“கனிமொழியை சந்திக்காத ஸ்டாலின் செந்தில் பாலாஜியை சந்திக்கிறார்” – சி.வி.சண்முகம்

Published On:

| By Selvam

கனிமொழி கைது செய்யப்பட்டபோது அவரை சென்று சந்திக்காத ஸ்டாலின் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டவுடன் சென்று பார்க்கிறார் என அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.

செந்தில் பாலாஜி கைது விவகாரம் மற்றும் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு தொடர்பாக அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.சண்முகம், முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், விஜயபாஸ்கர், பெஞ்சமின் உள்ளிட்டோர் இன்று (ஜூன் 15) ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து புகார் மனு அளித்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி சண்முகம், “செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர்வது அரசியலமைப்பிற்கு எதிரானது. அவர் கைது செய்யப்பட்டவுடன் அமைச்சரவையிலிருந்து நீக்கியிருக்க வேண்டும். திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் செந்தில் பாலாஜியை சுதந்திர போராட்ட தியாகி போல சித்தரித்து கொண்டிருக்கிறார்கள். முதல்வர் ஸ்டாலின் செந்தில் பாலாஜிக்கான அனுதாபத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார். கனிமொழி கைது செய்யப்பட்டபோது அவரை சந்திக்காத ஸ்டாலின், செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டவுடன் சென்று பார்க்கிறார்.

திமுக தலைமையிலான ஆட்சி வந்தால் செந்தில் பாலாஜி கைது செய்யப்படுவார் என்று ஸ்டாலின் கூறினார். தற்போது செந்தில் பாலாஜியை உத்தமர், காந்தி, இயேசுவை போல சித்தரித்துக்கொண்டிருக்கிறார்.

செந்தில் பாலாஜியை மருத்துவமனையில் சபரீசன் சந்தித்தது ஏன் . அவர் கடந்த இரண்டு ஆண்டுகளில் கலால் துறையில் ரூ.40 ஆயிரம் கோடி ஊழல் செய்திருக்கிறார். இந்த பணம் முதல்வரின் குடும்பத்திற்கு சென்றுள்ளது.

ஓமந்தூரர் மருத்துவமனை திமுக அறிவாலயமாக மாறியுள்ளது. செந்தில் பாலாஜிக்கு மனித உரிமை மீறல் நடந்துள்ளது என்று கூறுகிறவர்கள் கரூரில் வருமான வரித்துறை அதிகாரிகள் தாக்கப்பட்ட போது கண்டிக்கவில்லை. செந்தில் பாலாஜி வழக்கை திசைதிருப்ப பார்க்கிறார். உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியும் சிசிபி செந்தில் பாலாஜியை விசாரிக்கவில்லை. உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தான் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டுள்ளார். பாஜக அவரை கைது செய்ய அழுத்தம் கொடுக்கவில்லை என்று சி.வி.சண்முகம் தெரிவித்தார்.

செல்வம்

செந்தில் பாலாஜி வழக்கு : நாளை உத்தரவு!

நீதிமன்றத்தில் நடந்தது என்ன?: வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ விளக்கம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel