நெல்லை தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் ஹோட்டலில் வேலைபார்த்தவர்களிடம் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில், தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்றம் இன்று (ஏப்ரல் 18) உத்தரவிட்டுள்ளது.
நெல்லை தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடும் ராகவன் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கில், “தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பிடிபட்டது தொடர்பாக நயினார் நாகேந்திரன் மீது சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமலாக்கத்துறையிடம் புகார் அளித்தேன். ஆனால், நடவடிக்கை எடுக்கவில்லை.
மேலும், இந்த விவகாரத்தில் அவரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று தலைமை தேர்தல் ஆணையரிடம் புகாரளித்தேன். அந்த மனு மீதும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே நயினார் நாகேந்திரனை தகுதி நீக்கம் செய்ய தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபூர்வலா அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது தேர்தல் ஆணையம் தரப்பில், “பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் உதவியாளர்களிடம் ரூ.4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக குற்றவழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் புலன் விசாரணை நடைபெற்று வருகிறது. பணம் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக வருமான வரித்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
வருமான வரித்துறையின் விசாரணை அறிக்கையின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டது.
இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், பணம் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
Anbe Vaa: திருமண பந்தத்தில் இணைந்த விராட்… குவியும் வாழ்த்துகள்!
பாஜக – ஆர்எஸ்எஸ் இந்தியாவின் கருத்தியலுக்கு எதிரானவர்கள்: ராகுல் காட்டம்!