தென்காசிக்கு முதல்வர் வெளியிட்ட புதிய அறிவிப்புகள்!

அரசியல்

தென்காசி மாவட்டம் உதயமான பிறகு முதன்முறையாக சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நலத்திட்டங்களை வழங்கியதுடன், அந்த மாவட்டத்திற்கு புதிய அறிவிப்புகளையும் வெளியிட்டு இருக்கிறார்.

தென்காசியில் நலத்திட்ட உதவிகள் வழங்குவது மற்றும் முடிவுற்ற திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்றுள்ளார். தென்காசியை அடுத்த இலத்தூர் வேல்ஸ் வித்யாலயா பள்ளி மைதானத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் அவர் கலந்துகொண்டார்.

அப்போது பேசிய அவர், “தென்காசிக்கு வந்த உடன் மண்ணைப் போலவே மனதும் குளிர்ச்சி அடைந்துவிடுகிறது. எழில் கொஞ்சக்கூடிய மாவட்டம் தென்காசி மாவட்டம். அரசு விழாவா கட்சியின் மாநில மாநாடா என்கிற அளவுக்கு கூட்டம் இருக்கிறது.

கூட்டத்திற்கு ஏற்பவே வழங்கப்படக்கூடிய நலத்திட்ட உதவியும் பெரியதொகை தான். 22 கோடி 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 57 முடிவுற்ற திட்டப்பணிகளை துவக்கி வைத்திருக்கிறேன்.

34 கோடியே 14 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 23 புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டிருக்கிறது. 1 லட்சத்து 3508 பேர் பயனடையக் கூடிய வகையில் 182 கோடியே 56 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன.

ஒரே ஒரு விழாவில் 1 லட்சத்திற்கும் அதிகமான குடும்பங்கள் பயனடைய இருக்கிறார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். கழக ஆட்சி அமைந்து 19 மாதம் ஆகிறது.

இந்த 19 மாத காலத்தில் பல நூறு சாதனைகளை தமிழ்நாட்டு மக்களுக்கு செய்திருக்கிறோம் என்பதை சாதாரணமாக இல்லை, நெஞ்சை நிமிர்த்தி நான் உங்கள் முன்னால் தெரிவிக்கிறேன்.

இது வெறும் வாய் வார்த்தை அல்ல. பயனடைந்த மக்கள் இந்த அரசை வாழ்க, வாழ்க என்று வாழ்த்திக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த தென்காசி மாவட்டத்தில் உங்கள் முதல்வன் திட்டத்தின் கீழ் 11494 மனுக்கள் பெறப்பட்டு 11490 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு இருக்கிறது. மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கான 27 கோடியே 77 லட்சம் ரூபாய் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.

New announcements for the people of Tenkasi

இல்லம் தேடி கல்வி திட்டத்தின் கீழ் 41,980 மாணவர்கள் பயனடைந்து இருக்கிறார்கள். 436 கோடி ரூபாய் அளவுக்கு பயிர்க்கடன், நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டு இருக்கிறது.

உழவர்களுக்கு புதிய மின் இணைப்புத்திட்டத்தின் கீழ் 13 கோடி ரூபாய் செலவில் மின் இணைப்பு வழங்கப்பட்டு இருக்கிறது. இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். இந்த மாவட்டத்திற்கு வருவதற்கு முன்பு சில கோரிக்கைகள் வைக்கப்பட்டன. அதை நிறைவேற்றித் தருவதற்கான அறிவிப்பை வெளியிடுகிறேன்.

தென்காசி மாவட்டத்தின் முக்கிய இணைப்புச் சாலையாக விளங்கக்கூடிய புளியங்குடி – சங்கரன்கோவில் நெடுஞ்சாலை மேம்படுத்தப்படும். புதிதாக  அமைந்துள்ள தென்காசி மாவட்டத்துக்கு புதிய விளையாட்டு வளாகம் அமைக்கப்படும்.

துரைசாமிபுரம் மக்களின் நீண்டநாள் கோரிக்கையான பனையூர் – கூடலூர் – துரைசிங்கபுரம் சாலை மேம்படுத்தப்படும். தென்காசி – குற்றாலம் இடையே இருக்கக்கூடிய இலாத்தூர் பெரிய ஏரி ஒரு முக்கிய மீன்பிடி மற்றும் சுற்றுலாத்தலமாக 10 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்படும்.

ஆலங்குளத்தில் புதிய வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் அமைக்கப்படும். ஒவ்வொருவரின் கோரிக்கையை கேட்டு, கேட்டு நிறைவேற்றி தரக்கூடிய அரசாக திமுக இருக்கிறது.

இதனைப் பொறுத்துக் கொள்ள முடியாத எதிர்க்கட்சித் தலைவர், திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து எதையும் செய்யவில்லை என்று புலம்பிக் கொண்டு இருக்கிறார். பூனை கண்ணை மூடிக்கொண்டால் பூலோகம் இருண்டதாக நினைப்பதை போல எதிர்க்கட்சித் தலைவரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்.

ஆனால் தமிழ்நாட்டு மக்கள் 19 மாத காலத்திற்கு முன்பே விழித்துக் கொண்டார்கள். மக்களால் நிராகரிக்கப்பட்டவர்களின் எரிச்சல் வார்த்தைகளுக்கு எல்லாம் நாங்கள் பதில் சொல்ல முடியாது.

அரசியலில் நாங்களும் இருக்கிறோம் என்பதை காட்ட விமர்சித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் எங்களை நம்பி வாக்களித்த மக்களுக்கு நாங்கள் உண்மையாக இருக்கிறோம்” என்று மு.க.ஸ்டாலின் பேசினார்.

கலை.ரா

இமாச்சல்: எம்.எல்.ஏ.க்களை காப்பாற்ற காங்கிரஸின் மெகா திட்டம்!

மாண்டஸ் புயல்: இன்று மதியம் முதலே விடுமுறை!

+1
0
+1
0
+1
0
+1
3
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *