சிறப்புப் பத்தி: தூத்துக்குடியில் காலனிய அரசியல் எதிரொலி!

அரசியல் சிறப்புக் கட்டுரை

முரளி சண்முகவேலன்

லண்டனிலிருந்து முரளி சண்முகவேலன் எழுதும் தொடர்

இந்தப் பத்தியின் அடிநாதம் காலனியத்தின் கருத்தியல் பண்புகள் சமகாலத்தில் வேரூன்றியிருப்பதைப் பற்றியதாகும். இப்பத்தியின் ஆரம்பத்தில் பிரிட்டனின் இளவரசர் ஹாரியும், ஆப்பிரிக்க அமெரிக்க நடிகர் மற்றும் பெண்ணியவாதி மேகன் மார்க்கிளும் தங்களது திருமண அறிவிப்பை பிபிசியில் வெளியிட்டபோது,மார்க்கிளிடம் அவர் அணிந்து கொண்டிருந்த திருமண நிச்சய மோதிரம் பற்றிக் கேள்வி கேட்கப்பட்டது பற்றி எழுதியிருந்தேன். தற்போதைய இளவரசி மேகன் மார்க்கிள், [மிக்க பெருமிதத்துடன்](https://www.bbc.com/news/av/uk-42146147/how-prince-harry-designed-meghan-s-ring), தனது வருங்காலக் கணவரே வைரங்களைத் தேர்ந்தெடுத்ததாக அப்பேட்டியில் கூறினார். இளவரசர் ஹாரி, இந்த மோதிரத்தின் பிரதான வைரக்கல் போட்ஸ்வோனாவின் சுரங்கத்திலிருந்து தருவிக்கப்பட்டதாகக் கூறினார்.

அங்கே தொடங்கிய இப்பத்தி பிரிட்டனுக்கு உள்ளே இன்றளவும் உயிரோடு இருக்கும் காலனிய அரசியலைப் பற்றியும் அதற்கு எதிர்வினை செய்த இரண்டு தமிழர்களைப் பற்றியும் தொட்டுச் சென்றது. பின்னர் காலனிய அரசியலின் சமகால ஆதரவுகளைப் பற்றிப் பேசும் போது அதற்கு ஆதரவான உள்ளூர் குரல்கள்,காலனியப் பண்புகளுக்கு ஆதரவாக உள்ள சமகால பன்னாட்டு வர்த்தக கோட்பாடுகளைப் பற்றியும் பேசியது. அதன் ஒரு முக்கியப் பகுதியும் உதாரணமுமே ஜாம்பியாவைமுன் வைத்த சுரங்க அரசியல்.

Echoes of colonial politics in Tuticorin - Murali Shanmugavelan

காலனியத்தில் ஆணாதிக்கக் கூறுகள்

காலனியக் கொள்கை என்பது ஆணாதிக்கத்தின் அமைப்புகளை அடியொத்தது. ஆணாதிக்கத்தின் அமைப்புகளும் பண்புகளும் ஆண்களால் மட்டுமே பாதுகாக்கப்படுவது கிடையாது. பெண்களும் பெருவாரியான அளவில் ஆணாதிக்கப் பண்புகளைப் போற்றுவதும் உண்டு. உதாரணமாக இன்றைய அரசியல் கார்ப்பரேட் உலகங்களில் ‘ஆண்’ தன்மையோடு இயங்கும் பெண்களை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். அதே போன்று சம கால காலனியப் பண்புகளை வெள்ளையரல்லாதோரும் பின்பற்றிவருகின்றனர் என்பதே உண்மையாகும். வளரும் நாடுகளில் உள்ள செல்வந்தர்களும் தொழிலதிபர்களும் இதற்கு உதாரணம்.

இந்தியா போன்ற நாடுகளில் சாதிய அடுக்குகளும் இதனோடு சேர்ந்துவிடுவதை நாம் பார்க்கலாம். அதனாலேயே கிட்டத்தட்ட அனைத்து இந்தியத்தொழிலதிபர்களும் மேல் சாதியைச் சேர்ந்தவர்களாக உள்ளனர். வளரும் நாட்டில் உள்ள அரசியல் தரகர்களுக்கும் காலனியக் கருத்தியல் அவர்கள் வாழ்க்கையை சுகபோகமாக வைக்க ஏதுவாக உள்ளது. உதாரணமாக ஜாம்பியாவில் உள்ள கறை படிந்த அரசியல்வாதிகள்.

இந்தியாவிலிருந்து சென்று லண்டன் வழியாக இன்று பல இடங்களில் சுரண்டல் செய்யும் வேதாந்தாவின் கேசிஎம் (கொன்கொலா செம்புச் சுரங்கம்) போன்ற சுரங்க நிறுவனங்கள். எல்லோரும், காலனியப் பண்புகளினால் பயன் பெறுபவர்கள். இதன் அடிப்படையிலேயே, போன வாரப் பத்தியின் இறுதியில் இப்படி முடித்திருந்தேன்:

“உலகமயமாக்கலில் ஒரு தேசத்தின் தொழில் வளர்ச்சி பற்றி மட்டும் பேசுபவர்கள் எல்லாம் நிதி ஆண்டறிக்கை பற்றி அக்கறை கொண்டவர்கள். நிலையான வளர்ச்சி மற்றும் வளங்குன்றா முன்னேற்றம் பற்றி கவலைப்படுபவர்களே மக்கள், சுற்றுப்புற சூழல், கழிவு உள்ளூர் வாழ்வாதாரம் பற்றி குரல் எழுப்புகின்றனர்.

வேதாந்தாவின் இந்த மாடல் ஜாம்பியாவுக்கு மட்டுமல்ல: உலகம் முழுதும் உள்ள அவர்களின் பல தொழிற்சாலைகளுக்கும் பொருந்தும். தமிழ்நாட்டில் உள்ள தூத்துக்குடி உள்பட.”

Echoes of colonial politics in Tuticorin - Murali Shanmugavelan

லாப – நட்டத்தில் மட்டுமே கண்!

நிதி அறிக்கையின் – அதாவது லாப நட்ட – அடிப்படையில் மட்டுமே ஒரு நிறுவனம் இயங்குவது என்பது காலனியத் தொழில் பண்பாகும். இப்பண்பு தற்போதைய தொழில் உலகின் மாற்ற முடியாத விதியாக ஆகிவிட்டது. லாப நட்டம் மட்டுமே ஒரு பன்னாட்டு நிறுவனத்தை நிலை நிறுத்துகிறது. மேற்குலகம் இவ்வாதத்தில் உள்ள பிரச்சினையை முற்றுமாகப் புறக்கணிக்கவில்லை என்பது உண்மை. ஆனால் லாப நட்ட மாடலை விட்டு உலகமெங்கும் உள்ள கார்ப்பரேட்டுகள் வெளிவரவில்லை என்பதும் உண்மையாகும்.

கொஞ்சம் கொஞ்சமாக சமூக நல அரசுகளின் பொதுத்துறை நிறுவனங்களின் மேல் இந்தக் கொள்கையானது திணிக்கப்படுகிறது. அரசின் பிடியிலிருந்து வெளி வந்து தனியார் நிறுவனமாக ஒரு துறை பரிமளிக்கப்படுவதை, அரசின் அடக்கு முறையில் இருந்து விலகி குடிமக்கள் கருத்துச் சுதந்திரத்துடன் இயங்குவதற்கு சமானமாகப் பார்க்கப்படுகிறது. பொதுத்துறை நிறுவனங்கள், மக்களுக்கான பொது மருத்துவம், விவசாயம், பல்கலைக்கழகங்கள், ஆரம்பப் பள்ளிகள் எல்லாம் தனியார் மயக்காப்பட்டதற்கான வாதம் எல்லாம் இப்படியானதே. அதாவது தனியார்மயமாக்கமானது அரசின் பிடியிலிருந்து விலகி குடிமக்கள் சுதந்திரமாக – அதாவது, ஒரு ஜனநாயக மாண்பாக – செயல்படுவதின் அடையாளமாக கற்பிக்கப்படுகிறது.

உதாரணமாக, இன்றைய பிரிட்டனில் மருத்துவம் என்பது அனைவருக்கும் இலவசமானது: இதை மாற்ற முயற்சி நடக்கிறது, ஆனால் எளிதல்ல. ஆனால் இந்தியாவில் பொது மருத்துவம் (public health) முழுக்க முழுக்க வியாபாரம் ஆக்கப்பட்டுவிட்டது. இதனால் பயன் பெறுவது உள்ளூர் முதலாளிகள், பணம் சேர்க்கும் மருத்துவர்கள், பன்னாட்டு மருத்துவர்கள் மற்றும் மருந்து நிறுவனம் மட்டுமே. இதே உதாரணம் சுரங்க அரசியலுக்கும் பொருந்தும்.

ஜாம்பியாவின் சுரங்கத் தனியார்மயமாக்கலினால் பயன் பெறுவோர் மேற்கத்திய நாடுகள், உள்ளூர் முதலாளிகள், கறைபடிந்த அரசியல் தரகர்கள் ஆகியோர். உள்ளூர் தொழிலாளர்களுக்குப் பசியாறும் வகையில் ஏதாவது கிடைக்கும். ஆனால் அது மட்டுமே கிடைக்கும். அவர்களின் அடிப்படை உரிமைகள்,வாழ்வாதாரத்திற்கான உறுதிகள் எதுவும் கிடைக்காது. இத்தொழிலதிபர்களுக்கு உள்ளூர் நிலை பற்றியோ வாழ்வாதாரம் பற்றியோ எந்தக் கவலையும் இருக்காது. இவர்களின் கவலை எல்லாம் தேச வளர்ச்சி என்ற பொய்யான வாதம் மட்டுமே.

Echoes of colonial politics in Tuticorin - Murali Shanmugavelan

உதாரணமாக தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதற்குப் பின் அந்த ஆலையைச் சுற்றி உள்ள காற்றின் மாசு குறைந்துள்ளதாகத் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு ஒரு ஆய்வறிக்கை அளிக்கப்பட்டதாக ஃபாய்ல் வேதாந்தாவின் சமரேந்திர தாஸ் தெரிவித்தார் . குறிப்பாக ஸ்டெரிலைட்டின் சுற்றுப்பகுதியில் உள்ள காற்றில் சல்ஃபர் ஆக்ஸைட் மிகவும் குறைந்துள்ளதாக இந்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

ஸ்டெர்லைட் ஆலைக்கெதிரான போராட்டம் 1994 முதல் அரசியல் களத்தில் சில அரசியல் கட்சிகளால் நடத்தப்பட்டாலும் அது மக்கள் போராட்டமானது மார்ச் 23, 2013ஆம் ஆண்டு நிகழ்ந்த வாயுக் கசிவுக்குப் பின்னராகும். இந்த வாயுக் கசிவு நம்மில் எத்தனை தமிழர்களுக்கு நினைவில் இருக்கும்? அந்த நாள் தூத்துக்குடி நகரவாசிகள் அனைவரும் இந்த வாயுக் கசிவினால் மூச்சுத்திணறினர். இந்தப் பேரிடருக்குப் பின்னரே வேதாந்தாவிற்கு எதிரான போராட்டம் மக்கள் இயக்கமானது என்றால் மிகையல்ல. ஜாம்பியாவில் உள்ள கேசிஎம்மிற்கு எதிரான மக்கள் இயக்கத்திற்கும், தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிராகத் திரண்ட மக்களுக்கும் ஒரு பொது எதிரி: வேதாந்தா.

வேதாந்தா போன்ற நிறுவனங்களின் பின் ஆணிவேராக இருப்பது இன்றைய பன்னாட்டு வர்த்தகக் கொள்கைகள். இக்கொள்கைகள் மேற்குலகின் காலனியப் பண்பினால் வளர்க்கப்பட்டது.

ஆனால் எல்லாம் மோசமில்லை. வேதாந்தாவின் இந்த குறைபாடுள்ள தொழில் செயல்பாடுகள் லண்டனிலும் எதிரொலித்தது. குறிப்பாக உலகமயமாக்கல், தொழில் வளர்ச்சி குறித்து ஆதரவான கருத்து தெரிவித்துவரும் பொருளாதார உலகில் செல்வாக்குள்ள பத்திரிக்கையான ஃபைனான்சியல் டைம்ஸ் வேதாந்தாவின் சுற்றுப்புறச் சூழல் கேடு குறித்து ஒரு பக்கக் கட்டுரையை (தாமதமாக) வெளியிட்டது. மிகக் குறிப்பாக லண்டன் பங்குச் சந்தையிலிருந்து வேதாந்தா சத்தமில்லாமல் வெளியேறியது.

கட்டுரையாளர் குறிப்பு: முரளி ஷண்முகவேலன்

Echoes of colonial politics in Tuticorin - Murali Shanmugavelan

[முரளி ஷண்முகவேலன்](https://mobile.twitter.com/muralisvelan) – ஊடக மானுடவியல் ஆய்வாளர் – லண்டன் பல்கலைக்கழகம் – ஸ்கூல் ஆஃப் ஓரியண்டல் & ஆஃப்ரிக்கன் ஸ்டடீசில் , சாதி மற்றும் தகவல்தொடர்பு குறித்து ஆய்வு மேற்கொண்டிருப்பவர்.

(தொடரின் அடுத்த பகுதி வரும் புதன்கிழமை…)

முந்தைய கட்டுரைகளைப் படிக்க:

கட்டுரை 1: [பிரிட்டனின் இளவரசர் திருமணம் சொல்லும் செய்தி என்ன?]

கட்டுரை 2: [விண்ட்ரஷின் குழந்தைகள் சொல்லும் பாடம் என்ன?]

கட்டுரை 3: [காலனியமும் சேவை நிறுவனங்களும்]

கட்டுரை 4: [காலனியத்துக்கு ஆதரவான சமகாலக் குரல்கள்]

கட்டுரை 5: [சாம் செல்வன்; டரினிடாட் தமிழர்]

கட்டுரை 6: [சிறப்புப் பத்தி: நிழல் உலக அறிவுஜீவி சிவானந்தன்]

கட்டுரை 7: [ஈழ அரசியலும் காலனியத்துவமும்]

கட்டுரை 8: [கலைஞரும் காலனியமும்]

கட்டுரை 8: [காலனியத்தின் வித்துக்களும் விளைவுகளும்!]

கட்டுரை 9: [எல்லைப் பாதுகாப்பும் காலனியமும்]

கட்டுரை 10: [சிறப்புப் பத்தி: சுவர் சொல்லும் பாடம்]

கட்டுரை 11:[உலோகமும் காலனியமும்]

கட்டுரை 12: [சிறப்புப் பத்தி: காப்பர் காலனியம்]

கட்டுரை 13: [இன்றைய உலகில் செம்பு]

கட்டுரை 14: [செம்புச் சுரண்டல்]

கட்டுரை 15: [சுரங்கக் குத்தகை]

கட்டுரை 16: [இயற்கை வளங்களின் உண்மையான விலை!]

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *