காஷ்மீரில் முதன்முறையாக வலம் வந்த உலக அழகிகள்!

டிரெண்டிங்

அடுத்த மாதம் நடைபெறும் ஜி20 மாநாட்டைத் தொடர்ந்து, இந்தியாவில் 27 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற உள்ள உலக அழகி போட்டி அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

இந்தியாவில் முதன்முறையாக 1996ஆம் ஆண்டு பெங்களூரில் உலக அழகிப் போட்டி நடைபெற்றது.  அதனைத்தொடர்ந்து இந்த ஆண்டு 71வது உலக அழகிப் போட்டி  வரும் டிசம்பர் 8-ம் தேதி ஜம்மு காஷ்மீர் சர்வதேச மாநாட்டு மையத்தில் நடைபெற உள்ளது. இதற்கான செய்தியாளர் சந்திப்பு இன்று(ஆகஸ்ட் 29) நடைபெற்றது.

இதில் உலக அழகிப் போட்டியின் தலைமை நிர்வாக அதிகாரி ஜூலியா எரிக் மோரேலி வருகை தந்தார். அவருடன் நடப்பு உலக அழகி கரோலினா பைலாவ்ஸ்கா, இந்திய அழகி சினி ஷெட்டி மற்றும்  கரீபியன் உலக அழகி எமி பெனா ஆகியோர் கலந்து கொண்டனர்.

உலக அழகிப் போட்டியை இந்தியா நடத்துவது குறித்து எரிக் மோரேலி பேசுகையில்,  “காஷ்மீரில் உலக அழகி போட்டி வரும் டிசம்பர் 8 ஆம் தேதி நடைபெற உள்ளது. அதற்காக 140 நாடுகளைச் சேர்ந்த உலக அழகி குழுவினர் நவம்பர் மாதமே காஷ்மீருக்கு வருவார்கள். அப்போது உங்களைப் பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறோம்.  காஷ்மீர் மிக அழகாக உள்ளது. அதைவிட இங்குள்ள மனிதர்கள் அற்புதமானவர்களாக இருக்கிறார்கள். நன்றி” என்று மோர்லி கூறினார்.

பின்னர் மோர்லி மற்றும் மூன்று அழகிகளும், ஜம்மு காஷ்மீர் கவர்னர் மனோஜ் சின்காவை சந்தித்தனர். தொடர்ந்து காஷ்மீரின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று அங்குள்ள சுற்றுலா தலங்களை பார்வையிட்டனர்.

தனது பயணம் குறித்து உலக அழகி கரோலினா பைலாவ்ஸ்கா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “இந்தியாவின் இந்த அழகிய பகுதியை பார்க்க எனக்கு வாய்ப்பு கிடைத்ததற்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். காஷ்மீரில் மிகவும் அழகிய இயற்கை காட்சிகளை காண முடியும் என்று எனக்கு தெரியும். ஆனால், நான் இன்று  பார்த்தது என் மனதை திகைப்படைய செய்துவிட்டது. 140 நாடுகளையும், என் நண்பர்கள், குடும்பத்தினரையும் இந்தியாவிற்கு அழைத்துவந்து, காஷ்மீரை காண்பிக்க நான் மிகுந்த ஆவலுடன் உள்ளேன்” என்று தெரிவித்தார்.

மேலும் பாஜிராவ் மஸ்தானி, பத்மாவத் போன்ற பிரம்மாண்ட படங்களின் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலியை சந்தித்ததாகவும், நடிகர் ஷாருக்கானுடன் நடிக்க ஆசையாக இருப்பதாகவும் பைலாவ்ஸ்கா தெரிவித்தார்.

1951 ஆண்டு முதல் நடைபெற்று வரும் உலக அழகிப் போட்டியில் இதுவரை இந்தியாவைச் சேர்ந்த ரீட்டா ஃபரியா (1966), ஐஸ்வர்யா ராய் (1994), டயானா ஹெய்டன் (1997), யுக்தா முகே (1999), பிரியங்கா சோப்ரா (2000), மற்றும் மனுஷி சில்லர் (2017) ஆகிய 6 பேர் உலக அழகி பட்டம் வென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கிறிஸ்டோபர் ஜெமா

சாலையோர உணவகங்களுக்கு புதிய உத்தரவு: போக்குவரத்துத்துறை அதிரடி!

தேனாம்பேட்டையில் குடிநீர் நிறுத்தம்: அவசர தேவைக்கு என்ன செய்வது?

 

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *