ஆளுநருக்கு எதிராக தீர்மானம் : குருமூர்த்தி வெளியிட்ட பகீர் தகவல்

Published On:

| By christopher

ஆளுநர் உரைக்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்தால், அந்த அரசாங்கம் ராஜினாமா செய்ய வேண்டும் என்று துக்ளக் பத்திரிகையின் ஆசிரியர் குருமூர்த்தி கூறியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு சட்டமன்றத்தில் இந்தாண்டின் முதல் கூட்டத்தொடர் கடந்த 9-ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. அப்போது ஆளுநர் ஆர்.என்.ரவி, தனது உரையில் திராவிட மாடல், சமூக நீதி, சமூக நல்லிணக்கம், அமைதி பூங்கா, பெரியார், அம்பேத்கர் ஆகிய வார்த்தைகள் இடம்பெற்ற சில பகுதிகளை படிக்காமல் தவிர்த்தார்.

ஆளுநர் அறிக்கை வாசித்து முடித்ததும், அவருக்கு எதிராக முதல்வர் ஸ்டாலின் உடனடியாக தீர்மானம் கொண்டு வந்தார். அந்த தீர்மானத்தை முதல்வர் வாசித்துக் கொண்டிருக்கும் போதே, ஆளுநர் ஆர்.என்.ரவி பேரவையில் இருந்து வெளியேறினார். இது தமிழ்நாடு அரசியல் வரலாற்றில் நடந்த மிகப்பெரும் சர்ச்சைக்குரிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மியூசிக் அகாடமியில், துக்ளக் பத்திரிகையின் 53-ஆவது ஆண்டு நிறைவு விழா நேற்று முன்தினம் (ஜனவரி 14) நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், பாஜக தலைவர் அண்ணாமலை, பொன். ராதாகிருஷ்ணன், எச்.ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தீர்மானம் கொண்டு வந்தது தவறு

விழாவில் வாசகர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்து துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி பேசினார். அப்போது ஆளுநர் உரை மீதான முதல்வரின் தீர்மானம் குறித்து அவரிடம் கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்து அவர் பேசுகையில், “ஆளுநர் என்ன பேசுகிறாரோ அதுதான் உரை. இதில் ஏதேனும் மாற்றம் கொண்டுவர வேண்டுமானால், அவை விவாதத்தின்போது யாராவது தீர்மானம் கொண்டு வந்து, அதை, அவை ஏற்றால் மட்டுமே மாற்றம் செய்ய முடியும்.

அதேசமயம், ஆளுநர் உரையை ஏற்க மாட்டோம் என்று சொல்லி, அவரது உரையை விவாதிப்பதற்கு முன்னதாகவே தீர்மானம் கொண்டு வரமுடியாது. தவிர, ஆளுநர் உரைக்கு ஒப்புதல் அளிக்கவில்லை என்றால் அந்த அரசாங்கம் ராஜினாமா செய்ய வேண்டும். இதுதான் முறை.

பஞ்சாப் குருநாம் சிங் அரசு மற்றும் உத்தரப் பிரதேச சி.பி.குப்தா அரசு ஆகியவை மாநிலத்தில் ஆளுநர் உரைக்கு ஒப்புதல் அளிக்காமல் ராஜினாமா செய்திருக்கின்றன. ஆளுநர் உரைக்கு எதிராக தீர்மானம் கொண்டுவந்தால், அந்த அரசாங்கம் ஆட்சியில் இருக்க கூடாது.

ஆளுநர் உரைக்கு ஒப்புதல் அளிக்காமல் ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வந்தது தவறு. இப்படியொரு யோசனையை ஸ்டாலினுக்கு யார் சொல்லிக் கொடுத்தது என்பது தெரியவில்லை. இது ஒரு அரசியலமைப்பு விவகாரம். ஆகவே, இது நீதிமன்றத்துக்குச் செல்லும் என்று தெரிகிறது” என்று அவர் கூறியுள்ளார்.

அண்ணாமலைக்கு அனுபவம் வரட்டும்

இதுமட்டுமின்றி அண்ணாமலை – பத்திரிகையாளர்கள் மோதல் குறித்த கேள்விக்கு பதிலளித்த குருமூர்த்தி, ”அண்ணாமலையை பத்திரிகையாளர்கள் இம்சை செய்கிறார்கள் என்றால் அவர் வளர்ந்து வருகிறார் என்றுதான் பொருள். எதிர்ப்பில்தான் அனுபவம் வரும். கஷ்டப்பட்டால்தான் அனுபவம் வரும். எனவே அண்ணாமலைக்கு அந்த அனுபவம் வரட்டும். அவருக்கு தொடர்ந்து எதிர்ப்பு வரட்டும். அதை நான் வரவேற்கிறேன்.” என்று தெரிவித்தார்.

பெண்கள் குடும்பத்தை கவனிக்க வேண்டும்

அரசியலில் பெண்கள் இடஒதுக்கீடு குறித்து பேசுகையில், ”பெண்கள் அரசியலுக்கு வருவது தவறில்லை. ஆனால் இத்தனை சதவிகிதம் என வகுக்க முடியாது. இவ்வளவு இடங்கள் கட்டாயம் கொடுக்க வேண்டும் என இருந்தால், அரசியலில் தகுதி இல்லாதவர்களும் நுழைய வாய்ப்புள்ளது. ஏனென்றால் தற்போது அரசு அலுவலகங்களில் பெண் அதிகாரிகள் லஞ்சம் கேட்டு டிமாண்ட் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் பெண்கள் குடும்பத்தை கவனிக்க வேண்டிய பொறுப்பு உள்ளது. பெண்கள் குடும்பத்தை கவனிப்பது நம் நாட்டு பொருளாதார வளர்ச்சிக்கு உதவுகிறது.” என்று அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு அந்த நிகழ்ச்சியில் குருமூர்த்தி சர்ச்சைக்குரிய வகையில் பேசிய காணொலிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

கிறிஸ்டோபர் ஜெமா

அதிமுக, பாஜகவினருக்கு திமுகவின் பொங்கல் பணம்!

திருவள்ளுவர் புகழ்பாடிய பிரதமர், ஆளுநர்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Comments are closed.

Share