விஜய் யாருனே எனக்கு தெரியாது: துக்ளக் குருமூர்த்தி

அரசியல்

உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் குறித்த ’அஜய் டூ யோகி ஆதித்யநாத்’ எனும் புத்தக வெளியீட்டு விழா சென்னை சேத்துபட்டில் இன்று (ஜூன் 27) நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த துக்ளக் பத்திரிகையின் ஆசிரியர் குருமூர்த்தி விஜய்யை பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்று கூறியுள்ளார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், “எல்லா கட்சியிலும் நல்லவர்கள் இருக்க முடியும். நல்லவர்கள் அரசியலில் இருக்கிறார்கள் என்று சொன்னால் தான் குழந்தைகளுக்கும் கூட அரசியல் பற்றி ஒரு நல்ல புரிதல் வரும்.

அஜய் டூ யோகி ஆதித்யநாத் போன்ற புத்தகங்கள் வெளிவருவது நல்லது. இதை நான் பாஜக என்பதற்காக சொல்லவில்லை. எல்லா கட்சியிலும் நல்லவர்கள் இருந்திருக்கிறார்கள். காமராஜர் பற்றி ஏன் குழந்தைகள் படிக்கும் படியான புத்தகத்தை யாரும் போடவில்லை? காமராஜர் பற்றிய புத்தகங்கள் எல்லாம் வயதானவர்கள் படிப்பதை போன்று தான் உள்ளது” என்று கூறினார்.

அப்போது,”விஜய் அரசியலுக்கு வருவது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?” என்று செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த குருமூர்த்தி,” எனக்கு அவரை பற்றி தெரியாது. சினிமாவே எனக்கு தெரியாது…விஜய்யை பற்றி எப்படித் தெரியும்” என்றார்.

விஜய் அரசியலுக்கு வருவதற்கு முன்னரே திருமாவளவன் எதிர்ப்பு தெரிவிக்கிறாரே என்ற கேள்விக்கு ,“என்னை பொறுத்தவரை தமிழ்நாட்டில் இனிமேல் சினிமாவில் இருந்து வரும் ஒருவர் அரசியலில் வெற்றி அடைய முடியும் என்று நான் நினைக்கவில்லை. நான் சொல்வது தவறாகக் கூட இருக்கலாம்”என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், ”திமுகவில் முப்பது ஆண்டுகளாக எம்ஜிஆர் ரசிகர் மன்றம் இருந்தது. அவர்களுக்கு திமுக உடன் சேர்ந்து வேலை செய்ததால் அரசியல் என்றால் என்னவென்று தெரிந்தது. அதனால் திமுகவிற்குள்ளே அப்போது அதிமுக இருந்தது.

ஒரு கூட்டத்தை ஒரு அமைப்பாகவோ அல்லது ஒரு கட்சியாகவோ மாற்ற முடியாது. பாட்னாவில் கூடியது ஒரு கும்பல். அது கூட்டணியாக மாறுமா என்பதே ஒரு கேள்விக் குறிதான். 15 பேர் சேர்ந்தே ஒரு கூட்டணி உருவாகுமா என்பது சந்தேகமாக உள்ள போது 10 லட்சம் பேர் இணைந்து ஒரு கட்சியாக உருவாவது எவ்வளவு பெரிய கஷ்டம் என்பது உங்களுக்கு தெரியும்.

அதனால் விஜயின் இந்த முயற்சிகள் எல்லாம் பெரிய அளவிற்கு வெற்றி அடையாது. ஒரு கட்சி என்பது கொள்கையின் அடிப்படையில் முன்னேறி வருவதற்கு இருபதில் இருந்து முப்பது வருடங்கள் ஆகும். திமுக, காங்கிரஸ், பாஜக போன்ற கட்சிகள் எல்லாம் அப்படித்தான் வந்தது.

இதெல்லாம் மனதை கொஞ்சம் கொஞ்சமாக இணைத்து ஒரு கட்சி உருவாவது. அதில் பல நிலைகளில் தலைவர்கள் தயாராவார்கள்.

இது போன்று எல்லாம் இல்லாமல் ஒரு கும்பலை வைத்து கொண்டு திடீரென ஆட்சியை பிடிப்பேன் என்று ஒருவர் சொல்வாரேயானால் அவருக்கு எவ்வளவு தன்னம்பிக்கை இருக்கும் என்று தான் சொல்ல வேண்டும்” என்றார்.

”ரஜினி பாஜகவின் பின்னணியில் இருந்து வருவதால் தான் அவரால் சோபிக்க முடியவில்லை என்ற பிம்பம் உருவாக்கப்பட்டது. அதனால்தான் அவர் அரசியலுக்கு வராமல் திரும்பி சென்று விட்டார். ஆனால் விஜய் அப்படி ஒரு பிம்பமே இல்லாமல் வெளியில் வருவதால் நீங்கள் சொல்வது முரணாக இருக்கிறதே” என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த குருமூர்த்தி,” நான் சொல்வதில் எந்த முரணும் இல்லை. ரஜினிக்கும் இதே பிரச்சனை தான். ஒரு கும்பலை கட்சியாக மாற்றுவது எவ்வளவு பெரிய சிரமம் என்பதை ரஜினியும் புரிந்துகொண்டிருந்தார். என்னுடைய அனுபவத்தில் சொல்கிறேன் ஒரு கும்பலை கட்சியாக மாற்றுவது கடினம்” என்றார்.

மேலும், இலாகா இல்லாத அமைச்சர் குறித்த கேள்விக்கு,”ஸ்டாலினுக்கு மெஜாரிட்டி இருக்கிறது. அதனால் அவர் இலாகா இல்லாத நான்கு அமைச்சர்களை கூட வைத்துக்கொள்ள முடியும் தற்போது ஒருவரை வைத்திருக்கிறார் அதில் என்ன தவறு?” என்றார்.

மு.வா.ஜெகதீஸ் குமார்

”கோலிக்காக உலகக் கோப்பையை வெல்ல வேண்டும்”- சேவாக்

மோடியிடம் கேள்வி கேட்ட பெண் பத்திரிகையாளருக்கு மிரட்டல்: அமெரிக்கா கண்டனம்!

+1
0
+1
3
+1
0
+1
2
+1
1
+1
0
+1
0

1 thought on “விஜய் யாருனே எனக்கு தெரியாது: துக்ளக் குருமூர்த்தி

  1. அது என்ன கும்பல்………. சினிமாவிலிருந்து வந்தா மாநிலம் அமைதியாக இருக்கும் நீ சொல்லுவது போல் கும்பல் வந்தா மாநிலத்தில் பிரச்னை தான் வரும்… பிஜேபி கூட்டம் ஒரு தீவிரவாதி கும்பல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *