக் குறைப்பு முடிவை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடுமையாக சாடியுள்ளார்.
அவர், “தேர்தல் வாக்குகள் எப்போது ‘குறைகிறதோ, அப்போது ’தேர்தல் பரிசுகள்’ அறிவிக்கப்படுகிறது.
ஒன்பதரை ஆண்டுகளாக, 400 ரூபாய் எல்பிஜி சிலிண்டர்களை, 1,100 ரூபாய்க்கு விற்று, சாமானியரின் வாழ்வை சீரழித்து வந்த போது இந்த ‘திடீர் பாசப் பரிசு’ எதுவும் நினைவுக்கு வராதது ஏன்?
மக்கள் உழைத்து சம்பாதித்த பணத்தை, இரக்கமற்ற முறையில் கொள்ளையடித்த மோடி அரசு, இப்போது தாய்மார்கள் மற்றும் சகோதரிகள் மீது திடீர் பாசத்தை காட்டுகிறது.
ஒன்பதரை ஆண்டுகளாக 140 கோடி இந்தியர்களை ‘சித்திரவதை’ செய்த பாரதிய ஜனதா அரசு இப்போது சிறு குழந்தையிடம் காட்டுவது போன்று ‘தேர்தல் லாலிபாப்’களை கொடுப்பது பலனளிக்காது என்பதை பாரதிய ஜனதா அரசு தெரிந்து கொள்ள வேண்டும்” என்று விமர்சித்துள்ளார்.
பாவங்கள் கழுவப்படாது!
மேலும் அவர், “உங்கள் பத்தாண்டு கால பாவங்கள் கழுவப்படாது. 200 ரூபாய் மானியத்தால் 2024 நாடாளுமன்ற தேர்தலில் உங்கள் மீதான நாட்டு மக்களின் கோபம் குறையாது. மோடி அரசுக்கு எதிர்கட்சியான ‘இந்தியா’ மீது பயம் வந்துவிட்டது அது நல்லதுதான்” என்று காட்டமாக கார்கே கூறியுள்ளார்.
கிறிஸ்டோபர் ஜெமா
காஷ்மீரில் முதன்முறையாக வலம் வந்த உலக அழகிகள்!
மகளிர் உரிமைத் தொகை : பான் – ஆதார் இணைக்காதவர்களுக்குக் கிடைக்குமா?